Enable Javscript for better performance
85. கருவி- Dinamani

சுடச்சுட

  

   

  நான் வினய்யின் கரங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். உணர்ச்சி வேகத்தில் எங்கே அவன் ஓடும் ரயிலில் இருந்து விழுந்துவிடுவானோ என்ற சந்தேகம் வந்ததே காரணம். தனது அனுபவங்களை வெட்கம் பாராமல் வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டு வந்தவன் இடையிடையே கண் கலங்கி நின்றதுதான் என்னால் சகிக்க முடியாததாக இருந்தது.

  ‘இதோ பார் வினய்! கண்ணீர் என்பது ரத்தத்தினும் விலை மதிப்பற்றது. நீ அதை அதிகம் விரயம் செய்கிறாய்’ என்று சொன்னேன்.

  ‘ஆம். கையாலாகாதவன் அதைத்தான் செய்வான்’.

  ‘ஏன் அப்படி நினைக்கிறாய்? உனக்கு இன்னும் வயது இருக்கிறது. உடல் ஆரோக்கியம்கூடப் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது’.

  ‘இல்லை. நான் சர்க்கரை நோயாளி’.

  ‘அதைவிடு. என்னால் அதை மூன்று மாதங்களில் முற்றிலுமாகக் குணப்படுத்த முடியும். என் அண்ணனுக்காக நான் அதைச் செய்யமாட்டேனா? நீ ஏன் உன் மனத்தை விட்டுவிட நினைக்கிறாய்? எல்லாம் போய்விட்டது என்று ஒரு நிலை யாருக்கும் இல்லை. ஏதோ ஒன்று மிச்சம் இருப்பதால்தான் உலகம் இன்னும் அழியாதிருக்கிறது’.

  ‘அப்படியா நினைக்கிறாய்?’

  ‘நிச்சயமாக’ என்று சொன்னேன். அவனது உணர்ச்சி ஆவேசத்தைச் சற்று மட்டுப்படுத்த நினைத்து சித்ராவை வினோத்துக்குத் திருமணம் செய்துவைக்க வீட்டில் எடுத்த முயற்சிகளைப் பற்றிச் சொன்னேன். வினய்யால் அதை நம்பவே முடியவில்லை. ‘வினோத்தா அப்படிச் செய்தான்?’ என்று கேட்டான்.

  ‘மிச்சம் இருந்தவன் அவன் மட்டும்தானே? அவன்தான் செய்ய முடியும்’.

  ‘ஆனால் அவன் திருமணம் வரை சென்றிருக்க வேண்டாம்’.

  ‘இதை யார் சொல்வது? அவன் விதி அந்த ஜானவாச ஊர்வலத்துக்குப் பிறகு உறக்கம் கலைந்து எழுந்திருக்கிறது’.

  ‘சித்ரா பாவம்’.

  ‘பாவம்தான். ஆனால் அந்தப் பாவத்தில் உன் பங்கு சொற்பம் என்று நினைத்து சந்தோஷப்படு’.

  ‘அதுவும் சரிதான்’ என்று வினய் சொன்னான். சற்று சிரித்த மாதிரி இருந்தது. அது எனக்கு நிம்மதியளித்தது. உண்மையில் அவன் தனது காமாக்யா அனுபவங்களைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கவே வேண்டாம் என்றுதான் நினைத்தேன். சராசரிகளால் நுழையவே முடியாத ஒரு பேருலகின் வாசல் கதவு வரை சென்று தட்டாமல் திரும்பிவிட்ட பரிதாபம் அவனது ஒவ்வொரு சொல்லிலும் தொனித்தது.

  ‘ஆனாலும் நீ செய்தது அக்கிரமம் வினய். மூட்டை கட்டித் தலையில் ஏற்றிய பின்பு போடவேண்டாம் என்று எப்படித் தோன்றியது?’

  ‘அந்நேரம் என் மனத்தில் காமரூபிணி உதித்திருந்தால் நான் போட்டிருப்பேன்’.

  ‘முட்டாள். அவள் கர்ப்பகிரகத்தின் கதவு திறக்கவே உனக்கு நாற்பத்து எட்டு தினங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. அதெப்படி ஒரு கணத்தில் அவள் உனக்குத் தோன்றுவாள்?’

  ‘எனக்கு அச்சமாக இருந்தது விமல். நான் அந்தக் கணம் எடுத்த முடிவு மிகப் பெரிது. அது என் வாழ்நாள் சேமிப்பு. மொத்தமாக மூட்டை கட்டி பிரம்மபுத்திராவில் போட்டுவிட்டுக் காமாக்யாவுக்குப் போய் நிற்கத் தயாராக இருந்தேன். ஆனால் ஒன்றும் கிடைக்காது போயிருந்தால்?’

  ‘இதற்கு நீ நாத்திகனாக இருந்திருக்கலாம்’ என்று சொன்னேன். அவன் தனது இடாகினியுடன்தான் கல்கத்தாவுக்குத் திரும்பிப் போயிருக்கிறான். என்ன பெரிய குருமுகம்? இடைவிடாத ஜபத்தின்மூலம் எத்தகைய பேய்களையும் வசப்படுத்த முடியும் என்பதை அவன் அறிந்திருந்தான். எளிய வனதுர்க்கை மந்திரங்கள். சூரிப்போத்தி சொல்லிக் கொடுத்தவை. எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதில் இருக்கிறது புனிதமும் அவலமும். தந்திரங்களின் பெருங்கதவைத் திறக்கக் காமரூபிணி தேவையில்லை. சில பெண்கள் போதும். சில பெண் கருவிகள் போதும்.

  தனது தகுதியின்மை பற்றிய அச்சமே அவனை காமாக்யாவுக்குத் திரும்பச் செல்லவிடாமல் தடுத்தது என்பதைப் புரிந்துகொண்டேன்.

  ‘நீ போயிருக்க வேண்டும் வினய். அப்படி ஒரு இடாகினியை நீ இழந்திருந்தாலும் பாதகமில்லை. காமரூபிணி உனக்கு வைத்த பரீட்சையை நீ எழுதாமல் விட்டது தவறு. குறைந்தபட்சம் நீ அவளையாவது அறிந்துகொண்டிருக்கலாம். அவள் உண்மையா பொய்யா என்பதையாவது’.

  ‘பொய் என்கிறாயா?’

  ‘நான் சொல்லவில்லையே? உனக்கொரு தரிசனம் கிட்டியிருக்கும் என்றுதான் சொன்னேன்’.

  என்ன காரணத்தாலோ அவனுக்கு கல்கத்தாவுக்கு வந்தபின்பு உடனடியாகத் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறத் தொடங்கியிருக்கிறது. ஒரு காவித் துணியை எடுத்து மேலே போட ஒரு நபர் தேவை என்பதற்கு அப்பால் ஒரு குருவின் இருப்பும் அத்தியாவசியமும் தனக்கு அத்தனை வேண்டியிருக்காது என்று அப்போது நினைத்தான். சிவனைப் போலொரு சுயம்பு சன்னியாசியாகத் தன்னால் முகிழ்த்தெழ முடியும் என்று எண்ணிக்கொண்டான். சக்தியின் ஊற்றுக்கண்ணை உடலில் பாதியாகவும் சிரசில் மீதியாகவும் கொண்டவன் அவன். பொங்கிப் பெருகும் கங்கையென்பது விந்துப் பெருங்கடலன்றி வேறென்னவாக இருந்துவிட முடியும்?

  வினய் ஒரு முடிவுக்கு வந்திருந்தான். இனி குருவைத் தேடி அலைவதில்லை. தவங்களில் நேரம் கடத்தப் போவதில்லை. தெய்வங்கள் சௌக்கியமாக இருக்கட்டும். தேவதைகளும் சாத்தான்களும் எனக்குப் போதும். ஒன்றல்ல; இனி பத்து விரல்களிலும் கட்டுகள் இருக்கும். இடாகினிகளும் இட்சிணிகளும் சாத்தான்களும் நம்பத்தகுந்தவை. கிட்டாத பேரின்பத்துக்கு வாழ்வை ஆகுதியாக்கும் அவலத்தை இனியும் செய்வதில் அர்த்தமில்லை. எத்தனை ஆண்டுகள் வீணடித்திருக்கிறேன்! எத்தனை இரவுகளை உறங்காது கழித்திருக்கிறேன்! எத்தனை பசி. எத்தனைக் கண்ணீர். என் இருப்பின் நியாயத்தை, என் அலைதலின் அர்த்தத்தை உலகம் முழுதும் விளங்கச் செய்வது தவிர இனி வேறு பணியில்லை.

  அன்றைக்குத்தான் அவன் மோகினியைப் பார்த்தான். அதற்கு மறுநாள்தான் அவள் தனதிரு தோழிகளுடன் கல்லூரியில் இருந்து வெளியே வருவதைக் கண்டான். தன் இடக்கை கட்டை விரலைச் சுற்றியிருந்த துணியை அவிழ்த்து இடாகினியை வெளியே விட்டான்.

  எஸ்பிளனேடில் வினய் ஒரு விடுதி அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தான். மோகினி அந்த இடத்துக்கு வந்தபோது அவன் முழு நீளக் காவி அங்கி அணிந்து தியானத்தில் அமர்ந்திருந்தான். அவன் கண் விழிக்கும் வரை காத்திருந்த மோகினி, விழித்ததும் விழுந்து வணங்கிவிட்டு, ‘உங்களைப் பற்றி ஒரு பெண் மிகவும் உயர்வாகச் சொன்னாள். நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறீர்களாமே?’ என்று கேட்டாள்.

  வினய் பதில் சொல்லவில்லை. தனது இடக்கையை ஒருமுறை மூடித் திறந்து ஒரு எலுமிச்சம்பழத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான். மோகினிக்கு அதுவே பரவசமளிக்கப் போதுமானதாக இருந்தது. மீண்டும் ஒருமுறை பயபக்தியுடன் அவன் காலில் விழுந்து வணங்கி எழுந்தாள்.

  ‘உட்கார் பெண்ணே. உன் சைனஸ் இப்போது பொறுத்துக்கொள்ளும்படியாக இருக்கிறதா?’

  ‘உங்களுக்கு எப்படித் தெரியும்? மாத்திரை எடுத்துக்கொள்கிறேன் சுவாமிஜி’.

  ‘நல்லது. அந்த எலுமிச்சம்பழத்தை உன்னால் அப்படியே கடித்து உண்ண முடிகிறதா பார். விதைகளோடு சேர்த்து’.

  அவள் சற்றுத் தயங்கினாள். ‘ஒன்றும் ஆகாது. சாப்பிடு’.

  ‘எனக்குப் புளிப்பு அவ்வளவாகப் பிடிக்காது’.

  ‘சரி. அது புளிக்காது. சாப்பிடு’.

  அவள் அந்தப் பழத்தை அவன் எதிரிலேயே வாயில் போட்டு மென்று தின்று முடித்தாள்.

  ‘புளித்ததா?’

  ‘இல்லை’.

  ‘நல்லது. இனி உனக்கு சைனஸ் இருக்காது’.

  ‘உண்மையாகவா!’

  ‘அப்படித்தான் நினைக்கிறேன்’.

  ஒரு வாரம் வினய் அந்த விடுதி அறையிலேயேதான் தங்கியிருந்தான். மோகினி மீண்டும் அங்கு வரும்போது தனது தோழிகளையும் அழைத்து வந்தாள்.

  ‘சுவாமி, எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. ஒரு வாரமாக என் நோய் இருக்கும் இடமே தெரியவில்லை’.

  ‘ஓ. அது அன்றே போய்விட்டதே!’ என்று வினய் சொன்னான்.

  ‘நீங்கள் யார்? உங்கள் பெயரை நாங்கள் கேள்விப்பட்டதில்லை’ என்று மோகினியின் தோழி ஒருத்தி சொன்னாள்.

  ‘பெயரில் என்ன இருக்கிறது? நான் இந்த ஊருக்குப் புதியவன். உங்களுக்கு முற்றிலும் புதியவன். ஆனாலும் யாரோ என்னைப் பற்றி உங்களிடம் சொல்லியிருக்கிறார்கள்’.

  ‘ஆம் சுவாமிஜி. ஒரு பெண்மணி. அவரை எனக்கு இதற்கு முன்னால் அறிமுகமில்லை. காளி கோயிலுக்குப் போயிருந்தபோது சந்தித்தேன். இப்படி ஒரு சுவாமிஜி தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறார் என்று அவர்தான் சொன்னார்’.

  வினய் சிறிது யோசித்தான். ‘நீ யாரைச் சந்தித்தாய் என்று எனக்குத் தெரியவில்லையம்மா. நான் கல்கத்தா வந்ததில் இருந்து யாரையுமே சந்திக்கவில்லை. என்னை வந்து சந்தித்த முதல் பெண் நீதான்’.

  ‘அப்படியா? அப்படியென்றால் கோயிலில் எனக்கு உங்களைப் பற்றிச் சொன்னது யாராக இருக்கும்?’ என்று மோகினி கேட்டாள்.

  வினய் அதற்கு பதில் சொல்லவில்லை. கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்தான். பிறகு கண் விழித்துப் புன்னகை செய்தான்.

  ‘சரி விடு. உனக்கு உதவ வேண்டும் என்பது எனக்கு இயற்கை இட்ட கட்டளை. அதைச் செய்துவிட்டேன். உனக்கு சந்தோஷம் என்றால் சரி’.

  அந்தப் பெண்கள் வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள். மிக நிச்சயமாகக் காளியேதான் ஒரு சராசரி வங்காளப் பெண்ணின் தோற்றத்தில் வந்து தங்களை அவனிடம் செலுத்தியதாக நினைத்தார்கள். மோகினியின் ஒரு தோழிக்குச் சிறிது கடன் தொல்லை இருந்தது. குடும்பச் சிக்கல்கள். அப்பா சரியில்லாத வீடு. அவள் அதைச் சொல்லி வருத்தப்பட்டபோது வினய் அவளுக்கு ஒரு தாயத்தைக் கொடுத்தான். ‘இதைக் கொண்டு உன் அப்பாவுக்குக் கட்டிவிடு. இரண்டொரு தினங்களில் சரியாகிவிடும்’.

  ‘சுவாமி, அவருக்கு ஏழு லட்சம் கடன் இருக்கிறது’.

  ‘அப்படியா? பரவாயில்லை. கொண்டு போய்க் கட்டு’ என்று வினய் சொன்னான்.

  அந்த இன்னொரு பெண்தான் சற்று வினோதமான பிரச்னையைச் சொன்னாள். அவளுக்கு மூன்று காதலர்கள் இருந்தார்கள். மூவரையுமே அவளுக்குப் பிடிக்கும். மூவரில் யாரை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் அவள் இருந்தாள். ‘சுவாமி இது தவறா? என் வாழ்க்கை சகிக்க முடியாதபடி ஆகிவிடுமா?’

  ‘உன் பெயர் என்ன?’ என்று வினய் கேட்டான்.

  மஞ்சுளா என்று அவள் பதில் சொன்னாள். சில விநாடிகள் அமைதியாக யோசித்த வினய், ‘நீ நாளை இரவு இங்கே வா’ என்று அவளிடம் சொன்னான்.

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai