
மனிதனின் முக்கிய தேவை உணவு.தற்போது பேக்கிங் செய்யப்பட்ட உணவு தயாரிப்புப் பொருள்கள், உணவுகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
எந்தப் பொருள்களை எந்த மாதிரியாகப் பதப்படுத்தி பேக்கிங் செய்ய வேண்டும்? கெட்டுப் போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்று சொல்லித் தரும் படிப்புதான் முதுகலை உணவு பதப்படுத்துதல் மற்றும் தரக்கட்டுப்பாடு என்ற படிப்பு. விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் இந்த இரண்டு ஆண்டு பட்ட மேற்படிப்பு உள்ளது.
இந்தப் பட்டப் படிப்பு குறித்து, அதைப் படிப்பதால் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து அக்கல்லூரியின் முதல்வர் எஸ்.எம்.மீனாராணி, துறைத்தலைவர் சி.திலகம் ஆகியோர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
"மத்திய உணவு பாதுகாப்பு அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் பல்கலைக்கழக மானியக்குழு நிதி உதவியுடன் 2006 ஆம் ஆண்டு எங்கள் கல்லூரியில் முதுகலை உணவு பதம் செய்தல் மற்றும் தரக்கட்டுப்பாடு என்ற இரண்டு ஆண்டு பட்ட மேற்படிப்பு தொடங்கப்பட்டது.
பி.எஸ்ஸி. மனையியல் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் பத்தியவியல் துறை என்ற மூன்று ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பில் 55 சதம் மதிப்பெண்கள் பெற்றவர்கள், முதுகலை உணவு பதப்படுத்துதல் மற்றும் தரக்கட்டுப்பாடு என்ற இரண்டு ஆண்டு முதுலை பட்ட மேற்படிப்பில் சேர்க்கப்படுவார்கள்.
முதுகலை முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு உணவியல், வேதியல், நுண்ணுயிரியியல், தானியம் பதம் செய்முறை, உணவுகளை மதிப்புக்கூட்டுதல், உணவு பாதுகாப்பு ஆகியவை குறித்து பாடங்கள் நடத்தப்படும்.
உணவு ஆய்வு, ஆராய்ச்சி. உபகரணங்களின் பயன்பாடு, உணவு நுண்ணுரியல் தொடர்பானவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.உணவு பதப்படுத்தும் ஆலைக்கு ஒரு முறை நேரில் அழைத்துச் செல்லப்பட்டு, ஆலையின் செயல்பாடுகள்குறித்து விளக்கப்படும்.
பின்னர் காய்கறி போன்றவற்றைப் பதப்படுத்துதல், பாதுகாத்தல், மாமிசங்களை பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல், உணவு செய்முறை,தானியங்கள் தர ஆய்வு உள்ளிட்டவை குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். மேலும் பழக்கூழ், ஜாம், ஜெல்லி, ஜாஸ்,வற்றல், வடாகம், மிட்டாய்கள் உள்ளிட்டவற்றின் தயாரிப்பு குறித்து செயல்முறை பயிற்சி அளிக்கப்படும். கடல்மீன்கள் மற்றும் கடல்சார் உணவுகள் பதப்படுத்தும் ஆலைக்கு நேரில் மாணவிகள் அழைத்து செல்லப்பட்டு களஆய்வு நடத்தப்படும்.
இரண்டாம் ஆண்டு, உணவு உயிர்நுட்பவியல், உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு, உணவு பொருள் சட்டங்கள் ஆகியவை குறித்து பாடங்கள் நடத்தப்படும். உணவு பதப்படுத்துதல், பால் பதப்படுத்துதல், பேக்கரி பொருள்கள் செய்முறைப் பயிற்சி, சாக்லேட் உள்ளிட்டவற்றைச் செய்ய பயிற்சி அளிக்கப்படும். தரக்கட்டுப்பாடு குறித்த பயிற்சி, சுவை ஆய்வு, உணவு கலப்படம் குறித்து ஆய்வு கூடங்களில் பயிற்சி அளிக்கப்படும்.
இறுதியாக புதிய உணவு ஒன்றைத் தயாரித்து, அதைச் சந்தைப்படுத்தத் தேவையான பாதுகாப்பான பேக்கிங், அந்த உணவின் தரம், அதில் கலக்கப்பட்டுள்ள பொருள்களின் அளவுகள், சுவை விபரம் குறித்து ஆய்வறிக்கை ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.
இந்த முதுகலை பட்ட மேற்படிப்பு படித்தால், தொழில் முனைவோராக வாழ்வில் உயரலாம். அன்றாட வாழ்விற்குத் தேவைப்படும் மசாலாப் பொடிகள், பழரசங்கள் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்யலாம்.
மகளிர் சுய உதவிக்குழுவினருடன் இணைந்து சுய தொழில் செய்யலாம். எங்களிடம் படித்த மாணவிகள் பலர் மத்திய அரசின் ஃபுட்கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் வேலை செய்கிறார்கள்.
பழரசம், ஜாம் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் தயாரிப்பு நிறுவனங்களில் தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் பணி இந்த பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு எளிதில் கிடைக்கும்.
வெளிநாடுகளில் இந்த பட்டமேற்படிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த பட்ட மேற்படிப்பு படித்தால் பெண்கள் தொழில் முனைவோராக மாறி தாங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம்'' என்றார்கள்.
- எஸ்.பாலசுந்தரராஜ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.