45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

உலகம் சுற்றும் வாலிபர்: லொகேஷன் டிசைனர் ராம்ஜி!

என் பொழுது போக்கு என்ன தெரியுமா? உலக வரைபடத்தில் எந்தெந்த நாடுகளில் வண்ணமிகு இடங்கள் இருக்கின்றன என்று தேடித் தேடி, அங்கெல்லாம் சென்று, அதை நம் தமிழ் படத்தில் காண்பித்து மக்களை மகிழ்விக்கவேண்டும்'' 

News image
Updated On :17 அக்டோபர் 2016, 5:28 am

சலன்

நாம் எல்லாம் ஒரு நாட்டிற்குச் செல்லவேண்டும் என்றாலே பார்த்துப் பார்த்து முடிவு செய்வோம். ஆனால் ராம்ஜியோ எதை பற்றியும் கவலைப்படாமல் உலகம் சுற்றி வந்துகொண்டிருக்கிறார். இவரிடம் சுயநலம் கிடையாது. தான் பார்த்த இடங்களை எல்லாம் மற்றவர்களும் பார்க்க வேண்டும் என்று விரும்புவார். ஒரே நாட்டிற்குப் பலமுறை சென்றாலும் அந்த நாட்டில் உள்ள புதிய இடங்களை தானும் பார்த்து மற்றவர்களையும் பார்க்க வைக்க ஆசைப்படுபவர்.

இவரிடம் இதுவரை 16 பாஸ்போர்ட் முடிந்து 17 ஆவது ஆரம்பித்துள்ளது. 65 நாடுகளைப் பார்த்துள்ளார். ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கு மட்டும் 300 தடவைக்கு மேல் சென்றுள்ளார். நியூஸிலாந்துக்கு மட்டும் 150 முறையும், பக்கத்து நாடுகளான சிங்கப்பூர், துபாய் மற்றும் மலேஷியா சென்றதை எண்ணிக்கையில் செய்து கொள்ள முடியாது. ராம்ஜி ஒரு லொகேஷன் டிசைனர். மக்கள், தங்களுக்குப் பிடித்த கதாநாயகியும் கதாநாயகனும் வெளிநாட்டில் ஆடிப் பாடி மகிழ்வதை நமக்கு சினிமாவில் காட்ட உழைப்பவர். இதுவரை 1000 படங்களுக்கு மேல் உழைத்த ராம்ஜியை சென்னையில் இருக்கும் நேரத்தில் பிடித்தோம்:
 
"சினிமா ஒரு மிகப் பெரிய பொழுது போக்குச் சாதனம். இதில் எதைச் சொன்னாலும் உலகம் பூராவும் தெரியும். 1987 இல் ஆரம்பித்து இன்றுவரை நான் சென்னையில் இருந்த நேரம் குறைவு. வெளிநாடுகளில் இருந்த நேரம் அதிகம். கமல், ரஜினியில் இருந்து ஆரம்பித்து, சிவகார்த்திகேயன் வரை எல்லா நடிகர்களின் படங்களுக்கும் நான் தான் வெளிநாட்டு படப்பிடிப்பை அமைத்துக் கொடுத்தவன்.

ஒருமுறை ஒரு பஸ்ஸில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் குழுவினருடன் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது ரஜினி அவர்கள் ஏதோ என்னிடம் பேச முன் இருக்கையில் இருந்து நான் அமர்ந்துள்ள பின் இருக்கைக்கு வந்தார். நான் அவர் விழுந்து விடப் போகிறார் என்று பயந்து, ""நீங்கள் உட்காருங்கள்... நான் வருகிறேன்'' என்றேன். அதற்கு அவர், ""நான் பல வருடங்கள் பஸ் கண்டக்டராக இருந்தவன். நான் விழமாட்டேன்'' என்று கூறினார். பழையதை மறக்காத பண்பாளர் என்று அவரைப் பற்றிய என் எண்ணம் மேலும் உயர்ந்தது.

அதே போன்று கமல்ஹாசன் அவர்களும் ஒரு முறை வெளிநாட்டில் இருந்து வேறு ஒரு நாட்டிற்குச் செல்ல முடிவு செய்து என்னிடம் டிக்கெட் போடச் சொன்னார். "நான் அடுத்த நாள் போங்களேன்'' என்று கூறினேன். "இல்லை, நான் சொன்ன தேதியில் போட்டால் தான் சரியாக இருக்கும்'' என்று சொல்ல, நான் மறுத்தேன். அவர் சிறிது நேரம் மெüனம் சாதித்தார். ஷூட்டிங் தடை படுவதால் டிக்கெட் போட மறுக்கிறார் என்று அவர் என்னைப் பற்றி நினைத்துவிட்டார் போலும். நான் அவரிடம் சென்று நிலைமையை விளக்கிச் சொன்னேன். என்னைப் புரிந்து கொண்டு விட்டு, சிரித்தபடியே. "சரி சரி உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்'' என்றார். நான் சொன்னது என்ன தெரியுமா? நாங்கள் இருக்கும் நாட்டில் இருந்து அவர் செல்லும் நாட்டிற்கு நேரம் வித்தியாசப்படும். அதனால் நான் சொல்லும் விமானம் பிடித்தால் சரியாக இருக்கும் என்று கூறினேன். இல்லை என்றால் அவர் முதல் நாளே அந்த நாட்டிற்குச் சென்று விடுவார் என்று நான் சொன்ன விவரம் புரிந்து என்னைப் பாராட்டினார்.

"எந்திரன்' படத்தில் வரும் கிளிமஞ்சாரோ பாட்டிற்காக நாங்கள் எல்லாவிதமான போக்குவரத்து சாதனங்களையும் பயன்படுத்தி அந்த இடத்தை அடைந்தோம். விமானம், படகு, ரயில் மற்றும் காரில் சென்று அந்த பாடலைப் படமாக்கினா இயக்குநர் ஷங்கர். இப்படி நான் உழைத்த படங்கள் 1000 என்றாலும், எல்லா மொழியிலும் நான் படங்கள் பண்ணியுள்ளேன்.

தெலுங்கில் சிரஞ்சீவி முதல், இன்றைய கதாநாயகர் அல்லு அர்ஜுன் வரை, கன்னடத்தில் விஷ்ணுவர்தன் முதல் நிக்கில் குமார் வரை, மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி முதல் இன்றய இளம் ஹீரோ வரை அந்தப் படங்களில் நடித்துள்ளார்கள். ஹிந்தியில் ஷாருக் கான், அஜய் தேவ்கன், அமீர் கான், ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோர் நடித்த படங்களுக்கும் வேலை செய்துள்ளேன். இது மட்டுமல்லாமல், இத்தாலியன், பிரெஞ்சு மொழிபேசும் படங்களுக்கும் நான் வேலை செய்துள்ளேன். அவர்களுக்கு தெரியாத, புதிய இடங்களை காட்டியதால், அவர்களின் படங்களிலும் என் பெயர் உள்ளது.

இப்பொழுதும் சுமார் அரை டஜன் படங்களுக்கு மேல் நான் வேலை செய்து வருகிறேன். அதில் ஒன்றுதான் அஜித் குமாரின் 57ஆவது படம். இப்போதும் என் பொழுது போக்கு என்ன தெரியுமா? உலக வரைபடத்தில் எந்தெந்த நாடுகளில் வண்ணமிகு இடங்கள் இருக்கின்றன என்று தேடித் தேடி, அங்கெல்லாம் சென்று, அதை நம் தமிழ் படத்தில் காண்பித்து மக்களை மகிழ்விக்கவேண்டும்'' என்பதுதான் என்று கூறும் டிராவல் மாஸ்டர் (travel master) ராம்ஜி, தனது அனுபவங்களைப் புத்தகவடிவில் தனது கலைப்பயணத்தின் 30 ஆவது ஆண்டில்- அடுத்த ஆண்டு- கொண்டுவர திட்டமிட்டுள்ளார். அதில் சிவாஜியிலிருந்து இன்றய நடிகர்கள் நடிகையர்கள் முதற்கொண்டு பலரது அரிய புகைப்படங்கள் மற்றும் செய்திகள் இடம் பெறுமாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.