சுதந்திர தினவிழாவில் கௌரவிக்க  மாவட்ட நிர்வாகம் தேடிய 'விஐபி'

மதுரை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சுதந்திர தின நிகழ்ச்சியில் விருது வழங்க கரோனா நிதியாக ரூ.80 ஆயிரத்தை யாசகம் பெற்று வழங்கிய பூல்பாண்டியனை  தேடி அலைந்தனர். 
யாசகம் பெற்று கரோனா நிதியளித்த பூல்பாண்டியன்
யாசகம் பெற்று கரோனா நிதியளித்த பூல்பாண்டியன்

மதுரை மாவட்ட நிர்வாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் ஒரு நபரை தீவிரமாக தேடினர். பத்திரிகையாளர்கள், காவல் துறையினர் என பலவேறு தரப்பிலும் வருவாய்த் துறையினர் அவரைப் பற்றி விசாரித்து வந்தனர். இருப்பினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 

அதிகாரிகள் வலைவீசி தேடிய அந்த நபர். பல இடங்களிலும் சென்று யாசகம் பெறும் பூல்பாண்டியன் என்ற பிச்சைக்காரரை. சரி அவரை ஏன் தேட வேண்டும்?.

யாசகம் பெற்ற பணத்தை ஒரு முறை அல்ல. கடந்த மார்ச் முதல் இதுவரை 8 முறை பூல்பாண்டியன் ரூ. 10 ஆயிரம் , 10 ஆயிரமாக கரோனா நிவாரண நிதியாக ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.

சுதந்திர தினவிழாவில் தன்னார்வலர்களுக்கு விருது வழங்குவற்கான பட்டியலை ஆட்சியர் டிஜி வினய் பார்வைக்கு வெள்ளிக்கிழமை அலுவலர்கள் வைத்துள்ளனர். அப்போது பாண்டியன் நினைவுக்கு வந்ததையடுத்து அவருக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும். அழைத்துவர ஏற்பாடு செய்யுங்கள் என ஆட்சியர் அறிவுறுத்தயுள்ளார். அதன்படி, அவரது பெயர் விருதாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இருப்பினும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால் விழாவுக்கு அழைத்துவர முடியவில்லை. 

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்துடன் நல்ல நிலையில் இருந்துள்ளார்.  மனைவியின் இறப்புக்குப் பிறகு குடும்பத்தினர் ஆதரவின்மையால் யாசகம் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இருப்பினும்  கொள்கையுடன் வாழ்ந்து வந்த பூல்பாண்டியன் யாசகம் பெறுவதில் தனது உணவு தேவைக்குப் போக நல்ல காரியங்களுக்குச் செலவிடுகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், நாற்காலி போன்றவற்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.

கரோனா பரவல் தொடங்கியபோது மதுரையில் இருந்த இவர் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆதரவற்றோர் முகாமில் தங்கியிருந்தார். பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து யாசகம் பெறுவதை தொடங்கினார். இதுவரை யாசகம் பெற்ற பணத்தை கரோனா நிவாரண நிதிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.

மதுரை மக்களுக்கு மிகவும் பரீட்சயமாகிவிட்ட இவர் செல்லும் இடங்களில் அவரது பொதுநலத்தை அறிந்து மக்கள் முடிந்தளவு யாசகம் வழங்கி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com