Enable Javscript for better performance
7. காது கிழிஞ்சுது போ!- Dinamani

சுடச்சுட

  
  jews_-_sivasami

   

  ‘கல்லூப், கல்லூப்’ என்று அமுக்கிய சத்தம் வந்தால் கல் உப்பு. கோமாவே, மொகுமாவே என்று மூதாட்டியின் குரல் கேட்டால், கோல மாவு, மொக்கு மாவு. ‘ஏஃபோ, ஏஃபோ’ என்றால் 80 GSM A4 பேப்பர் இல்லை. பழைய பேப்பர்! இதுபோன்ற காலை வியாபாரிகளின் சங்கேத விற்பனைக் கூவல்களை சிவசாமி மூலம் மந்திரோபதேசம் செய்யப்பட்டிருந்த பஞ்சாமி, அன்றும் இந்தக் குரல்கள், சரளி வரிசை, ஜண்டை வரிசையாக அவருடைய காக்ளியரைத் தாக்கியதும்பொழுது, புலர்ந்துவிட்டது என்று உணர்ந்து எழுந்தார். இரண்டு கைகளும் இருக்கின்றனவா என்று பார்த்துக்கொண்டார். சிக்கிமுக்கி கற்களைப்போலத் தேய்த்துவிட்டுக் கொண்டார்.

  சிவசாமி குளித்துவிட்டு துல்லியமாக இருந்தான். அவனிடமிருந்து சலவை வேட்டி, பழநி ஜவ்வாது விபூதி மற்றும் பீபெர்ரி காபி பொடி வாசனைகள் அவியலாகத் தவழ்ந்து வந்து பஞ்சாமியைப் பரவசப்படுத்தின.

  ‘சிவசாமி, ‘பொழுது புலர்ந்தது, நாம் செய்த தவத்தால்’னு பாட்டு ஒண்ணு இல்லே? யாருடா எழுதினது? என்ன ராகத்திலே பாடணும்டா?’

  ‘மகாகவி பாரதி எழுதியது அண்ணா. பூபாளத்திலே பாடணும். ‘நாம்’ இல்லை அண்ணா ‘யாம்’. அடிமைத்தனம் என்னும் உறக்கத்திலிருந்து பாரதமாதாவை எழுப்புவது அண்ணா. இன்னிக்கு சனிக்கிழமை ஆச்சே. எம்.எஸ்.ஸின் சுப்ரபாத சிடியை ஆன் பண்ணட்டுமா?’

  ‘சித்த இருடா. குப்பை வண்டி வந்துபோற நேரம் இல்லே? அது போகட்டும்’ என்று சொல்லி முடிக்கும்முன், தார் போடும் இன்ஜினை உச்ச ஸ்தாயிக்குத் திடீரென்று தூக்கியதுபோல சிங்கமாக கர்ஜித்து, தெருமுனைத் தொட்டியிலிருந்து குப்பைகளை, ஹைட்ராலிக் விசை மூலம் தூக்கி வயிற்றில் வாங்கிக்கொண்ட லாரி, மேலும் சில உபரி ஆர்ப்பாட்டங்களுடன் கிளம்பியது.

  ‘அடுத்ததா ஸ்கூல் வேன் வரணுமேடா. எதிர் ஃபிளாட் மஞ்சு ரப்பர் பந்தாட்டம் குதிச்சு ஓடிவர வரைக்கும் ஹாரன் மேல ஏறி நின்னு டிரைவர் கதி கலக்குவாரே’.

  ‘இன்னிக்கு வராது. சனிக்கிழமை ஆச்சே’.

  ‘பிழைச்சேன். சனிக்கிழமைன்னா அடுத்த வீட்டு பக்திமான் தன்னோட ஒன் மேன் அகண்ட பஜனையை ஆரம்பிச்சு விடுவாரேடா. அவர் முருக பக்தரா இருந்துட்டுப் போகட்டும். ஆனா குரல் மாட்சிங்கா லாரிங்கைடிஸ் வந்த கோல மயிலாகவா இருக்கணும்?’

