Enable Javscript for better performance
18. ஆடுதுறை ஆராமுதன்- Dinamani

சுடச்சுட

  

  18. ஆடுதுறை ஆராமுதன்

  By ஜே.எஸ். ராகவன்.  |   Published on : 20th December 2018 10:00 AM  |   அ+அ அ-   |    |  

  jews_-_sivasami

   

  ‘ஸ்வாமி, நீங்கதானே சிவசாமி? பஞ்சாமி வீடுதானே இது? நேம் போர்டு வலது பக்கம் இருந்தா நன்னா கண்ணிலே படும். இடப் பக்கம் இருக்கே?. வாசல்லே ஏன் மிதியடி காமா சோமான்னு போட்டிருக்கு? வழுக்கி விட்டுட்டா கபால மோட்சம்தான். இதோ பாருங்கோ, இப்படித்தான் போடணும். சரியா? காலிங் பெல் ஏன் ஜன்னி வந்த ஆஸ்த்துமாகாரன் மாதிரி முனகறது. கணீர்னு பெருமாள் கோவில் மணி மாதிரி முழங்க வேணாமா? மாத்துங்கோ’.

  வாசலில் வந்து நின்றவர், அசப்பில் கருடாழ்வார் மாதிரி இருந்தார். கண்கள் இங்கேயும் அங்கேயுமாகச் சுழன்றன. முகத்தை, கேள்விக் குறிகள் தேனடையாக அப்பிக்கொண்டிருந்தன.

  குழம்பிய சிவசாமி, ‘நீங்க, நீங்க..’

  ‘நீங்கறதாவது? நான் நீங்க வரலே. உள்ளே நுழையத்தான் வந்திருக்கேன். நீங்கதானே சிவசாமிங்கிற கேள்வி கேட்டு ரெண்டு நாழிகை ஆச்சு. ஆமா, இல்லேங்கிற பதிலைக் காணும்? மௌனம் சம்மதம்னு அர்த்தம். பஞ்சு, எழுந்தாச்சா? இன்னும் தூங்கறானா?’

  சுர்ரென்று சிவசாமிக்குக் கோபம் வந்தாலும், பணிவுடன் பதில் சொன்னான். ‘டாக்டர் பஞ்சாமி சார் காலம்பற அஞ்சு மணிக்கே எழுந்து, குளிச்சு இப்போ பூஜையிலே இருக்கார். உள்ளே வந்து உக்காருங்கோ. நீங்க யாருன்னு இன்னும் தெரிவிக்கலே?’

  ‘அட! அட! என்னோட பஞ்சு வீட்டிலேயே நான் விசிட்டிங் கார்டை நீட்டிண்டே நுழையணுமா? இல்லாட்டி, பஞ்சுவோட பால்ய சிநேகிதன் ஆடுதுறை ஆராமுதன் வரார், வரார்னு ஒரு ஆள் முன்னாலே டொம் டொம்னு எருது மேலே கட்டின டமாரத்தைக் கொட்டி, புவ்..வாய்னு ஊதி, அதிர்வேட்டு போட்டு அறிவிச்சுண்டு உள்ளே பிரவேசம் பண்ணணுமா? சிவசாமி, உங்க மூக்கிலே தோசை மாவு ஒட்டிண்டு இருக்கு. டீபாயிலே இருக்கிற இண்டு பேப்பருக்குள்ளேதான் சப்ளிமெண்ட் இருக்கணும். சப்ளிமெண்ட்டுக்குள்ளே மெயின் பேப்பர் இருக்கு. இப்படியா வெக்கிறது? ஒரு ஒழுங்கு வேணாம்?’

  அஞ்சா நெஞ்சன், திடசித்தன், பொறுமையின் உருவகம், பரமசாதுவான சிவசாமியே ஒரு கணம் ஆடிப்போனாலும் அசரவில்லை. ‘பெரியவா சொன்னதை எல்லாம் சரி பண்ணிடறேன். தீர்த்தம் கொண்டு வரட்டுமா? அதுக்கப்புறம் காபி? பால்? மோர்?’

  ‘எனக்கு பஞ்சுதான் வேணும். உம்ம கை விரலிலே மோதிரம் திரும்பி இருக்கு. அதை சரி பண்ணிக்கும். உள்ளே கத்தரிக்கா சாம்பாரா? கொதி வந்தாச்சு. இறக்கிடலாம். ஆமா பஞ்சு எங்கே ஐயா? அதை விட்டுட்டு, சாம்பார் வாசனையைக் காட்டி மயக்கறீர்? ஹும்?’

  ‘அடேய் சிவசாமி, வாசல்லே யாரு?’ என்ற கேள்வியுடன் வந்த பஞ்சாமியைப் பார்த்தவுடன், ஆராமுதுவின் முகம் ஃபீடிங் பாட்டிலைப் பார்த்த பாப்பா போல மலர்ந்தது.

  ‘டேய் பஞ்சு. எப்படிடா இருக்கே? பாத்து மாமாங்கம் ஆறது. ஏண்டா துரும்பா இருந்து தூணா இளைச்சுப் போயிட்டே? டாக்டர்னு பேரு. டயட்டெல்லாம் கிடையாதா?’

  ஆராமுதுவின் உற்சாகம் பஞ்சாமியிடம் தொற்றிக்கொண்டதாக சிவசாமிக்குத் தோன்றவில்லை.

  ‘யாரு? ஆராமுது மாதிரியும் இருக்கு. இல்லாத மாதிரியும் இருக்கு. எங்கடா, திடீர்னு. நீ சந்நியாசம் வாங்கிண்டு போயிட்டதா பேசிக்கறாளே?’

  ஆராமுது, பஞ்சாமியின் முதுகில் ஓங்கித் தட்டிவிட்டு, இடிஇடின்னு சிரித்தார். ‘எம் பொண்டாட்டி பெருந்தேவி கேட்டிருக்கணும். ‘நன்னாப் போகட்டும். நான் திவ்யமா இருப்பேன்னு’ சொல்வா. தமாஷெல்லாம் இருக்கட்டும். பஞ்சு உங்கிட்டே தனியா கொஞ்சம் பேசணும்?’

  ‘சந்நியாசத்தைப் பத்தியா?’

  ‘அட வாடா. போறும் தமாஷ்’.

  ‘சிவசாமி, அது என்ன பழமொழிடா. நுணலும் தன் வாயால் கெடும்தானே?’

  ‘ஆமாண்ணா, தப்பளைங்கிற, தவளை இருக்கே. சகதியிலே தேமேன்னு இல்லாம கொரக் கொரக்னு கத்தி, பாம்புக்கு வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கும். மாட்டிக்கும். அது மாதிரி..’

  ‘ஏண்டா, பாம்புக்குதான் காது கிடையாதே? எப்படி கொரக் கொரக் கேக்கும்? சரி, அந்த ஆராய்ச்சி எல்லாம் எதுக்கு, விடு. ஆராமுதோட மேட்டர் என்னன்னா. எல்லா விஷயத்திலேயும் மூக்கை நுழைச்சு மாட்டிக்கிறதே அவன் பழக்கமாச்சு. அப்படி செஞ்சு அவன் முதுகிலே டின் எல்லாம் கட்டியிருக்காங்களாம். ஆனா, பிறவி குணம் போகாதுங்கறான். ரெண்டாங் கிளாஸ் தவமணி டீச்சர்கிட்டே, ‘டீச்சர், நீங்க சவுரி வெச்சுண்டுதானே வர்றீங்க?’ன்னு கேட்டு, செவிட்டிலே அறை வாங்கின சத்தம் இன்னும் ஸ்கூல்ல எதிரொலிச்சிண்டு இருக்காம். இப்படி நிறைய சொல்லிண்டே போகலாம். இப்போ என்ன ஆச்சுன்னா..?

