ராகி தோசைக்கு சரியான ஈடு வெங்காயச் சட்னியா? பிரண்டைத் துவையலா?

ராகி தோசை எல்லாருக்கும் தான் செய்யத் தெரிந்திருக்கும் ஆனால் மேலும், மேலும் சாப்பிடத் தூண்டும் வகையில் சுவையாக மொறுமொறுவென எண்ணெய் பளபளப்புடன் எப்படிச் செய்வது என்று தெரியுமா?
ராகி தோசைக்கு சரியான ஈடு வெங்காயச் சட்னியா? பிரண்டைத் துவையலா?

ராகி தோசை எல்லாருக்கும் தான் செய்யத் தெரிந்திருக்கும் ஆனால் மேலும், மேலும் சாப்பிடத் தூண்டும் வகையில் சுவையாக எப்படிச் செய்வது என்று தெரியுமா?

முன்பெல்லாம் கேழ்வரகும், உளுந்தும் வாங்கி ஊற வைத்து அரைத்துப் புளிக்க வைக்க வேண்டும். இப்போது ரெடிமேட் கேழ்வரகு மாவு கிடைக்கிறது அதை வாங்கி  உளுந்தை மட்டும் 1 மணி நேரம் ஊற வைத்து தனித்தனியாக அரைத்து உப்பிட்டுக் கலந்து சுமார் 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்து ஃப்ரிஜ்ஜில் வைத்தால் போதும். கேழ்வரகு அலைஸ் ராகி மாவு தயார். இது வளரும் குழந்தைகளின் ஆரோக்யத்துக்கு மிகவும் உகந்தது. சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட கேழ்வரகும், உளுந்தும் பதமாகப் புளித்தால் ஒரு வாசம் வரும் பாருங்கள். அப்படியே அந்த மாவில் தோசை ஊற்றி தெளித்தாற் போல எண்ணெய் பிசிறி திருப்பிப் போட்டால் சும்மா மொறு, மொறு வென்று கண்ணாலேயே சாப்பிடலாம் அப்படி நாவூறும்.

ராகி தோசைக்கு அரைக்க தேவையான பொருட்கள்:

  • ராகி மாவு: 4 கப்
  • உளுந்து மாவு - 1 கப்
  • சின்ன வெங்காயம்: 10 பொடியாக அரிந்தது
  • பச்சை மிளகாய் - 4 பொடியாக அரிந்தது
  • தேங்காய்த் துருவல்: ரெண்டு டீஸ்பூன்( விரும்பினால்) 
  • உப்பு -தேவையான அளவு

செய்முறை:

4 கப் ராகி மாவுடன் 1 கப் அரைத்த உளுந்து மாவைச் சேர்த்துக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். மாவு புளித்ததும் எடுத்து ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொள்ளவும். பின்னர் தோசை ஊற்றும் நேரத்தில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய்த்துருவல் கலந்து மாவை நன்கு கலக்கி விட்டு தோசைக்கல்லைச் சூடேற்றி தாராளமாக எண்ணெய் தடவி தோசை ஊற்றவும். மாவு பதமாக வெந்தவுடன் திருப்பிப் போட்டு ஓரங்களில் துளி எண்ணெய் விட்டு நன்கு வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறலாம். இந்த ராகி தோசைக்கு சரியான ஈடு என்றால் அது என் பாட்டி அரைக்கும் கார, சாரமான வெங்காயச் சட்னியும், பிரண்டைத் துவையலும் தான். இரண்டில் ஏதாவது ஒன்றை மாற்றி மாற்றிச் செய்து சாப்பிடலாம்.

வெங்காயச் சட்னி செய்முறை...

தேவையான பொருட்கள்...

  • உளுந்தம் பருப்பு: 1 டேபிள் ஸ்பூன்
  • சின்ன வெங்காயம்- 12 முதல் 15
  • பூண்டு- 4 பல்
  • பச்சை மிளகாய்- 10 அல்லது 12
  • புளி- மீடியம் சைஸ் கோலிக்குண்டு அளவு
  • கறிவேப்பிலை: 1 ஆர்க்

செய்முறை: 

அடுப்பில் வாணலியை ஏற்றி 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு 1 டேபிள் ஸ்பூன் உளுந்தப் பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம். பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதனுடன் புளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு உப்பு சேர்க்கவும். உப்பு கரைந்ததும் இறக்கி ஆற விட்டு மிக்ஸியில் அரைத்து கடுகு உளுந்து தாளித்து இறக்கவும். இந்தச் சட்னிக்கு அரைக்கும் போது தண்ணீர் அளவுடன் சேர்க்கவும். தண்ணீரே சேர்க்காது அரைத்தால் மூன்றூ நாட்கள் வரை வைத்துச் சாப்பிடலாம். புளி சேர்த்திருப்பதால் சீக்கிரம் கெடாது.

பிரண்டைச் சட்னி:

தேவையான பொருட்கள்:

  • பிரண்டை- நல்ல பிஞ்சுப் பிரண்டை 1 கட்டு
  • உளுந்து- 1 டேபிள் ஸ்பூன்
  • சின்ன வெங்காயம்- 10
  • காய்ந்த சிவப்பு மிளகாய்- 12 அல்லது 15
  • இஞ்சி- ஒரு சிறு துண்டு
  • பூண்டு- 4 பல்
  • புளி- 1 மலைநெல்லிக்காய் அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு- தேவையான அளவு

செய்முறை: பிரண்டை வாங்கும் போது முற்றாத நல்ல பிஞ்சுப் பிரண்டையாக பார்த்து வாங்க வேண்டும். பிரண்டையின் மேல் தோலை உரித்து விட்டு அதில் நார் இருந்தால் அதையும் உரித்து நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இப்போது அடுப்பில் வாணலியை ஏற்றி 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு முதலில் உளுந்தைப் போட்டு வறுக்கவும். உளுந்து சிவந்ததும் அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். கறிவேப்பிலை மொறு மொறுவென வந்ததும் இஞ்சு, பூண்டைச் சேர்த்து அது வதங்கிய பின் பிரண்டையைச் சேர்த்து வதக்கவும். பச்சை வாடை அகன்று பிரண்டை வதங்கியதும்  புளி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். பிறகு இறக்கி ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து கடுகு தாளித்து இறக்கவும்.
 
மேலே சொல்லப்பட்ட ராகி அலைஸ் கேழ்வரகு தோசைக்கு இந்த இரண்டு விதமான சட்னிகளுமே படு ஜோராக செட் ஆகும்.

சாதாரணமாக 2 தோசைகளுடன் எழுந்து கொள்பவர்கள் கூட இந்த காம்பினேஷனில் தோசை சுட்டுக்கொடுத்தால் 4 தோசைகள் வரை சாப்பிடுவார்கள்.

கேழ்வரகின் நன்மைகள்... (நன்றி - சத்குரு)

எந்த தானியத்தை விடவும் ராகியில்தான் மிக அதிக கால்சியமும், பாஸ்பரசும் உண்டு. இது வயோதிகர்களுக்கும், மாதவிடாய் கடந்த பெண்மணிகளுக்கும் ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) தீவிரம் குறைய, இரத்தத்தில் கால்சியம் அளவை தக்க வைக்கிறது. ‘பி’ காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், மினரல்கள் என கலவையான அத்தியாவசிய சத்துகள் நிறைந்த கேழ்வரகு, எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு மிகச்சிறந்த உணவு. இது பச்சிளங் குழந்தைக்கு உகந்தது (Baby Food). 6 மாத குழந்தை முதலே கூழாக்கிக் கொடுக்க மிக ஏற்றது. புதுத் தாயின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும், இரத்த சோகை அகலவும் முளை கட்டிய கேழ்வரகில் கிடைக்கும் 88% அதிக இரும்புச் சத்து, மருந்தாய் வேலை செய்யும் ஓர் உணவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com