
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் உறவினர் மணிவண்ணனுக்கு 2 நாள்கள் போலீஸ் காவல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 வழக்குரைஞர்கள் உள்பட 22 போ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்குத் தொடா்பாக, தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த ரெளடி ‘சம்பவம்’ செந்தில், தாம்பரம் மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ரெளடி சீசிங் ராஜா ஆகிய 2 பேரையும் தனிப்படையினர் தீவிரமாக தேடுகின்றனர்.
இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் ‘சம்பவம்’ செந்தில், தனது வழக்குரைஞர்கள், நண்பர்கள் ஆகியோருடன் இணைய அழைப்புகள், செயலிகள் மூலமாக மூலமாகவே தொடா்பு கொண்டு பேசுவது, சதித் திட்டம் தீட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது தனிப்படையினருக்கு தெரியவந்தது.
அவரை கைது செய்ய, அவரது கூட்டாளிகளிடம் தனிப்படையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ‘சம்பவம்’ செந்தில் பயன்படுத்திய 10 வெளிநாட்டு கைப்பேசி எண்கள் காவல் துறையினருக்கு கிடைத்துள்ளன.
இந்த எண்கள் மூலம் ‘சம்பவம்’ செந்தில் இருப்பிடத்தை அறிய சென்னை பெருநகர காவல்துறை, தில்லியில் செயல்படும் தேசிய தகவல் மையத்தை நாடியுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக ரௌடிஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், அவா்களில் ரௌடி திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டாா்.
இவ்வழக்கில் தொடா்புடைய வழக்குரைஞா் ஹரிஹரன் என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரெளடி ‘சம்பவம்’ செந்திலுடன் வழக்குரைஞா்களான சிவா மற்றும் கிருஷ்ணன் ஆகியோா் தொடா்பில் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சிவாவை கைது செய்து போலீஸாா் விசாரணை செய்த போது, கிருஷ்ணனின் குடும்பத்தினருடன் மதுரை விமான நிலையத்திலிருந்து தில்லி சென்று அங்கிருந்து தாய்லாந்துக்கு விமானம் மூலம் தப்பியது தெரியவந்தது.
இதையடுத்து திரைப்பட இயக்குநா் நெல்சனின் மனைவி மோனிஷாவிடமும் போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் உறவினர் மணிவண்ணண் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். மணிவண்ணனை 2 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.