  ‘தவமணி மாதிரி, யாரான மனோன்மணி, காந்தாமணி, ராதாமணிங்கிற லேடீயை, ‘நீங்க சவுரி வெச்சிருக்கீங்களா’ங்கிற தலை போகற சந்தேகத்தைக் கேட்டு அறை வாங்கினாரா?’

  ‘டேய், டேய் இத்தனை குசும்பு ஆகாதுடா. ஆனா, போன வாரம் ஆராமுது ஒரு கல்யாண ரிசப்ஷனுக்குப் போனதாலே பிரச்னையில மாட்டிண்டுட்டானாம்’.

  ‘என்ன செஞ்சாராம், கல்யாணப் பொண்ணோட மாமியார்கிட்டே நீங்க சவுரி வெச்சிண்டு இருக்காங்களான்னு கேட்டாராமா?’

  ‘சிவசாமி! சவுரி சப்ஜெக்டை நிறுத்துடா! ரிசப்ஷன் மேடையிலே ஏறினவன், ஏதோ கை குலுக்கினோமா, கவருக்குள்ளே போட்ட ஆசீர்வாதப் பணத்தை, நம்ம சைடு பொண்ணு கையிலேயோ, மாப்பிள்ளை கையிலேயோ திணிச்சுட்டு, ‘சார், சார்’னு கெஞ்சற வீடியோ போட்டோ கோஷ்டிக்கு முன்னாலே பல்லைக் காட்டிட்டு கழண்டுக்க வேண்டியதுதானே. அதை விட்டுட்டு, என்ன பண்ணியிருக்கான் தெரியுமா?’

  ‘தெரியாது அண்ணா. சவுரின்னு நான் வாயைத் திறக்கறதுக்கு முன்னோலே நீங்களே சொல்லிடுங்கண்ணா’.

  ‘கல்யாண மாப்பிள்ளை, ஆராமுதுக்கு அக்கா பேரனாம். அவன் கையைப் பிடிச்சுண்டு, கல்யாணப் பொண்ணைப் பார்த்து, ‘ஏம்மா உம் பேரு சௌம்யாதானே? இந்த குமார் இருக்கானே, சின்ன வயசிலே என்ன கூத்தடிச்சிருக்கான் தெரியுமா? அதுவும், கீதான்னு ஒரு லேடி டீச்சர்கிட்டே அவன் செஞ்சதெல்லாம் சொல்லப்படாது. கௌரவமா இருக்காது. அவ்வளவு பொல்லாதவனா இருந்தான். அவன் மேலே எப்பவும் ரெண்டு கண்ணையும் வெச்சிண்டு இரு. வரட்டுமா? குமார், டை டபுள் நாட் சரியா இல்லேடா? யார் போட்டதுன்னு கேட்டுட்டு, டைனிங் ஹாலுக்குப் போனானாம்’.

  ‘அண்ணா, குமாரோட லீலைகளை கீதா டீச்சர் மீடூவா பதிவு பண்ணி இருக்காங்களா?’

  ‘தெரிலேடா. கல்யாணம் ஆன மறுநாளே, கல்யாணப் பொண்ணு சௌம்யா, லேடீஸ், அதுவும் டீச்சர் விஷயத்திலே நீ அவ்வளவு மோசமா? ஷாக்கிங்யா! நீ எனக்கு சரிப்பட்டு வரமாட்டே. டாட்டான்னு கையை ஆட்டிட்டுப் போயிட்டாளாம்’.

  ‘அட ராமா! அப்படியா போறது கதை. அதுக்கு ஆராமுது என்ன பண்ணப் போறாராம்? உபாயம் தேடி நம்மகிட்டே வந்திருக்காரா?’

  ‘கற்பூர மூளைடா உனக்கு. என்ன செய்யப்போறே?’

  ‘அண்ணா, சிக்கு ஏற்படுத்தறது சுளு. எடுக்கிறது பளு..’

  ‘அடேய்! ஏதோ ஒன்-லைனரா பஞ்ச்சோட இருக்கு. இதை சிவசாமி கிட்டேந்து நான் எதிர்பார்க்கலே’.

  ‘அண்ணா, even Homer nods-னு சொல்றதுண்டு. வரேன்’. 

  *

  அடுத்த வாரம், ஆராமுதன் பரவசத்துடன் கொண்டுவந்த ஸ்பெஷல் புளியோதரை, அக்காரஅடிசலை பஞ்சாமி ஒரு கை பார்த்துக்கொண்டு, சிவசாமி மேலே ஒரு குளிர்ந்த பார்வையைப் பரவவிட்டார்.

  ‘ஆராமுதுவோட நன்றிக் கடன்டா. சௌம்யா - குமார் கூட்டணி இணைஞ்சிடுத்து. பொண்ணு வழிக்கு வந்துடுத்து. எப்படிடா? இந்தத் தீர்வையிலே உன் கைரேகை பதிஞ்சிருக்குமே? சொல்லுடா கேப்போம்’.

  சிவசாமி அடக்கத்துடன் நெளிஞ்சான்.

  ‘மேட்டர் உங்களுக்குத் தெரியும். ஆனா சௌம்யா, எனக்குத் தெரிஞ்ச கார்த்தி சாரோட பொண்ணுன்னு உங்களுக்குத் தெரியாது. அவகிட்டே பேச்சுவார்த்தை நடத்தினேன். குட்டிப் பையனா குமாரோட பால காண்ட லீலைகளைப் பெருசா எடுத்துண்டு, அவனோட கேரக்டர் மேலே தார் பூசக் கூடாதுன்னு வாதாடினேன். அதுக்கு அவள் மசியலே. கடேசியா, பிரம்மாஸ்திரத்தை எடுத்து விட்டேன். அது என்னன்னா, சௌம்யா குட்டிப் பொண்ணா இருந்தப்போ, எல்லார் நடுவிலேயும், கூடையிலே அவளோட கலர் கலர் ஜட்டி எல்லாம் நிரப்பி, தலைமேல தூக்கி வெச்சுண்டு ‘ஜட்டி! ஜட்டி!’ன்னு வித்த கதையை குமார்கிட்டே சொல்லிடுவேன்னு சொன்னேன். சௌம்யா ஷாக் ஆகி, ‘மை காட், உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அதை குமார்கிட்டே சொல்லிடுவேளா?’ன்னு கேட்டா. சொல்லமாட்டேன், ஆனா கண்டிஷன்ஸ் அப்ளைன்னேன். பொண்ணு புஸ்ஸுனு அடங்கிடுச்சு. தம்பதி ரெண்டு பேரும், இன்னிக்கு வடபழனி விஜயா ஃபோரம் மால் ஃபுட் கோர்ட்டிலே லஞ்ச் சாப்பிடப் போறாங்களாம். தன் சந்தோஷத்தை ஆராமுது சார் புளியோதரையிலும் அக்காரவடிசிலிலேயும் காட்டி இருக்கார்’.

  ‘அந்தக் குழந்தை ஜட்டி மேட்டரிலே அப்படி என்னடா விசேஷம்?’

  ‘ஒண்ணுமில்லே அண்ணா. ‘ஏம்மா, கூடையிலே, நீலம், பச்சை, மஞ்சக் கலர் ஜட்டி எல்லாம் இருக்கு. சிவப்புக் கலர் ஜட்டி இல்லையா?’ன்னு சௌம்யாவோட மாமா கேலியா கேட்டபோது, குழந்தை பரவசத்துடன் ‘தோ இருக்கே’ன்னு போட்டிண்டிருந்த ஃபிராக்கை..’

  ‘போறும்டா, சிவசாமி. கிராதகன்டா நீ’.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai