சுடச்சுட

  

  16. திருமணத்துக்குப் பெண் வீட்டாருக்குப் பணம்

  By முனைவர் க. சங்கரநாராயணன்  |   Published on : 12th March 2019 10:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  temple16

   

  பொதுவாக, திருமணத்தை தர்மசாஸ்திர நூல்கள் எட்டாகப் பிரித்திருக்கின்றன. இதனைத்தான் மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் என்று தொல்காப்பியர் குறிப்பிட்டார். பிராம்மம், தைவம், ஆருசம், பிராசாபத்யம், ஆசுரம், காந்தர்வம், இராக்கதம், பைசாசம் என்பவையே அந்த எட்டு வகை திருமணங்கள். இந்தத் திருமணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இலக்கணங்கள் உண்டு. இவற்றுள் ஆருசம் என்னும் திருமணமும் ஆசுரம் என்னும் திருமணமும், பிள்ளை வீட்டார் செல்வத்தை அளித்து பெண்ணைத் திருமணம் செய்யும் முறைகளாகும். ஆருசம் என்பது முறைப்படி செல்வத்தைக் கொடுத்து பெண் கேட்கும் முறை. ஆசுரம் என்பது செல்வத்தைக் கொடுத்து வற்புறுத்திப் பெண் கேட்கும் முறை. எங்கும், பிள்ளை வீட்டாருக்குப் பெண் வீட்டார் செல்வம் அளிக்கும் முறையான வரதட்சிணை என்பது பற்றிக் கூறப்படவே இல்லை.

  இந்நிலையில், விரிஞ்சிபுரம் கோயிலில் அமைந்துள்ளதும் விஜயநகர மன்னனான தேவராயனுடையதும் பொ.நூ. 1425-ஐ சேர்ந்ததுமான ஒரு கல்வெட்டு சுவாரசியமான தகவலைத் தருகிறது. படைவீட்டைச் சேர்ந்த அந்தணர்கள் அனைவரும் கூடி ஒரு முடிவெடுத்த செய்தியைத் தருகிறது. அந்த அந்தணர்களில் கன்னடிகர், தமிழர், தெலுங்கர், இலாடர் போன்ற எந்தப் பிரிவும் இல்லாமல், அனைவரும் திருமணம் செய்யும்போது கன்னிகாதானம் மட்டுமே செய்ய வேண்டும் என்றும், பொன் வாங்கிப் பெண் கொடுத்தால் அவர்களுக்கு அரச தண்டனையும் சாதியிலிருந்து விலக்கும் தண்டனையாக அமையும் என்றும் செய்த ஒழுங்குமுறையைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

  அசேஷ கோத்ரத்து அசேஷ சூத்திரத்தில் அசேஷ சாகையில் விவாஹம் பண்ணுமிடத்து கந்யாதானமாக விவாஹம் பண்ணக்கடவராகவும் கந்யாதானம் பண்ணாமல் பொன்வாங்கிப் பெண் குடுத்து விவாஹம் பண்ணினால் ராஜதண்டத்துக்கும் உட்பட்டு ப்ராஹ்மண்யத்துக்கும் புறம்பாகக்கடவாரென்று..

  இவ்விதம் செல்கிறது அந்தக் கல்வெட்டு. ஆக, பதினைந்தாம் நூற்றாண்டிலும் பெண் வீட்டுக்குப் பொன்னைக் கொடுத்து பெண்ணைப் பெற்றிருக்கின்றனரே தவிர, மணமகனுக்குப் பொன் கொடுக்கும் வழக்கம் இல்லை என்பது தெளிவாகிறது. வரதட்சிணை என்ற பெயரில் மணமகனுக்குத் தட்சிணையை அளித்துப் பெண் கொடுக்கும் வழக்கம் மிகப் பிற்காலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும். இதனால் அழிந்த பெண்கள் குழாம் எத்துணை எத்துணை.

  பெண் வீட்டாருக்குப் பொன் கொடுக்கும் வழக்கம் இருந்திருந்தால், பெண் குழந்தைகளுக்கும் பெருமதிப்பு இருந்திருக்கும். அது மாறிப்போனதால்தான் பெண் குழந்தைகள் அழிவுக்குள்ளாயினர். பெண் வீட்டாருக்குப் பொன் கொடுத்துப் பெண் பெற்ற வழக்கமும் நாளடைவில் துன்பத்தை விளைவிக்கக்கூடியதே. அதன் துன்பத்தை உணர்ந்தே, இப்படியொரு ஒழுங்குமுறையை ஏற்படுத்தியிருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஆயிரம் காலத்துப் பயிர் என்று வழங்கப்பெறும் திருமணம், செல்வத்தைக் கொண்டு நிச்சயிப்பது என்ற வழக்கமே வழக்கொழிந்து போக வேண்டும். சமூகத்தைச் சீரமைப்பதற்கும் வளமான வாழ்க்கைக்கும் இதயங்கள் ஒன்றும் நிகழ்வாகவும் திருமணம் அமைய வேண்டும் என்பதுதான் வரலாறு தரும் வண்ணம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai