கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மின்சார சிக்கன வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி துணை வேந்தர் எஸ்.சரவணசங்கர் தலைமையில் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் மின்சார கட்டுப்பாட்டு அதிகாரி பழனிச்சாமி வரவேற்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட மின்வாரி செயற் பொறியாளர் கோ.வா.பழனிவேல் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
1975-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு மின்வாரியம் இதுவரை 2.46 கோடி மின் இணைப்புகளைக் கொடுத்துள்ளது. இதில் விவசாயத்திற்கு 20 லட்சம் மின் இணைப்புகள் இலவசமாக தரப்பட்டுள்ளது.
வீடு, கடை. தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு மின்சாரக் கட்டணம் தமிழ்நாட்டில் மிகக் குறைந்தபட்சமாகவே உள்ளது. தற்போது மின்சார வாரியம் ரூ.5 கோடி நஷ்டத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் மின் தேவை 12500 மெகாவாட் ஆகும். ஆனால் காற்றாலை, அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம் உள்ளிட்டவற்றின் மூலம் தமிழ்நாட்டில் 10500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதனை சமாளிக்க மின்சார சிக்கனம் தேவை. எனவேதான் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. ஒரு மெகாவாட் உற்பத்தி்க்கு 1987-ம் ஆண்டு கணக்குப்படி ரூ.3 கோடி தேவைப்பட்டது.
ஆனால் இன்று தூத்துக்குடி, எண்ணூர், வடசென்னை ஆகிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் ஒரு மெகாவாட் மின் உற்பத்திக்கு ரூ.6 கோடி செலவாகிறது. ஒடிஸாவிலிருந்து நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. இதற்கு செலவுகள் அதிகமாகிறது. மேலும் வற்றும் வளமான நிலக்கரி வரும் 25 ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும். எனவேதான் அணு மின்நிலையங்கள் ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து ஏற்படுத்தப்படுகின்றன. தனியார் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் விலை மிக அதிகமாக உள்ளது.
தண்ணீர் மூலம் கிடைக்கும் மின் உற்பத்தி விலை குறைவு. சராசரியாக எந்த முறையில் மின்சாரம் உற்பத்தி செய்தாலும் 1 யூனிட் மின் உற்பத்தி செய்ய ரூ.5 செலவாகிறது. ஆனால் வீட்டிற்கு 1 யூனிட் ரூ.1.10 க்கும் தொழிற்சாலைகள், கடைகள், உயர் அழுத்தம் ஆகியவற்றிற்கு ரூ.8 வரை வாங்கப்படுகிறது என்றார் அவர்.
உதவி கோட்ட பொறியாளர் பாஸ்கரன் பேசுகையில் கூறியதாவது: ஸ்டார் ரேட் உள்ள மற்றும் ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட மின்சாதனப் பொருட்களையே அனைவரும் பயன்படுத்த வேண்டும். சி.எப்.எல்., எல்.இ.டி. போன்ற விளக்குகளைப் பயன்படுத்தினால் மின்சாரம் சிக்கனமாகும். மேலும் காலை 6-9 மணி மற்றும் மாலை 6-9 மணி ஆகிய நேரங்களில் அதிக அளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த முயற்சிக்க வேண்டும். 1 மின் விளக்கு 40 வாட்ஸ் என்றால், 1 மின் விளக்கு 54 வாட்ஸ் மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது என்றார் அவர்.
உதவிப் பொறியாளர் ஜி.முருகேசன் பேசுகையில் கூறியதாவது: குளிர்சாதனப் பெட்டியை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை 30 நிமிடம் அணைத்து வைக்கலாம். தற்போது கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் இருந்தாலும், இதன் மூலம் ஜூன் முதல் செப்டம்பர் வரை மட்டுமே மின்சாரம் கிடைக்கும். மாணவர்கள் மரபு சாரா மின் உற்பத்திக்கு புதிய முறைகளைக் கண்டறிய வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். குன்னூர் மின் பொறியாளர் இலக்குவன் நன்றி கூறினார்.