அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட அனைத்து பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாள் பயிற்சி 6 குறுவள மையங்களில் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி தலைமையில் நடைபெற்றது.
பயிற்சியை நிறைவு செய்து வைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் சரக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் பேசுகையில் கூறியதாவது: சமுதாயமும் பள்ளியும் ஒருங்கிணைந்து செயலாற்றினால்தான் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்ய முடியும் என்ற கருத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
நம்ம பள்ளி, நம்ம குழந்தைகள் என்ற எண்ணம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் வந்தால்தான் பள்ளியும், மாணவர்களும் மேன்மையடைய இயலும் என்றார் அவர். மனித உரிமைகள், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், சட்டத்தில் ஆசிரியர் பங்கு, உள்ளூர் அதிகார மையத்தின் பங்கு, பள்ளி மேலாண்மைக் குழு எவ்வாறு தேர்வு செய்யப்பட வேண்டும், பள்ளி மேலாண்மைக் குழுவின் பணிகள், பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரித்தல் உள்ளிட்டவை கலந்துரையாடல் மூலம் மூன்று நாள் பயிற்சியாக அளிக்கப்பட்டது.