வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட இருந்தவர்களுடன் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
மம்சாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட காந்திநகர், ஒத்தப்பட்டி, நரையன்குளம் கிராமங்களின் விவசாயிகளிடம் பாலை சட்டத்திற்கு முரணான அளவைகளில் அளந்து பால் கொள்முதல் செய்பவர்கள் பெற்று வந்துள்ளனர்.
மேலும் கறவைக் கூலி வாரத்திற்கு ரூ.100 மட்டுமே வழங்கப்பட்டு வந்தததாம். இக் குறைகளை நிவிர்த்தி செய்ய வலியுறுத்தி, மம்சாபுரம்-காந்திநகர் பஸ் நிறுத்தத்தில் பசுக்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அழைப்பு விடுத்திருந்தனர். இதன்படி காலையில் பசுக்களுடன் கிராம மக்கள் திரண்டனர்.
சம்பவ இடத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் சாந்தா, கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசன், மம்சாபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் விரைந்து வந்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பால் கொள்முதல் செய்வோரிடம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு எட்டப்பட்டது. உடன்பாட்டின்படி, சரியான அல்லது சட்டப்படி முத்திரையிடப்பட்ட அளவைகளில் பால் அளந்து கொள்முதல் செய்யப்பட வேண்டும்.
பால் உற்பத்தியாளர்கள் தங்கள் மாடுகளிடம் கறக்கும் கறவைக் கூலியாக ரூ.90 வீதம் கூலியாகக் கொடுத்து வாங்கிக் கொள்வது என்றும் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கொள்முதல் செய்வோர் ஆகிய இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதனையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் இப் பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது. பேச்சு வார்த்தையில் ராஜபாளையம் தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் இ.முத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் க.இன்பவல்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.