சுடச்சுட

  
  temple1

   

  பொதுவாக, பணம் புழங்கும் இடம் என்றாலே அங்கு ஊழலும் இருக்கும். இதில், இறைவன் வாழுமிடமோ அல்லது இல்லாதவர் இல்லமோ என்ற வேறுபாடே கிடையாது. இறைவன் வாழும் இடத்திலும் ஊழல்கள் நிகழ்வதுண்டு. அவை வரலாற்றின் பக்கங்களிலும் பதிவாகி இருப்பதுவும் உண்டு. இத்தகைய நிகழ்வுகள், சோழர் மற்றும் பாண்டியர் காலக் கல்வெட்டுகளில், ஊழலையும் அதற்காகக் கொடுக்கப்பட வேண்டிய தண்டனைகளையும் காட்டி நிற்கின்றன.

  எல்லாத் துறையிலும் இணையற்றுத் திகழ்ந்த பெருவேந்தன் இராசராச சோழன். அவன் இன்றைய அறநிலையத் துறையைப் போலவே அதிகாரி ஒருவனை நியமித்திருந்தான். மதுராந்தகன் கண்டராதித்தன் என்னும் பெயருடையவன் அந்தச் சிறப்பு அதிகாரி. இவன், உத்தமசோழனின் மகனாக அறியப்பெறுகிறான். திருவிசைப்பாவைப் பாடிய கண்டராதித்தன் இவனே எனச் சில பழைய ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தாலும், பெரும்பாலானோர் இதனை ஒப்புவதில்லை. கோயில்களை நேரில் சென்றாய்ந்து அவற்றில் உள்ள குறைநிறைகளைச் சரிபார்த்திருந்த அதிகாரியாக இவன் இலங்கியிருந்தான்.

  செங்கல்பட்டு அருகில் திருவல்லம் என்னும் ஊர் அமைந்துள்ளது. இது தீக்காலி வல்லம் என்று அழைக்கப்பெறுகிறது. இது காழிப்பிள்ளையால் பாடல் பெற்ற தலமாகும். இதில் உள்ள ஒரு கல்வெட்டு, அங்கு நிகழ்ந்த ஊழலை படம் பிடித்துக் காட்டுகிறது. அங்கு மதுராந்தகன் கண்டராதித்தன், ஆயிரம் கலசம் ஆட்டுவிக்கச் சென்றான். அங்கு சென்றபோது கண்ட காட்சி மனம் பதைக்கச் செய்தது. இறைவனுக்குத் திருவமுதும் கறியமுதும் படைக்கப்பெறவில்லை. விளக்கும் சரியாக எரியவில்லை. இதனைக் கண்டு கொதித்த மதுராந்தகன், கோயில் கணக்குகளைப் பார்க்கத் தொடங்கினான். கோயில் நிர்வாகிகளிடமும் அர்ச்சகர்களிடமும் வரவு செலவுகளைப் பற்றிக் கேட்டான். அரசனின் ஆணைப்படி, உள்ளது உள்ளபடி சொல்லுமாறு கேட்டான். கோயில் நிர்வாகிகளும் அர்ச்சகர்களும் கையைப் பிசைந்து நின்றனர். அவர்கள் கோயில் சொத்தைத் தமக்குப் பயன்படுத்தி வந்திருப்பது தெளிவாகியது. அவர்கள் அனைவருக்கும் எழுபத்து நாலு கழஞ்சு பொன்னைக் கட்டச் சொல்லித் தண்டனை வழங்கினார். ஒரு கழஞ்சு என்பது கிட்டத்தட்ட 5.4 கிராம் என்பது தற்போதைய ஆய்வாளர்களின் முடிவாக உள்ளது. இதன்படி பார்த்தால், இன்றைய தேதியில் கிட்டத்தட்ட பன்னிரண்டு லட்சம் ரூபாய் பெறுமான தொகை தண்டனையாக வழங்கப்பெற்றது. இந்தச் செய்தி இராசராசனின் ஆறாம் ஆட்சியாண்டு கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. இது பொ.நூ. 991-ம் ஆண்டைச் சேர்ந்ததாகும். இந்தப் பொன்னிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு திருப்பணிகளை நடத்த வேண்டும் என்றும் அந்த அதிகாரி ஆணையிட்டான். ஆக, கண்டது கண்டவுடன் ஆணையிட்டு தண்டனை வழங்கிய செய்தி கல்வெட்டில் பதிவாகியுள்ளமை தெளிவு.

