சுடச்சுட

  
  tm-7_(1)

   

  பண்பட்ட மனத்திலெழும் பக்தியெனும் உணர்வு உறுதிப்படுங்கால், அது மற்றைய உணர்வுகளைக் காட்டிலும் மேலோங்கி நிற்பது கண்கூடு. அத்தகைய பண்பட்ட பக்தி, வெறுப்பு, சினம், பகை போன்ற உணர்வுகளால் உள்ளடங்காது உயர்ந்து நிற்கும். வரலாற்றுக் காலத்திலும், பரம்பரைப் பகையைக் காட்டிலும் பக்தியே பெருஞ்செல்வமாகப் போற்றப்பெற்றுள்ளது. அக்காலக் கல்வெட்டுகளை நோக்குங்கால், இந்தச் செய்தி வெள்ளிடைமலையாகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவேந்திபுரத்தில் முதலாம் பராந்தகன் காலத்துக் கல்வெட்டு இந்தச் செய்தியை ஐயந்திரிபற தெளிவாக்குகிறது. இந்தக் கல்வெட்டு, தெய்வநாயகப் பெருமாள் கோயிலில் உள்ள பிராகாரத்தின் தூணில் செதுக்கப்பெற்றுள்ளது.

  இந்தக் கல்வெட்டு பொ.நூ. 938-ஐச் சேர்ந்தது. இது பொ.நூ. 907-இல் அரசுக் கட்டிலேறிய முதலாம் பராந்தகனின் 31-ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பெற்றது. இந்தக் கல்வெட்டு, திருவேந்திபுரதேவருக்கு நொந்தா விளக்கெரிப்பதற்காக, தொண்ணூற்றைந்து ஆடுகள் தானமாக வழங்கப்பெற்றதைக் குறிப்பிடுகிறது. இந்தத் தானத்தை வழங்கியவர், பாண்டியனார் இராசசிங்க பெருமானாரின் மகளார் வானவன் மாதேவியார் ஆவார். இதில் குறிப்பிடப்பெற்ற பாண்டிய மன்னன், பொ.நூ. 900 முதல் 920 வரை அரசுக் கோலோச்சிய இரண்டாம் இராசசிம்ம பாண்டியனாவான். இந்தப் பாண்டியனைத்தான் பராந்தக சோழன் பன்முறைத் தோற்கடித்து, இலங்கைக்கும் பிறகு கேரளத்துக்கும் உயிருக்காகத் துரத்தியவன்.

  பரம்பரைப் பகையாளியான சோழர்களின் ஆட்சிப் பரப்பிலிருந்த கோயிலுக்கு அவர்தம் எதிரியின் மகள் தானம் அளித்திருப்பது வியத்தகு செய்தியல்லவா. மேலும், பரம்பரை வைரியின் மகளைப் பகையாளியின் நாட்டுக் கோயிலுக்குத் தானமளிக்க வைத்ததும், அதை வைரி நாட்டினர் ஏற்கவைத்ததும் ஆழ்ந்த பக்தியல்லவா.

  இதனைப் போலவே, தமிழ் மீது கொண்ட பத்திமை, பகைமையை மீறி நின்ற செயலும் பாண்டியர் தம் வரலாற்றில் உண்டு. ஏறத்தாழ முந்நூறு வருடங்களுக்கும் மேலாக பாண்டியரை சோழர் பரம்பரை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தது. 13-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் வீறிட்டெழுந்தான். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் வலிமையிழத் தொடங்கியிருந்த சோழப் பேரரசு, அவனுடைய இறுதிக்காலத்தில் சுந்தரபாண்டியனை எதிர்கொள்ள இயலாமல் துவண்டது. அத்துணை காலமாக அடக்கிவைத்திருந்த பழியைத் தீர்த்துக்கொள்ள புறப்பட்ட சுந்தரபாண்டியன், பொ.நூ. 1219-இல் படையெடுத்து சோழப் பேரரசை நிலைகுலைய வைத்தான். அவர்தம் படையைத் தோற்கடித்ததோடு அவனுடைய சினம் ஓயவில்லை. அவர்தம் மாடமாளிகைகளையும் மண்டபங்களையும் இடித்துத் தூளாக்கினான். அவற்றைக் கழுதை கொண்டு உழுது கவடி விதைத்தான். அவர்தம் அரசியர் கண்ணில் நீர் ஆறாகப் பெருகியது. அவர்தம் மணிமுடியை, பாடும் பாணனுக்குக் கொடுத்தான். இதனைத் தன் மெய்க்கீர்த்தியிலும் பதித்தான்.

  தஞ்சையு முறந்தையும் செந்தழல் கொளுத்திக்

  காவியும் நீலமும் நின்றுகவின் நிழற்ற

  வாவியும் ஆறு மணிநீர்நலன் அழித்துக்

  கூடமா மதிலுங் கோபுரமா டரங்கும்

  மாடமா ளிகையும் மண்டபம்பல விடித்துத்

  தொழுதுவந் தடையார் நிருபர்தந் தோகையர்

  அழுத கண்ணீர் ஆறு பரப்பி

  கழுதை கொண் டுழுது

  என்பது அவனுடைய மெய்க்கீர்த்தி. இவ்விதம் சோழ நாட்டைச் சிதைக்கும் அளவுக்குச் சினம் கொண்டிருந்தாலும், அவன் விடுத்த மண்டபம் ஒன்று உண்டு. அதனை அவனுடைய திருவெள்ளறைக் கல்வெட்டு விளக்குகிறது.

  வெறியாரத் துவளத் தொடைச் செய்ய மாறன் வெகுண்ட தொன்று

  மறியாத செம்பியன் காவிரி நாட்டில ரமியத்துப்

  பறியாத தூணில்லை கண்ணன் செய் பட்டினப் பாலைக் கன்று

  நெறியால் விடுந்தூண் பதினாறுமே யங்கு நின்றனவே

  என்பது கல்வெட்டுச் செய்யுள்.

  மாறன் வெகுண்டு செய்த சூளுரையில், காவிரிநாட்டு அரமியங்களில், அதாவது மாளிகைகளில் பறியாத தூண் என்று ஒன்றுமே இல்லை. கண்ணன் செய்த பட்டினப்பாலைக்குக் கொடுக்கப்பட்ட தூண்கள் பதினாறு மட்டுமே நின்றன என்பது செய்யுளின் பொருள்.

  சங்க காலத்தில், கரிகால் சோழனைப் பாராட்டி உருத்திரங்கண்ணனார் என்ற புலவர் பட்டினப்பாலை என்னும் நூலை இயற்ற, அதற்கு கரிகாற்பெருவளத்தான் பொன்னையும் கொடுத்து பதினாறு தூணுள்ள மண்டபத்தையும் அளித்த செய்தி இதிலிருந்து உறுதியாகிறது. மேற்கொண்டு, தமிழ் மீது கொண்ட பத்திமையாலன்றோ அவன் இவ்வளவு வெஞ்சினத்திலும் மண்டபத்தை விடுத்தான் என்று எண்ணும்போது மனம் சிலிர்க்கிறது.

  ஆக, எல்லாப் பத்திமையின் வலிமை, பகைமையைத் தள்ளி பண்படுத்துவதுதான்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai