திராவிட இயக்க வரலாற்றில் பதிவாகி கொள்கையளவில் அதனுடன் முரண்பட்ட முதல் பெண் தலைவி ஜெ!

திராவிட இயக்கம் ஆரம்ப நாள்களில் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்த்த பிராமண சமூகத்தில் பிறந்தவர். இறை மறுப்பு,  வடவர் எதிர்ப்பு, இவற்றை ஏற்காதவர். பின் எப்படி அவர் திராவிட இயக்கத் தலைவர்?
திராவிட இயக்க வரலாற்றில் பதிவாகி கொள்கையளவில் அதனுடன் முரண்பட்ட முதல் பெண் தலைவி ஜெ!
Updated on
3 min read

எதிர்காலத்தில் தமிழக அரசியல் வரலாற்றை எழுதும் வாய்ப்புப் பெற்றவர்கள், திராவிட இயக்கத் தலைவர்கள் என்ற வரிசையில், ஒரு பெண் முதல்வரின் பெயரைப் பதிவு செய்வார்கள். ஆனால் அந்த முதல்வரோ திராவிட இயக்கம் ஆரம்ப நாள்களில் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்த்த பிராமண சமூகத்தில் பிறந்தவர். இறை மறுப்பு,  வடவர் எதிர்ப்பு, இவற்றை ஏற்காதவர். பின் எப்படி அவர் திராவிட இயக்கத் தலைவர்?

தேர்தல் அரசியலில் குதித்த நாளிலேயே திமுக நாத்திகக் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டது. இடஒதுக்கீடு, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் என்ற கொள்கைகளை ஆதாரக் கொள்கைகளாக அறிவித்துக் கொண்டது. திமுக தனது ஆட்சிக் காலத்தில், இடஒதுக்கீடு 50 சதவீத அளவிற்கு மிகாமல் இருக்கும் வண்ணம் நடைமுறைப்படுத்தி வந்தது. காரணம் இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக் கூடாது என்று பலமுறை உச்சநீதி மன்றம் எச்சரித்து வந்தது.  

ஆனால் 31.12.1993 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக ஒரு சட்டத்தை  நிறைவேற்றி இந்திய குடியரசுத் தலைவரின்  ஒப்புதலையும் பெற்று தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்தவர் ஜெயலலிதா. அதை அவர் அறிவித்த போது இது நடைமுறைக்கு வராது, உச்சநீதி மன்றத்தால் நிராகரிக்கப்படும் என்ற விமர்சனங்கள் எழுந்தன.  ஆனால் இச்சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 31-(ஸ்ரீ)  யின் கீழ் பாதுகாப்புப் பெறும் பொருட்டு, 1994ஆம் ஆண்டு, அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி (76வது திருத்தம்) அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது  அட்டவணையில் சேர்த்து, தமிழ்நாடு இயற்றிய சட்டத்தை செல்லுபடியாகாமல் செய்யும் முயற்சிகளிலிருந்து காக்கவும் செய்தார் ஜெயலலிதா.

திராவிட இயக்கத்தின் ஆதாரக் கொள்கைகளை நிறைவேற்றுவதில் திமுகவைவிடவும் திறம்படவும், சாதுர்யமாகவும் செயல்பட்டு திராவிட இயக்கத்தின் வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தை, உருவாக்கிக் கொண்டுவிட்டவர் ஜெயலலிதா.

காவிரி நடுவர் மன்ற ஆணையை நாளிதழில் வெளியிடுதல், முல்லைப் பெரியாறு நீர் மட்டம், கச்சத்தீவை மீட்டல் போன்ற தமிழக உரிமை சார்ந்த விஷயங்களில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக வழக்காடல், நிலக் கையகப்படுத்துதல், ஜி.எஸ்.டி, போன்ற சட்டங்களில் நாடாளுமன்றத்தின் வழி தமிழகத்தின் உரிமையைப் பாதுகாத்தல் என்ற அணுகுமுறைகளின் மூலம் மாநில உரிமைகளைக் காத்து நின்றதன் மூலம் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள்தான் தனது கொள்கைகளும், ஆனால் அணுகுமுறைகள்தான் வேறு என்று காட்டியவர் ஜெயலலிதா.

கொள்கைகளை மாற்றிக் கொள்ளாமல் அணுகுமுறையை மாற்றிக் கொண்டதன் மூலம், கூட்டாட்சித் தத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஓர் அரசியல் அமைப்பில் அடிப்படையான லட்சியங்களை எப்படி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லமுடியும் எனக் காட்டியவரும் அவரே.

அவர் அரசியலில் நுழைந்ததே ஒரு விபத்து. கருணாநிதியைப் போல பெரியாரால் பயிற்றுவிக்கப்பட்டோ, எம்.ஜி.ஆரைப் போல அண்ணாவால் ஈர்க்கப்பட்டோ அரசியலுக்கு வந்தவர் அல்ல. நட்பின் காரணமாக எம்.ஜி.ஆருக்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றும் பொருட்டு அரசியலை வாழ்வாக ஏற்றுக் கொண்டவர்.

அப்படி ஏற்றுக் கொண்டதன் காரணமாகவே பல இன்னல்களை அனுபவித்தவர். எம்.ஜி. ஆர். மறைவுக்குப் பின் தனக்கு அரசியல் களத்தில் வலுவான எதிரிகள் இல்லை எனத் திமுக கருதியது. அந்தக் கருத்தை மெய்ப்பிப்பது போல், 13 ஆண்டு வனவாசத்திற்குப் பின் அது 1989இல் ஆட்சிக்கு வந்தது. ஆனால், இரண்டே ஆண்டுகளில், 1991 தேர்தலில் அதை வீழ்த்தினார் ஜெயலலிதா. இரண்டு இடங்களை மட்டும் வென்று,  அவரிடம் பரிதாபமாகத் தோற்றுப் போன திமுக, அவரை அரசியல்ரீதியாக மட்டும் வீழ்த்த முடியாது எனப் புரிந்து கொண்டது.

1996இல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் 13 வழக்குகளை ஜெயலலிதா மீது தொடுத்தது. அரசியலுக்குப் புதியவரான அவர் இந்த வழக்குகளைக் கண்டு மிரண்டு விடுவார், பணிந்து விடுவார், சமரசம் செய்து கொண்டு அரசியலை விட்டு விலகிவிடுவார் என்று அவ்வியக்கம் எண்ணியிருந்திருக்கக் கூடும். அரசியல்ரீதியாக இல்லாமல் ஜெயலலிதா அவற்றைச் சட்ட ரீதியாக எதிர் கொண்டு எல்லாவற்றிலிருந்தும் மீண்டார். கடைசியாக கர்நாடகா உயர்நீதி மன்றம் அவரைச் சொத்து வழக்கிலிருந்து விடுவித்த பின்னும், விட்டேனே பார் என்று திமுக உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது.

ஒன்றரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்ட பெரியதொரு அரசியல் கட்சிக்குத் தலைமை தாங்கிய ஜெயலலிதா, தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை முகாந்திரமாகக் கொண்டு, வன்முறையில் ஈடுபட கட்சியினரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தூண்டியதில்லை. அவருக்கு  நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் எல்லாம் கட்சியினர் கடவுளிடம் அவர்கள் அறிந்த வழியில், அவர்கள் நம்பிக்கை கொண்ட சடங்குகாசாரங்களின் மூலம் இறைவனிடம் முறையிடுவதைத் தவிர, வேறு செயல்களில் இறங்கியதில்லை. தர்மபுரி பஸ் எரிப்பு ஒரு விதி விலக்கு.

அரசியலில் இறங்கி உச்சத்தைத் தொட்ட பெண்களிலிருந்து வித்தியாசமானவர் ஜெயலலிதா. எம்ஜிஆரால் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர் என்ற போதும் அவரது அரசியல் வெற்றிகள், குறிப்பாக எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் அவரது சொந்த மூளையால், உழைப்பால், முயற்சியால் ஈட்டப்பட்டவை. 

தான் வெற்றி பெற்றது மட்டுமின்றி, எல்லாப் பெண்களும் அதிகாரம் பெற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பல முயற்சிகளை மேற்கொண்டவர். பிறந்திருப்பது பெண் குழந்தை என்பதாலேயே, பிறப்பிலேயே நிராகரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தொட்டில் குழந்தை திட்டத்தினால் பல பெண்குழந்தைகள் சிசுவிலேயே கொல்லப்படாமல் தப்பிப் பிழைத்தன. பெண் குழந்தைகளுக்கு சைக்கிள், மடிக் கணினி, சானிட்டரி நாப்கின், சுய உதவிக் குழு,  விலையில்லா ஆடு மாடு, அடுக்களைச் சாதனங்கள், தாலிக்குத் தங்கம், பிரசவ ஆலோசனை, உதவித் தொகை, ஆரோக்கியத்திற்கான அம்மா கிட் எனத் தொடங்கி உள்ளாட்சிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வரை பெண்களின் ஒவ்வொரு பருவத்திற்கும் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தியதன் மூலம் அவர் இன்று தமிழகத் தாய்க் குலத்தின் ஆழமான அன்பைப் பெற்றார்.

வெளிப்படையான இந்த திட்டங்கள் தவிர, பெண் கமோண்டாக்கள், குழந்தைகளின் பெயரின் முன்னால் தாயின் இனிஷியல் போன்ற நுட்பமான நடவடிக்கைகள் பெண்களைப் பெருமிதம் கொள்ளச் செய்தன. தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே பெண்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றது அவரது ஆட்சிகாலத்தில்தான். 

அரசியலில் அவர் எடுத்த முடிவுகள் அசாதாரணமானவை. சில அதிரடியானவை. ஆட்சியையே பணயம் வைக்கும் அளவு ஆபத்தானவை.

மதவாதக் கட்சி என்று கருதப்பட்ட பாஜகவோடு, திராவிடக் கட்சி   கூட்டணி கொள்ள முடியும் என்பதை முதலில் காட்டியவர் இவர்தான். எதிர்கட்சி வரிசையில் உட்காரும் கட்சி, ஆளும் கட்சியாக அமரும் தன்னோடு கூட்டணி கொண்ட கட்சியாக இருக்க வேண்டும் என வியூகம் வகுத்தவரும் இவர்தான். பின் கூட்டணியே இல்லாமல் ஆட்சியைப் பிடிக்க முடியும், மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் 37 இடங்களைப் பெற முடியும் என மெய்ப்பித்தவரும் இவர்தான். இப்படித்தான் இருக்கும் என ஊகிக்க முடியாத தேர்தல் வியூகங்களை வகுப்பதில் ஒரு சாணக்கியராகத் தன்னை நிரூபித்தவர்.

தமிழக அரசியல் தலைவர்களிலேயே தனித்துவமானவர் ஜெயலலிதா. காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் எல்லோரும் சாதாரணக் குடும்பங்களில் பிறந்து, அதிகார பீடங்களில் அமர்ந்தவர்கள். ஆனால் ஜெயலலிதா செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். அவர்கள் எல்லாம் அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு படிப்படியாக கட்சிகளில் உயர்நிலையை எட்டியவர்கள். இவர் நேரடியாக உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டவர். அவர்கள் மக்களோடு கலந்து பழகி அவர்களது அன்பைப் பெற்றவர்கள். இவர் தேர்தல் நேரங்களில் கூட காரில் இருந்து இறங்கி மக்களோடு கலந்தவர் அல்ல. ஆனாலும் அவரது லட்சக்கணக்கானவர்களின் அன்பையும் விசுவாசத்தையும் பெற்றவர் என்பதை அவரது இறுதி ஊர்வலமும், தேர்தல் வெற்றிகளும் காட்டுகின்றன.

அடித்தள வாழ்வை அனுபவரீதியாக அறியாதவர் என்ற போதிலும், அவர்களது பசியை அறிந்திருந்தார்.  பள்ளிகளில் சத்துணவு, இலவசமாக 20 கிலோ அரிசி, அம்மா உணவகம் இவற்றின் மூலம் அதைத் தீர்க்க முயன்றார்.

திராவிட லட்சியங்கள், தேசியப் பார்வை, பெண்களுக்கு அதிகாரம், கட்சிக்கு உழைக்கும் சாதாரணர்களும் விசுவாசம் இருந்தால் உச்ச பதவிகளை அடைய முடியும் என்ற விசுவாச ஜனநாயகம், தவறு செய்பவர்களுக்கு தண்டனை நிச்சயம் ஆனாலும் கட்சியில் சிறு கீறல் கூட விழாத அதிசயம், என்ற முரண்பாடுகளின் விநோதக் கலவையில் இன்னொரு தலைவர் தமிழ்நாட்டில் உருவாவது இனி என்றைக்கும் சாத்தியமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com