Enable Javscript for better performance
8. ‘உன் கல்யாணம்டா! டயத்துக்கு வந்துடு!’- Dinamani

சுடச்சுட

  

  8. ‘உன் கல்யாணம்டா! டயத்துக்கு வந்துடு!’

  By ஜே.எஸ். ராகவன்.  |   Published on : 11th October 2018 10:00 AM  |   அ+அ அ-   |    |  

  jews_-_sivasami

   

  வெளியிலே மழை பிய்த்து உதறிக்கொண்டருந்தது. குளிர்காற்றின் தாக்கத்தைச் சமாளிக்க, சிவசாமியின் ஆலோசனையின் பேரில் பஞ்சாமி ஒரு மெரூன் நிற சால்வையை அமிதாப் பச்சன் மாதிரி விலகாத மேலாக்காக அணிந்திருந்தார். அதிலிருந்து வந்த பாச்சை உருண்டையின் வாசனை, அன்னையின் அரவணைப்பாக இதமாக இருந்தது. மேலும் இதமளிக்க, சிவசாமி சற்றுமுன் வழங்கிய ‘சுள்’ மிளகாய் பஜ்ஜியும், ஏன்னு கேக்கற காபியும், சிறப்பு சேவைகளைச் செய்தன. கைகளைத் தேய்த்து விட்டுக்கொண்ட பஞ்சாமி, ‘சௌகர்யமா இருக்குடா. இந்த இதத்துக்கு இங்கிலீஷலே ஏதோ சொல்றதுண்டே என்னடா அது?’

  ‘As snug as a bug in a rug அண்ணா’.

  ‘கரெக்ட்டா சொன்னேன் பாத்தியா. அடேய் சிவசாமி, காலிங் பெல் சத்தம் கேக்கறதுடா. போய்ப் பாரு. இந்த கொட்டற மழையிலே யாரா இருக்கும். வருண பகவானே மேகத்திலேருந்து விழுந்து நேரிலேயே வந்துட்டாரா?’

  ‘கம்ப்யூட்டர் குமாராத்தான் இருக்கும் அண்ணா. அவர்தான் நாலு மணிக்கு வரேன்னார். பாருங்கோ மணி சரியா நாலு’.

  ‘அடேய் அந்த மனுஷனுக்கு என்ன பங்க்சுவாலிடிடா. சிவசாமி, அடாது மழை பெய்தாலும்னு அந்த பாய்ஸ் கம்பெனிகள் காலத்திலே ஒரு பழமொழி சொல்லுவாளே, என்ன அது?’

  ‘‘அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும். மேனேஜர் இஷ்டம்போல புரோக்ராம் மாற்றப்படும். வகுப்பு மாறி உட்காருபவர்களிடமிருந்து இரட்டை மடங்கு டிக்கெட் பணம் வசூலிக்கப்படும்’. போறுமா அண்ணா?’

  பிரிண்ட்டரின் காட்ரிட்ஜை மாற்றிவிட்டுக் குமார் கிளம்பினவுடன், பஞ்சாமி தொடர்ந்தார்.

  ‘பங்க்சுவாலிடியை பிளம்பர்கள்கிட்டேந்து எதிர்பார்க்கக் கூடாதுன்னு ஒரு அமெரிக்க ஜோக் உண்டு இல்லே. மறந்து போச்சு. சொல்லுடா’.

  ‘ஒரு வீட்டிலே பெல் சத்தம் கேட்டவுடன் குடி இருந்தவர் கதவைத் திறந்தாராம். ‘ஜான் வீடுதானே இது’ன்னு பெல் அடிச்சவர் கேட்டாராம். ‘ஜானா? அவர் காலி பண்ணின்டு போய் ஆறு மாசம் ஆச்சே. நான் ஸ்மித். என்ன வேணும் உங்களுக்கு’ன்னாராம். அதற்கு பெல் அடிச்சவர், ‘ச்சே அர்ஜன்ட்டா குழாயை ரிப்பேர் பண்ணணும். பாத்ரூம் வெள்ளக்காடாயிருக்குன்னு போன் பண்ணினாரு. நான் வரதுக்குள்ளே வீடு மாறிப்போனா எப்படி? மனுஷங்களுக்குப் பொறுப்பு வேணாம்’னு அலுத்துண்டே போனாராம்’.

  ‘சிவசாமி, முக்காலே மூணு வீசம் பேரு லேட்டாத்தான் வராங்க. நிச்சயதார்தத்துக்கு அழைச்சா சீமந்தத்துக்குத்தான் வருவாங்க. மொத நாள் கொலுவுக்குக் கூப்பிட்டா, பொம்மைகளெல்லாம் படுக்க வெச்சப்புறம்தான் வருவாங்க. உனக்கு கிமூவைத் தெரியுமா?’

  ‘என்ன அண்ணா. கிமூவைத் தெரியாதா? கிருஷ்ணமூர்த்தி சார். உங்க அத்தை பேரன்தானே. கிமூன்னு கூப்பிடறது. ஞாயிற்றுக்கிழமை வரேன்னா புதன்கிழமை அன்னிக்குக்கூட.. இன்னும் வந்திண்டு இருப்பார்’.

  ‘அவன் என்னிக்கு, சொன்ன நேரத்துக்கு வந்திருக்கான். அவன் பொறந்ததே, டாக்டர் குறிச்ச நாளிலேருந்து பத்து நாள் தள்ளித்தான். அந்தக் காலத்திலே, ரயிலடிக்குப் போய் நேரம் தாண்டி தபால் போடணும்னா, எக்ஸ்ட்ரா சார்ஜ் கட்டி LATE FEE பெய்டுன்னு முத்திரையோட போடணும். அதே மாதிரி, பிரும்மாவும் அவன் மேலே LATE FEE பெய்டுன்னு ஸ்டாம்பு குத்தித்தான் டெலிவரி பண்ண வெச்சார்னு சொல்லுவாங்க’.

  ‘சிவசாமி! அவன் படிச்ச சரஸ்வதி வித்யாலயா ஸ்கூல் ஆண்டு விழாவிலே, வருஷா வருஷம் அவனுக்குப் பரிசு உண்டு. எதுக்காகன்னு சொல்லு பாக்கலாம். ஆனா சரியாச் சொன்னா உனக்குப் பரிசு கிடையாது’.

  ‘ஒருநாள்கூட பெல் அடிக்கிறதுக்கு முன்னாலே ஸ்கூலுக்கு வந்தது கிடையாதுங்கிறதுக்காக’.

  ‘கரெக்ட்டா சொன்னேடா. ஆனா அவன் ஒரு வருஷம்கூட அந்தக் கப்பை வாங்கினது இல்லே. ஏன்னா, அவன் போறதுக்குள்ளே விழா முடிஞ்சிருக்கும். சினிமாவுக்குப் போனான்னா, டைட்டில் எல்லாம் முடிஞ்சு, ஹீரோயினோட அப்பா மண்டையைப் போட்டுட்டு அந்தக் கால சம்பிரதாயப்படி சோகப் பாட்டு பாட ஆரம்பிச்சு இருப்பா. வழக்கமாவே எல்லா சினிமாலேயும் போலீஸ் லேட்டா கடைசி சீனில்தான் வரும். ஆனா, கிமூ போலீஸ் இன்ஸ்பெக்டரா ஆக்ட் பண்ணினா, அதையும் தாண்டி அடுத்த ஷோ முதல் ரீலிலேதான் வந்து குளறுபடி பண்ணுவான்னு அவன் ஃப்ரெண்ட்ஸ் கேலி பண்ணுவாங்க. பள்ளிக்கூட டிராமாலே, பிரகலாதன் தூணிலே இருப்பான், துரும்பிலேயும் இருப்பான் என்னும்போது தூண் வெடிக்க, நரசிம்மர் வேஷம் போட்ட கிமூ, மேடைக்குக் கீழே இருந்து எழும்பி சிம்மமா கர்ஜித்து ஹிரண்யகசிபுவை சம்ஹாரம் பண்ணனும். ஆனால், நரசிம்ம வேஷத்தில் தயாராக இருக்க வேண்டிய கிமூ, பாத்ரூம் போக வெளியே போய் சாவகாசமா வர்றதுக்குள்ள, ஹிரண்யகசிபு வேடம் தரித்தவன் ‘ஆ.. தூணில் இல்லை? எங்கே உன் நாராயணன், அப்ஸ்காண்டிங்!’ என்று அட்டகாசச் சிரிப்புடன் இடைச் செருகலாகக் கேட்க, பிரகலாதன் வேஷம் போட்ட நிஜ நாராயண பக்தனான வெங்கி, ஹிரண்யகசிபுவின் மூக்கில் பச்சக்குன்னு ஒரு குத்துவிட, சபையோர்கள் ரசித்து, சிரித்து அந்த நாடகம் ஒரு வழியா முடிஞ்சது. பெரியவனாகி கிமூ வேலைக்கு இண்டர்வியூக்குப் போனது லேட். ஏதோ தெரிஞ்சவர் மூலமா வேலை கிடைச்சது. இப்பக்கூட அவன் ஆபீசுக்கு லேட்டா போறதினாலே அவiனோட மறுபெயர்கள், ‘லேட்’ கிமூ, ‘மெமோ’ கிமூ, ‘பதினோரு மணி பாசஞ்சர்’.. இப்படியாகத் தொடர்ந்தது. அதெல்லாம் விடு. சிவசாமி, உனக்கு விஷயம் தெரியுமா? கிமூக்குக் கல்யாணமாம்’.

  ‘நானும் கேள்விப்பட்டேன் அண்ணா. சந்தோஷமா இருக்கு. அந்த சர்வேஸ்வரன் கடாட்சத்திலே கிமூ சார் அவரோட கல்யாணத்துக்கு நேரத்துக்கு வரணும்’.

  பஞ்சாமி பரவசத்துடன் எழுந்தார்.

  ‘சிவசாமி! அதெப்படி இட்சணி வித்தை மாதிரி கரெக்ட்டா மேட்டரோட மையத்துக்கு வந்தே. ஜீனியஸ்டா நீ’.

  ‘அதெல்லாம் ஒண்ணும் இல்லே அண்ணா. இன்னிக்கு கார்த்தாலே, வாக்கிங் போற வழியில கிமூவோட அப்பா துரைசாமி சாரை பார்த்தேன். ‘சிவசாமி, கிமூக்கு கல்யாணம்டா. அக்டோபர் 26-ம் தேதி. திங்கட்கிழமை. மெட்ராஸ்லே வெச்சு. கிமூ இப்பத்தான் கல்கத்தாவிலே ஒரு புது வேலைலே சேர்ந்திருக்கான். ஆயிரம் தடவை சொல்லியாச்சு. முன்னாடியே வந்துடணும்னு. அவன் கரெக்ட்டா வந்து சேர ஏதான வழி சொல்லேண்டா’ன்னு கேட்டார். சொல்றேன் மாமான்னு சொல்லி வெச்சேன்’.

  ‘அட, நீ துரையைப் பார்த்தியா சிவசாமி. என்னடா செய்யப் போறே?’

  ‘தெரியலே அண்ணா. ஏதான செஞ்சாகணும்’.

  *

  கிமூவுக்கும், கீர்த்திக்கும் அக்டோபர் 26-ம் தேதி மேளதாளத்துடன் கல்யாணம் நடந்து முடிந்தது. முகூர்த்த விருந்துக்குப் பிறகு, பஞ்சாமியும், சிவசாமியும் துரையிடமிருந்து விடைபெற்றுக் கொண்டனர்.

  ‘பயந்திண்டே இருந்தேன், கிமூ டயத்துக்கு வரணுமேன்னு. சிவசாமி கடாட்சத்தாலே எல்லாம் விக்னம் இல்லாம சரியா நடந்தது’.

  ‘தொரை! அதென்ன சிவசாமி கடாட்சத்தாலே? அப்படி என்ன செஞ்சான் அவன்? நேர கல்கத்தாக்குக்கு கோரமாண்டலைப் பிடிச்சுப் போய் கிமூவோட காதைப் பிடிச்சு இழுத்திண்டு வந்தானா? இருக்காதே. சிவசாமி மெட்ராஸ்லே என்கூடதானே இருந்தான்’.

  ‘பஞ்சு மாமா! உங்ககிட்டே ஒரு ரகசியம் சொல்லிடணும். சிவசாமிதான் அந்த ஐடியாவைக் கொடுத்தான். பத்திரிகை அடிக்கும்போது, ஸ்பெஷலா ஒண்ணை மாத்திரம் முகூர்த்த தேதியை அக்டோபர் 26-க்கு பதில் அக்டோபர் 24-ன்னு அட்வான்ஸ் பண்ணி மாத்தி அடிச்சு கிமூக்கு அனுப்பி வெச்சது. வழக்கம்போல கிமூ ஒருநாள் லேட்டா வந்தாலும், அவன் வந்து சேர்ந்தது அக்டோபர் 25 அன்னிக்கு. அதாவது, சரியான கல்யாணத் தேதிக்கு மொத நாள் வந்து சேர்ந்துட்டான். அப்புறம் என்ன? பிராப்ளம் சால்வ் ஆயிடுச்சு. தாம்பூலம், பட்சணப் பையை வாங்கிக்கோங்கோ. சிவசாமி, உனக்கு மாத்திரம் ஸ்பெஷலா ஒரு மயில் கண் வேஷ்டி செட். நீ இல்லேன்னா இந்தக் கிமூவை இப்படி டாண்ணு வரவழைச்சிருக்க முடியாது. இப்போ அவனுக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா. பம்பரத்தோட சாட்டை அவ கையிலே. இனிமே கிமூவோட பங்க்சுவாலிடியை கீர்த்தி பாத்துப்பா. ஏன்? தாலி கட்டும்போதுகூட அவள், ‘கீமூ அங்க எங்கே பராக்கு பாத்திண்டு இருக்கே. முகூர்த்த நேரம் தாண்டிண்டு இருக்கு. சீக்கிரம் கட்டுடா தாலியை’ன்னு அதிகாரத்தோட சொன்னா. கிமூ பதறி, அவசர அவசரமா முடிச்சு போட ஆரம்பிச்சான்னா பாத்துக்கோங்களேன்’.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai