Enable Javscript for better performance
98. சாட்சி- Dinamani

சுடச்சுட

  

  98. சாட்சி

  By பா. ராகவன்  |   Published on : 01st August 2018 10:00 AM  |   அ+அ அ-   |  

   

  ஆசிரமம் அப்போது விரிவடைந்துகொண்டிருந்தது. குருநாதருக்கு அது சங்கடமாகவும் இருந்தது; அதே சமயம் நிறையப்பேர் தேடி வருவது பற்றிய எளிய மகிழ்ச்சியும் இருந்தது. சீடர்களாக மட்டுமே அப்போது ஒன்பது பேர் இருந்தோம். அது தவிரத் தன்னார்வலர்களாகப் பதினைந்து பேர் தினமும் ஆசிரமப் பணிகளை எடுத்துப் போட்டுக்கொண்டு செய்பவர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் மாலை வேளைகளில் குருநாதர் அரை மணிநேரம் சொற்பொழிவாற்றும்படி ஆனது. தொடக்கத்தில் அவருக்கு இது பிடிக்கவில்லை. வற்புறுத்தித்தான் அவரை நாங்கள் உட்காரவைத்தோம். ஒரு கட்டத்தில் அவருக்கு அது பிடித்துவிட்டதா, பழகிவிட்டதா என்று தெரியாமல், அவரே எங்களுக்கு முன்னால் சொற்பொழிவுக்கு வந்து உட்கார ஆரம்பித்தார்.

  புதிய பக்தர்களுக்கு முதலில் எங்களைப் புரியவில்லை. கடவுளைக் குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசாத சன்னியாசிக் கூட்டம் என்பது அவர்களுக்கு வினோதமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் குருநாதரின் பேச்சில் உபநிடதங்கள் வரும். பிரம்ம சூத்திரம் வரும். எப்போதாவது வேதங்களைத் தொட்டுக்காட்டுவார். ஆனால் உடலுக்கும் உயிருக்கும் அப்பால் ஆத்மா என்று என்றுமே அவர் ஆரம்பித்ததில்லை. ஒருநாள் ஆசிரமத்துக்கு வந்திருந்த ஒரு பெண் அதைக் குறித்து அவரிடம் கேட்கவே செய்தாள். ‘குருஜி, நீங்கள் ஆத்மாவை ஏன் தொட்டுக்காட்ட மறுக்கிறீர்கள்?’

  அவர் சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னார், ‘மனத்தை முதலில் அகழ்ந்து முடிப்போமே? ஆத்மாவுக்கு என்ன அவசரம்?’

  ‘அதில்லை குருஜி. ஆத்மா என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா?’

  ‘தேடிக்கொண்டிருக்கிறேன் பெண்ணே. கண்டெடுத்தால் சொல்கிறேன்’ என்று அவர் சொன்னார்.

  அவரிடம் என்னைக் கவர்ந்தது அதுதான். தன் அறிவுக்கு எட்டாதவற்றை அவர் நம்பத் தயாராக இல்லை. அதே சமயம் அறிதலின் எல்லைகளை விஸ்தரித்துக்கொண்டே போவதிலும் அவர் சுணக்கம் காட்டியதில்லை.

  ஒரு சம்பவம். அதனை எப்படி விவரிப்பது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. உண்மையில் பிற்காலத்தில் அச்சம்பவம் ஒரு பெரும் சரித்திரமாகிப் போனது. தேசம் முழுதும் செய்தித் தாள்களில், வாராந்தரிகளில், வானொலியில் மாற்றி மாற்றி அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு என்ன வியப்பென்றால் அந்தச் சம்பவத்துக்கு சாட்சியாக இருந்தவர் என் குருநாதர். அவரோடு இருந்ததால் நானும் என் தோழர்கள் சிலரும் நடந்ததை முழுவதுமாக அறிந்திருந்தோம். ஆனால் ஊடகங்கள் பேசிய சரித்திரம் நடந்தவற்றுக்குச் சற்றும் சம்பந்தமற்றதாயிருந்தது.

  அன்றைக்கு விடிந்ததில் இருந்தே மேகமூட்டம் அதிகமாயிருந்தது. வெளியே வந்து வானத்தைப் பார்த்த குருநாதர், 'மழை மேகமாகத் தெரியவில்லை. நாம் வெளியே போய்விட்டு வரலாம்' என்று சொன்னார். நான் உடனே சரி என்றேன். காரணம் அதற்கு முந்தைய வாரம் முழுவதும் நான் காய்ச்சலில் படுத்துக் கிடந்தேன். என் குடிலை விட்டு வெளியே வரவேயில்லை. சாப்பாட்டைக்கூட நண்பர்கள் என் குடிலுக்கே எடுத்து வந்துதான் கொடுத்தார்கள். கண்டிப்பாகக் காய்ச்சலுக்கென்று எந்த மருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று குருநாதர் சொல்லியிருந்தார். ‘அது எத்தனை நாள் இருக்கிறதோ இருந்துவிட்டுப் போகட்டும். முற்றிலுமாக அதுவாக வெளியேறிச் செல்லும்வரை சும்மா இரு. அப்போதுதான் திரும்பி வராது’ என்று சொன்னார்.

  இதனால் எளிய காய்ச்சல் கஷாயங்களைக் கூட நான் தவிர்த்தேன். இரண்டு வேளை ரசத்தில் கரைத்த நொய்க்கஞ்சி மட்டும் அருந்தும்படி அவர் சொல்லியிருந்தார். காய்ச்சல் காலத்தில் வயிற்றை காலியாக வைத்திருப்பதே சிறந்தது என்பது அவர் கருத்து. எனக்கு நாக்கு கசந்துவிட்டிருந்தது. அந்தக் கஞ்சியைக்கூட என்னால் முழுக்க அருந்த முடியவில்லை. கடமைக்குச் சாப்பிட்டுவிட்டு வெறுமனே படுத்துக் கிடந்தேன். இரண்டு மணி நேரம் விடாமல் காய்ச்சல் அடிக்கும். பிறகு படிப்படியாகக் குறையும். தூங்கிவிடுவேன். மீண்டும் அது எப்போது வரும் என்று தெரியாது. இன்னொரு இரண்டு மணி நேரம் சுட்டுப் பொசுக்கிவிட்டு அது பாட்டுக்குப் போகும். இப்படியே ஆறு நாள்கள் கழிந்தன. டைபாய்டு, மலேரியா ரகங்களைச் சேர்ந்த காய்ச்சலாக இருக்குமோ என்று என் நண்பர்கள் பயந்தார்கள். ஆனால் என் நாடி பிடித்துப் பார்த்த குருநாதர், அதெல்லாம் இல்லை; சாதாரண வைரஸ் காய்ச்சல்தான் என்று சொல்லிவிட்டார். எளிய ஆண்ட்டிபயாடிக் மாத்திரைகளைக்கூடப் போடவேண்டாம் என்று சொன்னார்.

  ‘நீங்கள் சொன்னதை நான் கேட்பேன் குருஜி. ஆனால் உண்மையிலேயே மருந்து எடுக்காமல் காய்ச்சலைத் தானாகப் போகவிட்டால் அது திரும்பி வரவே வராதா?’ என்று கேட்டேன்.

  சற்று யோசித்துவிட்டு அவர் சொன்னார், ‘ஆம். குறைந்தது இரண்டு வருடங்களுக்காவது’.

  அதைப் பரீட்சித்துப் பார்த்துவிடுவது என்று முடிவு செய்து நான் எந்த மருந்தும் உட்கொள்ளாதிருந்தேன். அந்நாள்களில் அவர் என்னை மூச்சுப் பயிற்சியும் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருந்தார். தினமும் பதினைந்து நிமிடங்கள் ஆசிரம வளாகத்துக்குள்ளேயே மெதுவாக நடக்கலாம் என்றார். ஆனால் கட்டாயமாகப் பச்சைத் தண்ணீரில்தான் குளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

  எங்கள் அனைவருக்குமே அவரது இந்த நிபந்தனைகள் வினோதமாக இருந்தன. கடும் காய்ச்சலில் தவிக்கும் ஒருவன் பச்சைத் தண்ணீரில் எப்படிக் குளிக்க முடியும்?

  ‘முடியும். குளி. ஒருநாளும் தவறாமல் குளி’ என்று அவர் சொன்னார்.

  நான் அதையும் கேட்டேன். எப்போதும்போல அதிகாலை குளிக்காமல் சற்று வெயில் வர ஆரம்பித்த நேரத்தில் குளித்தேன். அது ஒரு பிரமைதான். எங்கள் ஆசிரமத்துக் கிணற்று நீர் என்ன வெயில் அடித்தாலும் பதினைந்து டிகிரி வெப்பத்துக்கு மேல் பிரதிபலிக்காது. காய்ச்சல் தினங்களில் குளியலின் முதல் சொம்பு நீர் உடலில் படும்போதெல்லாம் உயிரே போய்விடப் போகிறது என்று தோன்றும். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் ஆகவில்லை. ஏழு நாள் இடைவிடாமல் அடித்த காய்ச்சல் ஒருவழியாக என்னை விட்டு நீங்கியது.

  அந்நாள்களில் நான் நான்கு கிலோ எடை குறைந்திருந்தேன். உடல் லேசாகிவிட்டது போலிருந்தது. உற்சாகமாக இருந்தது. அன்றைக்குத்தான் சூரிய உதயத்துக்கு முன்னால் எழுந்து குளித்துவிட்டுப் பிராணாயாமப் பயிற்சியை மேற்கொண்டேன். அதை முடித்துவிட்டு எளிதான சில யோக அப்பியாசங்களையும் செய்தேன். உறங்கி எழுந்து வந்த குருநாதர் நான் யோகப் பயிற்சி செய்வதைப் பார்த்துப் புன்னகை செய்தார்.

  ‘உனக்குக் காய்ச்சல் விட்டுவிட்டது’ என்று சொன்னார்.

  ‘ஆம் குருஜி. இப்போது நான் நன்றாக இருக்கிறேன்’.

  ‘அப்படியானால் இன்றைக்கு நீ இனிப்பு சாப்பிடு’ என்று சொன்னார். அவரே சமையலறைக்குச் சென்று எனக்காகப் பருப்புப் பாயசம் வைத்து எடுத்து வந்து கொடுத்தார். நான் அதை வாங்கிக் குடித்தபோதுதான் அவர் சொன்னார், ‘இன்றைக்கு நாம் வெளியே போகலாம்’.

  நாங்கள் ஆறு பேர் ஒன்றாகக் கிளம்பினோம். இன்ன இடத்துக்குப் போகலாம் என்று குறிப்பாகச் சொல்லாமல் வெளியே போகலாம் என்று குருநாதர் சொன்னால் அதன் பொருள், எப்போது திரும்புவோம் என்று தெரியாது என்பது. சில சமயம் அப்படிக் காலை வேளையில் கிளம்பி இரவு ஆசிரமத்துக்குத் திரும்பிவிடுவோம். சில சமயம் அந்தப் பயணம் ஒன்றிரண்டு தினங்கள் வரை நீளும். ஒரு சமயம் இரண்டு நாள் சுற்றிவிட்டு வருவோம் என்று சொல்லிவிட்டு குருநாதர் பத்து நாள் பயணமாக அதனை மாற்றிவிட்டார். இம்மாதிரிப் பயணங்களில் நாங்கள் எந்த வாகனத்திலும் ஏறுவதில்லை. எங்கு போனாலும், எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் நடந்தேதான் போவோம். உணவைக் குறித்த கவலை பொதுவாக எங்கள் யாருக்கும் எழாத வண்ணம் குருநாதர் பழக்கியிருந்தார். அதிகபட்சம் நான்கு நாள்கள் வரையிலும்கூட எங்களால் உண்ணாதிருக்க முடிந்தது. அச்சமயங்களில் யாராவது அழைத்து சாப்பிடச் சொன்னால், ‘உணவு வேண்டாம். தலா ஒரு கோப்பை எங்களுக்கு நெய் தர முடியுமா?’ என்று குருஜி கேட்பார். எங்களுக்கு உணவிட்டுப் புண்ணியம் தேடிக்கொள்ள நினைத்த தர்மவானுக்கு அது வினோதமாகப் படும். இருந்தாலும் சாது வாய் திறந்து கேட்டுவிட்டதால் அவரால் அதைத் தட்ட முடியாமல் போய்விடும். விருந்து ஏற்பாடுகளைத் தவிர்த்துவிட்டு உடனே யாரையாவது கடைக்கு அனுப்பி ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் நெய் வாங்கி வரச் சொல்லுவார். நாங்கள் அதைக் கோப்பையில் வாங்கிக் குடித்துவிட்டு மேற்கொண்டு நடக்க ஆரம்பித்துவிடுவோம். ஒரு கோப்பை நெய்யை அருந்திவிட்டு ஆறு நாள் வெறும் நீர் மட்டும் குடித்து சோர்வின்றி வாழமுடியும் என்று குருநாதர் சொல்லித் தந்தார்.

  அன்றைக்கு நாங்கள் கிளம்பியபோது ஆசிரமத் தன்னார்வலர் ஒருவர் ஒரு பை நிறைய வறுத்த வேர்க்கடலை, கமர்க்கட்டு, அதிரசம், சப்பாத்திகள் எடுத்து வந்து கொடுத்திருந்தார். குருநாதர் யோசித்தார். ‘இதைத் தூக்கிச் செல்ல வேண்டுமே?’ என்று கவலைப்பட்டார்.

  ‘பரவாயில்லை குருஜி. நான் எடுத்து வருகிறேன். வழியில் உபயோகப்படும்’ என்று சொல்லி அந்தப் பையை நான் வாங்கிக்கொண்டேன்.

  நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். முதலில் சாலை இருந்த வழியிலேயே சிறிது நேரம் நடந்துவிட்டு, குருநாதர் சட்டென்று மலைச் சரிவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அவர் வயதுக்குக் கையில் ஒரு கழி இல்லாமல் மலைச்சரிவில் அத்தனை அநாயாசமாக அவர் இறங்கியதைப் பார்க்க எனக்கு வியப்பாக இருந்தது.

  ‘சரிவுகளில் இறங்கும்போது உடல் தன்னியல்பாகச் சற்றுப் பின்பக்கம் சாயும். அதுதான் நடக்க வசதி என்று தோன்றும். ஆனால் அது தவறான முறை. விரைவில் கால் உதற ஆரம்பித்துவிடும். உடலை முன்புறம் தள்ளி, நடை வேகத்தில் கவனம் செலுத்தி மட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் நீண்டதூரம் இவ்வாறு நடக்க முடியும்’ என்று சொன்னார்.

  அவர் சொன்னபடியே நாங்கள் நடந்தோம். அந்தக் காடு குருநாதருக்குப் பழக்கப்பட்ட இடம் போலிருந்தது. எத்தனை முறை அந்தப் பக்கம் அவர் சென்றிருப்பாரோ தெரியவில்லை. ஆனால் ஆசிரமத்துக்குள் நடப்பது போலவே அவர் வெகு இயல்பாக அங்கே நடந்து போனார். பல இடங்களில் புதர்களை விலக்கி, பாதை மாறி நடந்தார். அன்று மாலை வரை நாங்கள் நடந்துகொண்டே இருந்தோம். எங்கெங்கோ அலைந்து திரிந்து இறுதியில் காவிரியின் கண்ணுக்குப் புலப்படாத ஒரு துண்டுக்கால்வாய் ஓடி மறைந்த ஒரு பிராந்தியத்துக்கு வந்து சேர்ந்தோம். நதியின் எந்த இடத்தில் அது கிளை பிரிகிறது என்று தெரியவில்லை. ஆனால் அந்தக் கானகத்துக்குள் அந்தக் கால்வாய் தனக்கென ஒரு வழியமைத்துக்கொண்டு நெடுந்தூரம் எங்கள் உடனேயே ஓடி வந்தது. அது மீண்டும் நதியோடு சென்று சேருவதில்லை என்று குருஜி சொன்னார்.

  ‘வேறு எங்கே போகிறது?’

  ‘எங்குமில்லை. இந்தக் காட்டுக்குள்ளேயே சுற்றி வந்து காணாமலாகிவிடும்’.

  ‘புரியவில்லை குருஜி’.

  ‘சரி வா. அது இல்லாமல் போகும் இடத்துக்கு உன்னை அழைத்துச் செல்கிறேன்’ என்று சொல்லிவிட்டு அந்தக் கால்வாயின் தடம் பற்றி எங்களை அழைத்துக்கொண்டு போனார். சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு நாங்கள் அந்தக் கால்வாய்க் கரையோரமாகவே நடந்திருப்போம். எனக்கு மிகவும் களைப்பாகிவிட்டது. சிறிது நேரம் உட்கார வேண்டும் என்று தோன்றியது. குருஜியிடம் அதைச் சொல்ல வாயெடுத்தபோதுதான் அவர்களைப் பார்த்தேன். அதே கால்வாய்க் கரையோரம் நாங்கள் நடந்துகொண்டிருந்த இடத்துக்கு நூறடித் தொலைவில் நான்கைந்து பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர் சன்னியாசிக் கோலத்தில் இருந்தார். அவரைப் பார்த்ததுமே எனக்கு அடையாளம் தெரிந்துவிட்டது. ஆனால் உறங்கும்போதுகூட அவர் உடன் வைத்திருக்கும் தண்டத்தை அப்போது வைத்திருக்கவில்லை.

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai