
தமிழக முதல்வர் கூட்டம் முடியும் வரை அரிவாளுடன் காத்து கிடந்த மக்கள், கூட்டம் முடிந்த உடன் வாழைக்குலை மற்றும் கரும்புகளை வெட்டி எடுத்து சென்றனர். வாழைக்குலைகள், கரும்புகளை உடைத்து தலையில் சுமந்து கொண்டு அங்கும் இங்கும் ஓடிய காட்சி வேடிக்கையாக இருந்தது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு வந்திருந்தார். வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு நலத்திட்ட வழங்கும் விழா மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.
முதல்வர் வருகைக்காக அந்த பகுதி முழுவதும் கரும்புகள் மற்றும் வாழைக்குலைகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான வாழைக்குலைகளும் கரும்புகளும் அடுக்கி வைக்கப்பட்டு காட்சிப் பொருளாக இருந்தது.
இந்த நிலையில்,வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் ஒரு மணி நேரத்தில் முடிந்து முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.
இதையடுத்து அந்த கட்டப்பட்டிருந்த தோரணங்களாக கட்டப்பட்டிருந்த வாழைக்குலைகளையும் கரும்புகளையும் வெட்டி எடுத்துச் செல்வதற்காக அரிவாளுடன் காத்திருந்த மக்கள் கூட்டம், கூட்டம் முடிந்த ஒரு சில நிமிடங்களிலேயே களத்தில் இறங்கினர்.
தோரணங்களாக கட்டப்பட்டிருந்த வாழைக்குலைகளை வெட்டி எடுத்தும் கரும்புகளை உடைத்துக் கொண்டு தலையில் சுமந்து கொண்டும் தங்களது உயிர்களையும் பொருட்படுத்தாமல் அங்கும் இங்கும் ஓடிய காட்சி காண்போரை வேதனைக்குள்ளாக்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.