இணையத்தில் பெண்கள் தேடுவது எதை? வெளிவந்தது புதிய கருத்துக் கணிப்பு

குறிப்பாக 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான விடியோக்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். 
பெண்களின் இணையதளத் தேடல்
பெண்களின் இணையதளத் தேடல்
Published on
Updated on
2 min read

இந்தியப் பெண்களின் இணையதளத் தேடலில் முன்னுரிமை வகிப்பது கல்வி மற்றும் வேலைவாய்ப்பாக இருந்து வருகிறது. அப்படித் தேடலில் ஈடுபடக்கூடியவர்களில் 40 சதவீதம் பேர் பொருத்தமற்ற கருத்துக்களுக்கு அஞ்சுகிறார்கள், இணையதளக் கேலிக்கு ஆளாகிறார்கள் அதுமட்டுமல்லாது ஸ்மார்ட்போன்களில் பின்தொடரப்படுகிறார்கள். இது அப்பெண்களை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்குவதோடு அச்சத்திலும் ஆழ்த்துகிறது. இதைப்பற்றி சமீபத்தில் வெளிவந்த  புதிய சர்வே ஒன்று செவ்வாயன்று கூறியது என்னவென்றால்;

இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் வசிக்கக் கூடிய பெண்களில் 44 % பேர் தங்களது ஆங்கிலப் புலமை மற்றும் மென் கலை ஆர்வங்களை வளர்த்துக் கொள்ள இணையத்தை நாடுகின்றனர். இணையத் தேடல்களுக்குப் பெரும்பாலும் ஆங்கிலமே அவர்களுக்கு வசதியான மொழியாக இருக்கிறது. ஆன்லைன் உலவலுக்கு அவர்கள்  தேர்ந்தெடுக்கும் நேரம் பிற்பகல் 3 முதல் இரவு 9 மணி வரை என அலைபேசி பிராண்டுகளின் சிக்னல்களை ஆராய்ந்த போது தெரிய வந்தது.  அவர்களில் வயதில் இளையவர்களான பள்ளி இறுதி மற்றும் கல்லூரி செல்லும் பருவத்தைச் சேர்ந்த 18 முதல் 23  வயதுடைய பெண்கள் இணையத்தில் தேடுவது பெரும்பாலும் கல்வி, வேலை வாய்ப்பு, திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி? என்பது போன்ற தலைப்புகளில் அமைகின்றன. அதுவே 29 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களை எடுத்துக் கொண்டீர்களெனில் அவர்களது தேடல் சுய முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட தலைப்புகளை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கின்றன என்கிறது அந்த சர்வே.

இணையதளத் தேடலானது இந்தியப் பெண்களிடையே தன்னம்பிக்கை மிகுந்த புதிய தலைமுறைப் பெண்களை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும், பெண்கள் தங்களுக்குப் பொருத்தமான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளத் துணை புரிவதோடு வேலைத்தளத்தில் தங்களை உற்சாகமூட்டிக் கொள்ள தோதான பல அம்சங்களையும் உருவாக்கித் தருகிறது என்கிறார் இந்த கருத்துக் கணிப்பை மேற்கொண்ட வெரிசோன் மீடியாவின் தேசிய மேலாளர் நிகில் ருங்டா. 

பெண்கள் இணையத்தில் உலவத் தேர்ந்தெடுப்பது பெரும்பாலும் ஸ்மார்ட் போன்களைத் தான். அவர்களுக்கு அது தான் வசதியானதாக இருக்கிறது. 60% இந்தியப் பெண்கள் மடிக்கணினியைக் காட்டிலும் ஸ்மார்ட் போன்களில் தான் எல்லாவற்றையும் தேட முயற்சிக்கிறார்கள். இந்த எண்ணிக்கையானது டயர் 1 நகரங்களில் 75% ஆக உயர்ந்திருக்கிறது. 

இவர்களில் மெட்ரோ நகரங்களில் வசிக்கும் பெண்கள் நாளொன்றுக்கு 145 நிமிடங்கள் ஸ்மார்ட் போனில் செலவிடுகிறார்கள். அதுவே டயர் 1 நகரங்களைச் சேர்ந்த பெண்கள் முன்னவர்களைக் காட்டிலும் மேலும் 25 நிமிடங்கள் அதிகம் செலவிடத் தலைப்படுகிறார்கள். இவர்களில் மொத்த பயனாளர்களில் 80 % க்கும் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தங்களது தேடுமொழியாக உள்ளூர் மொழி அல்லது தாய்மொழியைக் காட்டிலும் ஆங்கிலத்தையே பயன்படுத்தி வருகிறார்கள் எனத் தெரிகிறது.

நம் நாட்டில் வீடியோ மற்றும் OTT உள்ளடக்கத்தின் பிரபலத்தைப் பொறுத்தவரை, இணையதளப் பெண் பயனாளர்களில் பலர் ஆன்லைனில் உள்ளடக்கத்தைப் படிப்பதை விட வீடியோக்களைப் பார்ப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர் எனக் கூறுகிறது கருத்துக் கணிப்பு.

கணக்கெடுக்கப்பட்ட பெண்களில் மூன்றில் ஒரு பங்கினர் கடந்த ஒரு மாதத்தில் தொழில் வளர்ச்சி அல்லது சமூக காரணங்கள் அல்லது தனிப்பட்ட நல்வாழ்வு தொடர்பான வீடியோக்களைப் பார்த்துள்ளனர்.

குறிப்பாக 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான விடியோக்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தொடர்பான உள்ளடக்கங்கள் கல்வி, பெண்கள் அதிகாரம் மற்றும் தொழில் மேம்பாட்டுடன் தொடர்புடைய  உள்ளடக்கங்களைக் காட்டிலும்  அதிக ஆர்வத்துடன் தேடப்பட்டு வாசிக்கவும், விடியோவாகப் பார்க்கவும் படுகிறது என்று இந்தக் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com