  இரண்டாவது கல்வெட்டு திருக்கடவூரைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் காலத்தைச் சேர்ந்தது. இதன் காலம் பொ.நூ. 1195 ஆகும். இந்தக் கல்வெட்டும் மற்றொரு முறைகேட்டை எடுத்துக் காட்டுகிறது. அவ்வூர் கோயிலில் சைவாசார்யம் செய்து வந்த காலவிநோத பண்டிதன் என்பவன் இறந்து போனான். அப்போது அங்கிருந்த, வித்யாதர மகாராசனும் சைவசிந்தாமணி மகாராசனும் தமக்கே அடுத்த காணி என்று பொய்யாக ஓலை செய்தனர். சைவாசார்யமும் செய்து வந்தனர். இதனைக் கேள்விப்பட்ட மூன்றாம் குலோத்துங்கனின் அரசகுருவான சுவாமித் தேவர் எடுத்த நடவடிக்கையால் அவர்கள் பணியிழந்தனர். உரிய சிவாசாரியாருக்குப் பணி வழங்கப்பட்டது. இதற்கான கல்வெட்டு திருக்கடவூர் கோயிலிலும் திருமயானமுடையார் கோயிலிலும் வெட்டுவிக்கப்பெற்றது.

  இதனைப் போலவே, இரண்டாம் இராசராசன் மற்றும் மூன்றாம் இராசராசனின் காலத்திலும், பந்தநல்லூர் மற்றும் திருநாகேச்சுவரத்திலும் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்தன. கோயில் நிர்வாகிகள் இறைவனுக்குரிய ஆடைகளைத் தாமுடுத்தியும், கோயில் அமுதுகளை வீட்டுக்குக் கொண்டு சென்றும் பல்வேறு விதத்தில் முறைகேடுகளைச் செய்தனர். அவற்றுக்கும் தண்டனையாகக் காசுகளை வசூலித்தும், சொத்துகளைப் பறிமுதல் செய்தும், கோயில் சொத்தில் சேர்த்து நிர்வாகத்தைச் சீர் செய்த செய்தி கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.

  இதனைப் போலவே, மாறவர்மன் குலசேகர பாண்டியனின் கல்வெட்டொன்றும் ஒரு தகவலைத் தருகிறது. இராமநாதபுரத்தை அடுத்த திருப்பத்தூரில் உள்ள திருத்தளியாண்டார் கோயிலில் உள்ள கல்வெட்டொன்று, அங்கு பானழகப் பெருமாளும் அவன் தம்பிமாரும் செய்த முறைகேடுகளைக் கூறுகிறது. அவர்கள், அந்தணர்களைக் கொன்றும் ஒரு அந்தண விதவையை வைத்துக்கொண்டு கோயிலில் அமுதுபடி சாத்துபடிகளைத் தாமே விநியோகம் செய்துகொண்டும் கோயிலுக்கான நிலங்களிலிருந்து வர வேண்டிய முதலைக் கைக்கூலி கொண்டு தள்ளுபடி செய்தும் என்று அட்டூழியம் செய்தனர். இதற்கான தண்டனைப் பகுதி கல்வெட்டில் சிதைந்துவிட்டமையால் தெரியவில்லை.

  இப்படி ஊழலானது கோயிலென்றுமில்லாமல் குடிகளென்றுமில்லாமல் தொடரத்தான் செய்கிறது. இதற்கான தண்டனைகள் உடனடியாக ஆராய்ந்து வழங்கப்பட்டாலொழிய இத்தகைய ஊழல்கள் குறையா என்பதே வரலாற்றின் வண்ணம் அறிவிக்கும் செய்தி. இன்றைய நாளில், வழக்கு விசாரணைக்கே பல்லாண்டுகள் செல்லும் நிலையில், ஊழலுக்கான தீர்வென்பது எட்டாக்கனியே. அரசர் காலத்தைப் போன்று உடனுக்குடன் தீர்ப்பு வழங்கமுடியாதெனினும், தண்டனையை விரைவில் வழங்குவது மட்டுமே ஊழலைக் குறைக்கும் என்பதே முடிவாகத் தெரிகிறது. இப்போது கோயில்களில் சொத்துகளை நிர்வாகத்தினர் கைக்கொள்வதும், முறைகேடுகள் பல செய்வதுமாக பல்வேறு ஊழல்களும் நிகழலாம். இவற்றை மீறி கோயில் நிர்வாகத்தைச் சீரும் சிறப்புமாக நிகழ்த்திய செய்தி கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளது. இதற்குக் காரணம், தண்டனை வழங்கும் விரைவே என்பதே வரலாற்றின் வண்ணம் கூறும் செய்தி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai