நாகை - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்!

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.
நாகை - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்!
Published on
Updated on
2 min read

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.

பயணச்சீட்டு விலைக் குறைப்பு, கப்பலில் காலை, மதிய உணவு இலவசம் என பயணிகளை ஈர்க்க கப்பல் நிறுவனம் சலுகைகளை அறிவித்துள்ளது.

நாகையிலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை கடந்த 2023 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார்.

ஆண்டுதோறும் வானிலை மாற்றம் காரணமாக நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 2024 நவம்பரில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் வானிலை சீரடைந்து தொழில்நுட்ப அனுமதி கிடைத்ததின்பேரில் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் சனிக்கிழமை (இன்று) தொடங்கியது.

காலை 6 மணிக்கு துறைமுகம் வந்த பயணிகள், துறைமுக அலுவலர்கள் சோதனைக்குப் பிறகு கப்பலில் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக கப்பலில் ஏறிய பயணிகளை ரோஜாப்பூ கொடுத்து கப்பல் நிறுவனத்தினர் வரவேற்றனர்.

நாகையிலிருந்து 83 பயணிகள் இலங்கை காங்கேசன் துறைக்கு சென்றுள்ள நிலையில், பிற்பகலில் இலங்கை காங்கேசன் துறையில் இருந்து 85 பயணிகள் நாகைக்கு வரவுள்ளனர்.

பயணிகளைக் கவரும் வகையில் இலங்கை செல்வதற்கு ஒரு வழிக் கட்டணமாக ரூ.4,250 , இருவழிக் கட்டணமாக ரூ.8,500 எனவும் பயணச்சீட்டின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பயணிகளுக்கு காலை மற்றும் மதிய உணவு இலவசமாக கப்பலில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பயணிக்கு 10 கிலோ வரை இலவசமாகப் பொருள்கள் எடுத்துச்செல்லவும், கூடுதலாக கிலோ ஒன்றுக்கு ரூ. 50 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை-இந்தியா இடையே நல்லுறவு ஏற்படவே இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள கப்பல் நிறுவன இயக்குனர் சுபஸ்ரீ சுந்தர்ராஜ், விரைவில் 250 பேர் பயணிக்கக்கூடிய அதிவேக மற்றொரு கப்பல் சேவை தொடங்க இருப்பதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com