Enable Javscript for better performance
45. புல்லாகுதல்- Dinamani

சுடச்சுட

  

   

  சந்தடி அடங்கிய சாலையில் நான் நடந்துகொண்டிருந்தேன். இருபுறமும் கரிய பெரும் தவலைகள் போல் மரங்கள் அடர்ந்து கவிந்து சாலையை மூடியிருந்தன. காற்றின் வெம்மை தணிந்து ஈரம் கலந்திருந்தது. எங்கோ குரைத்த நாயின் இருப்பு நான் முற்றிலும் நினைவகன்று போய்விடாமல் காத்தது. எத்தனை நேரமாக நான் நடந்துகொண்டிருந்தேன் என்று தெரியவில்லை. ஆனால் நிற்கவில்லை. எங்கும் நின்றுவிடத் தோன்றவில்லை என்பதுதான் உண்மை. அவள் பேசிய சொற்கள் ஒரு ரவுடியின் அடாவடித்தனம் போல என்னைப் புரட்டியெடுத்துக்கொண்டிருந்தன.

  வெறும் பாசம். வேறெந்த உணர்ச்சியையும் அது இல்லாமல் செய்துவிடுமென்றால் அதன் வீரியத்தைக் குறைத்து மதிப்பிட இயலாது. எனக்கும் பாசம் உண்டு. அதை நான் ஒரு போர்வையென எடுத்து விரித்து அனுபவித்திருக்கிறேன். யார் மீதாவது வைக்கிற பாசம். எதன் பொருட்டாவது நெகிழச் செய்துவிடுகிற உணர்ச்சி. எனக்கு அம்மாவைப் பிடிக்கும். என் வாழ்வில் நான் சொன்ன பொய்கள், மாற்றிப் பேசிய நிஜங்கள், நடக்காது என்று எனக்கே தெரிந்தும் அளித்த வாக்குறுதிகள் யாவும் அவளுக்காகச் சொன்னவை. கணப் பொழுது அவளை மகிழ்வடையச் செய்வதற்கு நான் எதையும் செய்யக்கூடியவனாக இருந்திருக்கிறேன் என்பதை விழிப்புடன் எண்ணிப் பார்த்தேன். ஆனால் உண்மையில் அவள் மகிழ்ச்சியடைந்தாளா, நான் சொன்னவற்றை நம்பினாளா, ஏற்றாளா என்று பரிசீலனை செய்ததில்லை. இறங்கிப் போகிற போக்கில் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிற பஸ் டிக்கெட்டைப் போலவே சொற்களை அவளிடத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். சொற்கள் என்றால் பொய்கள். சொற்கள் என்றால் பூச்சுகள் கொண்டவை. புன்னகை ஏந்தியவை. நம்பிக்கை தருபவை. அவற்றின் நோக்கம் ஒன்றுதான். அவள் சந்தோஷப்பட வேண்டும்.

  எதிலிருந்து இந்தப் பாசம் உற்பத்தியாகிறது என்று எண்ணிப் பார்த்தேன். எனக்கு அம்மாவின் மீதிருந்த அத்தகைய உணர்ச்சி அப்பாவின் மீது இருந்ததில்லை. இதற்கும் எனக்குக் காரணம் தெரியவில்லை. நியாயமாக என் அப்பாவைத்தான் நான் அதிகம் விரும்பியிருக்க வேண்டும். மிகக் குறைந்த வருமானத்தில், கவனமாகத் திட்டமிட்டுக் குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்த மனிதர். வஞ்சனையின்றி வீட்டில் அனைவரையும் அவர் நேசித்தார். எதிலும் என்றைக்கும் கூடுதல் குறைவு என்பதே கிடையாது. பாசமோ கோபமோ வேறெதுவோ. எல்லாவற்றையும் எல்லாருக்கும் சரி சமமாகப் பிரித்துத் தரத் தெரிந்த மனிதர். அம்மாகூட யாருக்கு எது பிடிக்கும் என்று யோசித்துச் செய்கிறவள். ‘உனக்கு இன்னிக்கு கரமுது இவ்ளோதான். கத்திரிக்காய்னா வினய்க்கு ரொம்பப் பிடிக்கும். இன்னும் இருக்கான்னு கேப்பான். அவனுக்கு வை’ என்று தீர்மானமாகச் சொல்லி எடுத்து வைத்துவிடுவாள். அப்பா என்றும் அப்படி நடந்துகொண்டதில்லை. எங்கள் சிறு வயதுகளில் தீபாவளிக்குத் துணி எடுக்கப்போகிற தினம் ஒன்று போதும் உதாரணத்துக்கு.

  எனக்கு நினைவு தெரிந்து அப்பா கோ-ஆப்டெக்ஸ் தவிர வேறெங்கும் புதுத்துணி வாங்கமாட்டார். விலை மலிவு என்பதைத் தாண்டி ஏதோ கடமைப்பட்டவர் போல அவர் நடந்துகொள்வதாக எனக்குத் தோன்றும். அவர் ஏன் மற்ற கடைகளைப் பொருட்படுத்துவதில்லை என்று நாங்கள் அனைவரும் எத்தனையோ முறை கேட்டுவிட்டோம். அவர் பதில் சொன்னதில்லை. அம்மாவுக்குப் புடைவைகூட அங்கேதான். அபூர்வமாக ஒரு தீபாவளிக்குப் பட்டுப்புடைவை வாங்கிக் கொடுத்தார். அதைக்கூட கோ-ஆப்டெக்ஸில்தான் வாங்கினார்.

  ‘நல்லில நன்னாருக்கும்னு எல்லாரும் சொல்றா’ என்று அம்மா போகிற வழியில் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் அப்பா பொருட்படுத்தவில்லை. அடையாறில் இறங்கி, அதே கோ-ஆப்டெக்ஸ். ‘என்ன பிடிச்சிருக்கோ எடுத்துக்கோ’ என்று சொல்லிவிட்டு ஒதுங்கி நின்றார்.

  எங்கள் நான்கு பேருக்கும் எப்போதும் அவர் தேர்ந்தெடுப்பது கைத்தறிச் சட்டைத் துணியும் காட்டன் பேண்ட் துணியும்தான். எந்த நிறம், என்ன டிசைன் என்பதைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர் எங்களிடம் வழங்கிவிடுவார். யாராவது ஒருவர் சொல்வதை எல்லோரும் ஏற்றுக்கொள்வோம். ஆனால் ஒரே ஒரு தேர்வுதான் சாத்தியம். அப்பா, நான்கு பேருக்கும் அந்தத் துணியிலேயே கிழிக்கச் சொல்வார். யாரும் வேறொன்றை விரும்பிவிட முடியாது. எந்தப் பண்டிகைக் காலத்திலும் நாங்கள் ஆளுக்கொரு வண்ணமும் வடிவமைப்பும் கொண்ட ஆடையை அணிந்ததில்லை. பள்ளிக்கூடத்தில் உள்ளதைப் போலவே வீட்டிலும் யூனிபார்ம் அணிவது எங்களுக்குப் பழகிப்போனது.

  கேசவன் மாமாதான் சொன்னார். ‘அத்திம்பேருக்கு சட்டைத் துணிலகூட வித்தியாசம் இருந்துடக் கூடாது. அததுக்கு கல்யாணமாகி நாலு பொண்ணுகள் ஆத்துக்கு வரவரைக்கும் அவர் கணக்கு நாலில்லே; ஒண்ணுதான்.’

  ஆனாலும் எனக்கு அம்மாவின் மீதுதான் பிரியம் மிகுந்திருந்தது. அப்பாவை அதிகம் விரும்பிய அண்ணாவும் வினய்யும் வீட்டை விட்டு ஓடிப்போனது ஒருவேளை என்னை பாதித்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பிருந்தே நான் அப்படித்தான். அண்ணாக்கள் இருவரும் விட்டுச் சென்றபின் அந்தப் பாசத்தின் கனம் அதிகரித்ததே தவிர, சற்றும் குறையவில்லை. சொன்னேனே, பொய்கள்? அவை அவளுக்காக. அவளது சந்தோஷத்துக்காக.

  அந்தக் கொலைகாரப் பெண் என்னைப்போலத்தான் இருந்திருக்கிறாள். மட்ட ரகமானதொரு தாயாக இருந்தாலும் அவளைக் கொல்ல மனம் வரவில்லை என்று அவள் சொன்னாள். எனக்கு அது மிகவும் வியப்பாக இருந்தது. கொல்ல வேண்டாம். ஒரு வெறுப்பு இராதா? நான் கிளம்பும்போது, ‘சாப்பிடறியா தம்பி?’ என்று கேட்டுவிட்டு ஒரு பாத்திரத்தை எடுத்து வைத்தாள். அதில் பிசைந்த சாம்பார் சோறு இருந்தது.

  ‘அந்தக் கருமம் புடிச்சவ இன்னும் வீடு வரல பாரு. அவளுக்காகத்தான் எடுத்து வெச்சேன். பரவால்ல, நீ தின்னுடு’ என்று சொன்னாள். நான் அதை மறுத்துவிட்டுப் புறப்பட்டேன். பேருந்து நின்றிருந்த இடத்துக்கு நான் வந்தபோதே ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. வண்டி கிளம்பிச் சென்றிருக்கும் என்று தெரியும். ஆனால் நான் எந்த வண்டியிலும் ஏற நினைக்கமாட்டேன் என்பதை அப்போது உணரவில்லை. நடக்கலாம் என்று நினைத்தேன். முக்கால் மணி நேரம் நடந்தபின்பு, நடந்துகொண்டே இருக்கலாம் என்று தோன்றியது. ஒரே சிந்தனைதான். அம்மாவின் மீது எனக்கிருந்த பாசம் என்னை அச்சம் கொள்ள வைத்துக்கொண்டிருந்தது. வாழ்வில் முதல் முறையாக நான் அவளை எண்ணி அஞ்ச ஆரம்பித்தேன். ஒரு போதைப் பொருளினும் வீரியம் கொண்ட உணர்ச்சிக்கு நான் ஒருபோதும் அடிமையாகிவிடக் கூடாது என்று நினைத்தேன். எனக்குக் கடவுள் வேண்டாம் என்று முடிவு செய்திருந்ததற்கு என்ன காரணம் வைத்திருந்தேனோ, அதுவேதான் அம்மா விஷயத்திலும் என்று தோன்றியது. அம்மாக்கள் கடவுள்கள்தாம். அதில் சந்தேகமில்லை. ஆனால் எனக்குக் கடவுள்களின் தேவை அத்தனை முக்கியமாக இருக்காது என்று பட்டது.

  இதுதான் விரக்தியா, இதுதான் என்னை வீட்டை விட்டு நகர வைக்கிறதா என்று கேட்டுக்கொண்டேன். இல்லை என்று தோன்றியது. நான் விரக்தி கொள்ள இந்த உலகில் ஒன்றுமே இல்லை. நான் அனைத்தையும் நேசித்தேன். உலகில் காணக் கிடைக்கும், நுகரக் கிடைக்கும் ஒவ்வொன்றும் எனக்கு உவப்பானவையாகவே இருந்தன. அம்மாவின் மடிச் சூடு நான் அறிவேன். சாலையோரத் தேநீர் விடுதியில் என் கையைப் பிடித்து இழுத்த விலைமகளின் ஸ்பரிசமும் அதே போலத்தான் சுட்டது. கொலையைச் செய்துவிட்டு உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த இந்தப் பெண்ணின் கண்ணீரும்கூட அதே தகிப்பில்தான் இருக்கும்.

  நல்லது. எனக்குக் கண்ணீருடன் உறவில்லை. அற்புதங்களில் ஆர்வமில்லை. ரகசியங்களைத் தூக்கிச் சுமந்து சுமந்து மூச்சு முட்டுகிறது. ஒரு கணத்தில் உதறிவிடக்கூடிய எல்லாவற்றையும் ஏன் இன்னும் உதறாதிருக்கிறேன்? ஒரு அம்மா. ஒரு அப்பா. ஒரு வீடு. ஒரு குடும்பம். ஒரு நட்பு வட்டம். ஒரு வாழ்க்கை. ஒரு சௌகரியத்துக்குப் பழகிவிடுகிற மனம் இப்படித்தான் பாசத்தின் பூச்சுக்குள் தன்னை மறைத்துக்கொள்ளும் என்று தோன்றியது. இனி யார் மீதும் பாசம் செலுத்த வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டேன். என் பிரத்தியேகமான அக்கறைக்குரிய ஒரே ஜென்மம் நானாகவே இருந்துவிட முடிவு செய்தேன். அதுகூட அத்தனை அவசியமா? ஒரு புல்லைப் போல் அடையாளமற்று இருந்துவிட்டுப் போய்விடுவது பரம சுகமாயிருக்கக்கூடும். ஆனால் எனக்கு அடையாளங்களுடன் பிரச்னை இல்லை. உறவுகள்தான். அது மட்டும்தான்.

  ஒரு காரியம் செய்தேன். எனக்கு அச்சமில்லை என்பதை நானே நிரூபித்துக்கொள்ள முடிவு செய்து, ஓர் உணவகத்தின் வாசலில் இருந்த தொலைபேசியில் இருந்து என் வீட்டை அழைத்தேன்.

  அம்மாதான் எடுத்தாள்.

  ‘விமல் பேசறேம்மா’ என்றதும் அவள் அலறிவிட்டாள். உடனே சத்தம் போட்டு அப்பாவை அழைத்து, மாமாவை அழைத்து, வினோத்தை அழைத்து களேபரப்படுத்திவிட்டாள்.

  ‘எங்கடா போய்த் தொலைஞ்சே கடங்காரா? நாங்கல்லாம் உசிரோட இருக்கறதா சாகறதா?’ என்று கேட்டாள்.

  நான் மிகவும் திடப்படுத்திக்கொண்டு சொன்னேன். ‘நீ இருப்பேம்மா. சாகமாட்டே. ஆனா இனிமே நான் உனக்கில்லை. வரேன்’ என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன். மீண்டும் கால் போன திக்கில் நடக்க ஆரம்பித்தேன்.

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai