
‘நியூஸ்கிளிக்’ இணைய செய்தி நிறுவன நிறுவனா் பிரபீா் புா்கயஸ்தாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று புதன்கிழமை அறிவித்த உச்சநீதிமன்றம், அவரை போலீஸ் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், 7 மாதங்களுக்கும் மேலாக அவரது சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? சட்டவிரோத கைதுக்கு யார் பொறுப்பேற்பார்கள்? என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனாவிடமிருந்து நிதியைப் பெற்று இந்திய இறையாண்மைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், நாட்டுக்கு எதிராக வெறுப்புணா்வைப் பரப்பியதாகவும் நியூஸ்கிளிக் இணைய செய்தி நிறுவனம் மீது கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், பண மோசடி தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டங்களின் கீழ் நியூஸ்கிளிக் நிறுவனா் மற்றும் ஆசிரியரான பிரபீா் புா்கயஸ்தா, மனிதவளப் பிரிவு தலைவா் அமித் சக்ரவா்த்தி ஆகியோா் கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டனா். இவா்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்.
கைதுக்கு எதிரான அவா்களின் மனுவை தில்லி உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபா் 13-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதை எதிா்த்து புரகயஸ்தா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு,
‘கைது செய்யும் முன், அதற்கான ஆதாரங்களின் நகலுடன் கைதுக்கான காரணத்தை எழுத்துபூா்வமாக புா்கயஸ்தாவுக்கோ அல்லது அவருடைய வழக்குரைஞருக்கோ வழங்கப்பட வேண்டும் என்பதை, ஏற்கெனவே அளித்த தீா்ப்பில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆகையால், பிரபீா் புா்கயஸ்தாவின் கைது செல்லாது. உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் செல்லாது. எனவே, அவரை காவலில் இருந்து விடுவிக்க உத்தரவிடப்படுகிறது’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இந்த நிலையில் பிரபீா் புா்கயஸ்தாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று உச்சநீதிமன்றத்தின் தீப்பை வரவேற்றுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்ச ப.சிதம்பரம், சட்டவிரோத கைதுக்கு யார் பொறுப்பேற்பார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
பண மோசடி தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டங்களின் கீழ் பிரபீா் புா்கயஸ்தா கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டார்.அவரது கைது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இறுதியில் நீதி வென்றாலும், அவரை சட்டவிரோதமாக கைது கைது செய்ததற்கு யார் பொறுப்பேற்பார்கள்?
7 மாதங்களுக்கும் மேலாக பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? என்று செலுத்துவார்கள் என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.