  ‘அவர் பத்து நாள் யாத்ரா ஸ்பெஷலில் காசி, கயாக்கு தீர்த்த யாத்திரை போயிருக்காராம்’.

  ‘அப்பா. நிம்மதி. எம்.எஸ். சிடியை ஆன் பண்ணுடா’.

  திடீரென்று, ‘தீப்பிடிக்க.. தீப்பிடிக்க.. முத்தம் கொடுடா..’ என்று பெப்பியாக வாசலில் வந்து நின்ற ஆட்டோவிலிருந்து வந்த பாட்டைக் கேட்டு கடுப்பாகி, பஞ்சாமி காலைக் கடன்களை முடிக்கப்போகிறார்.

  டாக்டர் பஞ்சாமிக்கு சப்தங்கள் என்றால் எப்பவுமே அலர்ஜி. அமைதிப் பூங்காவாக இருந்த தெருவிலிருந்து இவ்வளவு சத்தமா?

  ‘சிவசாமி, நாம காட்டாங்கொளத்தூர் போயிடலாம்டா. என்னாலே இந்த அட்டாக்கை தாங்க முடியலே’.

  ‘அப்படியே செஞ்சுடலாம் அண்ணா’.

  ‘சிவசாமி, பப்ளிஷர்கிட்டேந்து தகவல் வந்ததா?’

  ‘D.T.P.-க்கு குடுத்திருக்காராம். ப்ரூஃப் அடுத்த வாரம் கிடைக்குமாம்’.

  ‘எழுபதிலும் எழுந்து ஓடலாம்’ என்கிற தலைப்பில் ஒரு கனத்த புத்தகத்தை டாக்டர் பஞ்சாமி விவரமாக எழுதி முடித்திருந்தார். அந்த எழுத்துக் களைப்பு தீர பத்து நாள் ஜாலியா இருக்கப்போறேன் என்று அறிவித்து பேனாவை மூடிய அவர், காதுகளையும் இறுக மூட முடிந்தால் எவ்வளவு சுகமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டார்.

  ‘சிவசாமி, ‘மகர யாழ், மத்தளம், புல்லாங்குழல் ஒலி எல்லாம் எங்கேயோ மதுரமாக கேட்கும்’னு கம்பர் பாடி இருக்கார் இல்லையா? எந்த காண்டத்திலேடா?’

  ‘அது மட்டுமா? ‘வளை ஒலி, வயில் ஒலி, மகர ஓசையின் கிளை ஒலி, முழவு ஒலி, கின்னரத்து ஒலி, துளை ஒலி..’ன்னு பால காண்டத்திலே அண்ணா’.

  ‘கரெக்டா சொன்னேன் பாத்தியா? எந்தூர்லேடா அது?’

  ‘அயோத்யாலே அண்ணா’.

  ‘நாம அயோத்யா மண்டபம் பக்கத்திலேதானேடா இருக்கோம்? அதிலே டென் பெர்சன்ட்டான கேக்க வேணாமா? இல்லியே! இப்போ பார், ‘கீரைம்மா கீரே! அரக்கீரே, மொளக்கீரே, பாலக்கீரேய், பொன்னாங்கணிக்கீரேய்.. கீரேம்மா கீரே’ன்னு வந்து தாக்கறதேடா. அடுத்த மாசம் காட்டாங்கொளத்தூர் போயிடலாம். சரிதானே?’

  ‘பரம சந்தோஷம் அண்ணா’.

  அடுத்த மாதம் ஒரு விடியற்காலையில், டாக்டர் பஞ்சாமி நீண்ட காகிதத்தில் மான்ட் பிளாங்க் பேனாவில் பரபரவென்று எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார். எதிரில், தடிதடியான மருத்துவப் புத்தகங்கள். உபயம், கன்னிமாரா நூலகம்.

  ராட்சஸ குப்பை லாரி தன்னுடைய காலை வீதிப் புறப்பாட்டை வழக்கமான சப்த ஜாலங்களுடன் செய்துகொண்டு இருக்கிறது. அரக்கர்களின் இம்சைகளைக் காதில் வாங்காத முனிபுங்குவரின் தீவிரத்துடன் பஞ்சாமி எழுதிக்கொண்டிருக்கிறார்.

  மாதா மான்டிஸோரி வேன் டிரைவர், லேட்டாக வரும் ரஞ்சனியைத் துரிதப்படுத்த ஹாரனை வழக்கத்தைவிட நீளமாக அடிக்கிறான். அன்று சம்பள நாள். ஆனால் பஞ்சாமியின் காதில் அது விழவில்லை. தீவிரமாக எழுதிக்கொண்டு இருக்கிறார்.

  பக்கத்து வீட்டுக் கேசவன், அவர் மனைவியே திடுக்கிடும் வகையில் அமானுஷ்யக் குரல்களை எழுப்பி, பல் தேய்த்து வாயைக் கொப்பளித்துக்கொண்டு தூத்தூ என்று தொடர்ந்து துப்பிக்கொண்டு இருக்கிறார். ஆனால் பஞ்சாமி, மெய் வருத்தம் பாராது, கண் துஞ்சாது, பசி நோக்காது தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கிறார்.    

  டெலிபோன் அடிக்கிறது. வெண் பொங்கல், தேங்காய் சட்னி தயார் செய்துகொண்டிருந்த சிவசாமி எடுத்துக் குரல் கொடுக்கிறான்.

  ‘யாரு? சிவசாமிங்களா? நான்தான் முல்லை பதிப்பகம் செங்கை சோமநாதன் பேசறேன். டாக்டர் சார் இருக்காரா?’

  ‘எழுதிண்டு இருக்கார்’.

  ‘இருக்கட்டும். இருக்கட்டும். மொத புஸ்தகம் அட்டகாசமா வந்திருக்குய்யா. அடுத்ததை எழுதச் சொன்னேன். மாட்டேன்னு அடம் பிடிச்சவரை நீர்தான் ஏதோ மாயாஜாலம் பண்ணி எழுத வெச்சிருக்கைய்யா’.

  ‘அதெல்லாம் பெருசா ஒண்ணுமில்லே, ஸார்’.

  ‘ஆமாம், ஏதோ காட்டாங்குளத்தூர் போகப் போறேன்னாரே?’

  ‘மாட்டார் ஸார். மாம்பலம்தான்’.

  ‘ஒரே கூச்சலா இருக்குன்னு அலுத்துண்டாரே?’

  ‘அதெல்லாம், அடுத்த புஸ்தகம் எழுதற ஆர்வத்திலே காதிலே விழாமப் போச்சு. அட்வான்ஸா செக் வேற கொடுத்தீங்களா? அதான். சத்தமா? எங்கேடா சத்தம்னு என்னையே மடக்கறார்’.

  ‘சிவசாமி! பெரிய ஆளய்யா நீர். மாம்பலம் வீடு எழுதறதுக்கு ராசியான இடம்னு சொல்லி வேப்பலை அடிச்சு, அவரை, ‘நூறை நாடுங்கள்’னு அடுத்த புத்தகத்தை எழுத வெச்சுட்டீர். காட்டாங்குளத்தூர்ல என் சின்ன மச்சினி தேன்மொழிக்கு அவரோட வீட்டைப் பிடிச்சுக் கொடுத்திட்டீர். நீரும் உமக்குப் பிடிச்ச மாம்பலத்தை விட்டு நகராம உட்கார வழி பண்ணின்டுட்டீர். ஆமாம், மாம்பலத்திலே அப்படி என்னய்யா அட்ராக்ஷன் இருக்கு. பக்கத்திலே, விமலா, கமலா, அமலான்னு ஏதான ஈர்ப்பு இருக்கா?’

  ‘சே! வாயை அலம்புங்க ஸார். நான் கட்டை பிரம்மச்சாரி. மாருதி பக்தன்’.

  ‘சரி இருங்க. ஆனா போளி இருக்கு இல்லையா? போளின்னா சிவசாமிக்கு உசிர்னு டாக்டர் சொல்லி இருக்காரே? உமக்கு 108 போளி மாலை சாத்திடறேன். டாக்டர் சாரைக் கூப்பிடுங்க. லைனில இருக்கேன்’.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai