தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு 57 பொதுச்செயலர்களும் 104 செயலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சிக்கு 32 துணைத் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாளராக மட்டும் ஒரே ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஏற்கெனவே கே.எஸ். அழகிரி செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மாநில காங்கிரஸ் கட்சிக்குப் புதிய நிர்வாகிகளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
இதையும் படிக்கலாமே.. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு நிர்வாகிகள் நியமனம்: வசந்தகுமாரின் மகன் பொதுச் செயலாளர்
காங்கிரஸ் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியலை கட்சியின் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.
நிர்வாகிகளின் பட்டியல் மிகப் பெரிய ஜம்போ பட்டியலாக விளங்குகிறது.
தலைவரும் பொருளாளரும்தான் தனியொருவர். பிற பதவிகள் அனைத்துக்குமே ஏராளமானோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு காலத்தில் இரண்டு அல்லது மூன்றாக இருந்து பின்னர் 4, 5 ஆக மாறிய பொதுச்செயலர்களின் எண்ணிக்கை தற்போது 57 ஆக அதிகரித்துள்ளது. இவர்களைத் தவிர்த்து இவர்களைப் போல இரு மடங்கு, 104 செயலர்கள் வேறு. குஞ்சம் குறைவாக 32 பேர்தான் துணைத் தலைவர்கள்.
இதையும் படிக்கலாமே.. தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம்: கார்த்தி சிதம்பரம் விமர்சனம்
அனைத்து மாநில செயற்குழுவுக்கு 56 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 32 மாவட்டங்களுக்கும் தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதேச தேர்தல் குழு உறுப்பினர்களாக 34 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் அலுவல்பூர்வமாக மேலும் 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களாக 19 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழு மட்டுமின்றித் தேர்தல் பிரசாரக் குழுத் தனியே 38 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விளம்பரக் குழுவுக்கு 31 பேர், தேர்தல் அறிக்கைக் குழுவுக்கு 24 பேர், ஊடக ஒருங்கிணைப்புக் குழுவுக்கு 16 பேர், தேர்தல் மேலாண்மைக் குழுவுக்கு 6 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கட்சி ஏதாவது ஆலோசனைக் கூட்டம் நடத்துவதென்றால்கூட அனேகமாகத் திடல்களில்தான் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்போல!