கால்வலி, மூட்டு வலி தாங்க முடியலையா? சட்டுன்னு நிவாரணம் கிடைக்க இந்த யோகாசனப் பயிற்சிகளைச் செஞ்சு பாருங்களேன்!

முதல்ல இந்த மாதிரி வலிகளுக்கு டாக்டரைப் பார்க்காமலே ஏதாவது நிவாரணம் கிடைக்குதான்னு பார்க்கனும். அதுக்கு யோகா தான் பெஸ்ட்.
கால்வலி, மூட்டு வலி தாங்க முடியலையா? சட்டுன்னு நிவாரணம் கிடைக்க இந்த யோகாசனப் பயிற்சிகளைச் செஞ்சு பாருங்களேன்!

கால் ரொம்ப வலிக்கிறதா? ரொம்ப நேரம் ஆஃபீஸ்ல உட்கார்ந்தே இருந்தாலும் சரி, இல்லன்னா, ரொம்ப நேரம் நின்னுக்கிட்டே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தாலும் சரி கால் வலி, மூட்டு வலி  வந்துடறது சகஜம் தான். அந்த மாதிரி நேரங்கள்ல வலி தாங்க முடியலன்னா? உடனே டாக்டரைப் போய் பார்க்கறதும் கலர் கலரா மாத்திரையை வாங்கிப் போட்டுக்கறதும் அவசரக்கோலம். முதல்ல இந்த மாதிரி வலிகளுக்கு டாக்டரைப் பார்க்காமலே ஏதாவது நிவாரணம் கிடைக்குதான்னு பார்க்கனும். அதுக்கு யோகா தான் பெஸ்ட்.

இதோ இந்த 5 யோகாசனப் பயிற்சிகளை செய்து பாருங்க. இது நிச்சயமா உங்களுக்குப் பலன் கொடுக்கும்.

1. அதோமுக சவாசனா அல்லது கீழ் நோக்கிப் பார்க்கும் நாய் போஸ்

அதோமுக ஸ்வானாசனா அல்லது கீழ் நோக்கிப் பார்க்கும் நாய் போஸ்
அதோமுக ஸ்வானாசனா அல்லது கீழ் நோக்கிப் பார்க்கும் நாய் போஸ்

முதலில் யோகா மேட்டை விரித்து நேராக நின்று கொண்டு பின் நிதானமாகக் குனிந்து இரண்டு கைகளையும் தரையில் உள்ளங்கைகள் படிய ஊன்றிக் கொள்ள வேண்டும். பிறகு கால்களை பின்னோக்கிக் கொண்டு சென்று ஒரு முக்கோண போஸில் நிற்க வேண்டும்.

அதோமுக ஸ்வானாசனா பார்ப்பதற்கு எளிமையாகத்தான் இருக்கும். ஆனால், இதில் மிக முக்கியமானது கால் பாதங்களைத் தூக்கக் கூடாது. நிற்கும் போது கால் பாதங்கள் எப்படித் தரையில் படிந்திருக்கின்றனவோ அதே போல நாய் போஸில் ஆசனம் செய்யும் போதும் குதிகால்களை உயர்த்தாலும் நேராக நிற்பது போலவே கால் பாதங்கள் தரையில் சமமாகப் படிந்திருக்க வேண்டும். அதே தான் கைகளுக்கும், உள்ளங்கைகள் இரண்டும் தரையில் சமமாகப் படிந்திருக்க வேண்டும். முதுகுத் தண்டு வளைவுகள் இன்றி ஒரு முக்கோணம் போலவோ அல்லது மேருவைப் போலவோ மிகச்சரியாக வளைக்கப்பட்டிருக்க வேண்டும். கண் பார்வை கால் பெருவிரலில் மையம் கோண்டிருக்க வேண்டும். இதே போஸில் தொடர்ந்து 30 விநாடிகள் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். பழகிய பின் மேலும் 15 விநாடிகளைக் கூட்டிக் கொண்டால் போதும்.

பலன்: இந்த யோகாசனப் பயிற்சி செய்வதால் முதுகெலும்பு வலுவாகும், மிகச்சரியாக உடலை சரிபாதியாகக் குனியச் செய்வதால் உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். கால்பாதம் மற்றும் உள்ளங்கைகளைத் தரையில் படருமாறு அழுத்தமாக ஊன்றிக் கொள்வதால் முழு உடலும் தாங்கப்பட்டு முதுகெலும்பின் மீதான அழுத்தம் குறையும். இதனால் முழு உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். கை, கால் ஆடுதசைகள் இறுக்கமாகும்.

2. கபோடாசனா அல்லது புறா போஸ்

கபோடாசனா அல்லது புறா போல அமர்ந்திருக்கும் நிலை
கபோடாசனா அல்லது புறா போல அமர்ந்திருக்கும் நிலை

யோகா மேட்டில் முதலில் முழங்காலிட்டு அமர்ந்து கொண்டு பின் மெதுவாக வலக்காலை பத்மாசன நிலைக்கு நகர்த்தி அமர்ந்து கொண்டு இடக்காலை பின்னோக்கி நீளச் செய்து இரு கைகளையும் தரை தொடுமாறு வைத்துக் கொள்ளவும். இதே நிலையில் 30 விநாடிகள் இருந்து விட்டு பின் கால் மாற்றி இதே பயிற்சியை மீண்டும் 30 விநாடிகள் செய்யலாம். பார்ப்பதற்கு புறாக்கள் அமர்ந்திருப்பது போன்று தோற்றமளிக்கும்.

பலன்: இந்த யோகாசனப் பயிற்சியானது உங்களது கால் இணைப்புத் தசைகள் மற்றும் திசுக்களை வலுவாக்கும். இடுப்பு மற்றும் முதுகெலும்புகளில் நிலவும் இறுக்கத்தை குறைக்கும்.

ரத்த அழுத்தத்தை சீராக்கி மனம் மற்றூம் உடலை அமைதி நிலையில் வைத்துக் கொள்ள உதவும்.

3. சுசிராந்த்ராசனா அல்லது ஊசியில் நூல் கோர்ப்பது போன்ற போஸ்

சுசிருந்தாசனா அல்லது ஊசியில் நூல் கோர்ப்பது போன்ற நிலை
சுசிருந்தாசனா அல்லது ஊசியில் நூல் கோர்ப்பது போன்ற நிலை

யோகா மேட் விரித்து வானத்தைப் பார்த்து நேராகப் படுத்துக் கொண்டு வலது காலை மடக்கி இடது காலை படுத்துக் கொண்டே சம்மணமிடும் போஸில் வலது தொடையின் மீது வைக்க வேண்டும். பின்னர் வலது கையையும், இடது கையையும் மாலையாகக் கோர்த்து மடக்கிய வலது தொடையின் மீது படிய வைத்து இறுக்கிக் கொள்ள வேண்டும். இதே விதமான பயிற்சியை கால்களை மாற்றி மாற்றி 30 நிமிடங்கள் செய்ய வேண்டும். பார்ப்பதற்கு ஊசியில் நூல் கோர்ப்பதைப் போல இருப்பதால் இதற்கு இப்படி ஒரு பெயர்.

பலன்:

இதை ஒரு வார்ம் அப் பயிற்சியாக யோகாசனம் தொடங்குவதற்கு முன்பு செய்யத் தொடங்கலாம். ஏனெனில், இந்த யோகாசனப் பயிற்சியானது உடலின் கீழ்ப்பகுதிக்கு மிகச்சிறந்த நீட்டித்தலை வழங்குதோடு மற்ற யோகாசனப் பயிற்சிகளை முறையாகத் தொடங்குவதற்கு ஏற்ற வகையில் உடல் தசைகளைத் தயார் நிலையில் வைப்பதற்கும் உதவும்.

4.விருக்‌ஷாசனா அல்லது மரம் போல நிற்றல் போஸ்

விருக்‌ஷாசனா அல்லது மரம் போல நிற்றல் நிலை 
விருக்‌ஷாசனா அல்லது மரம் போல நிற்றல் நிலை 

இந்த ஆசனம் பார்க்க எளிமையாகத் தோன்றினாலும் செய்யும் போது ஆசன போஸில் நீடிப்பது சற்றுச் சிரமம் தான். ஆனால், தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டால் இதெல்லாம் ஒரு கஷ்டமே இல்லை. இது ரொம்ப சிம்பிள். நேராக நின்று கொண்டு வலது காலை மடக்கி இடது காலின் முட்டி மீது அழுந்த வைத்து நின்று கொள்ள வேண்டும். அதே நேரத்தில் கைகள் இரண்டையும் தூக்கி மரம் போல விரியச் செய்து நின்று கொண்டு ஆழ மூச்சிழுத்து 30 விநாடிகள் வரை இப்படியே நிற்க வேண்டும். பிறகு கால் மாற்றிச் செய்யலாம். 

பலன்:

இந்த ஆசனம் செய்வதால் முதுகெலும்பு, கால் முட்டிகள் வலுப்பெறு, கைகள், தோள்பட்டை தசைகள் வலுவாகும். முதுகு வலி, கால் வலி பூரண குணமாகும்.

5. விபரீத கரணி அல்லது சுவரின் மீது கால்களைத் தூக்கி நிறுத்தும் போஸ்

விபரீத கரணி ஆசனா அல்லது சுவற்றில் நிற்கும் நிலை.. 
விபரீத கரணி ஆசனா அல்லது சுவற்றில் நிற்கும் நிலை.. 

இது ரொம்ப சுகமான ஆசனம் என்று சொன்னால் அது பொய்யில்லை. பெண்களைப்  பொதுவாக அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்று சொல்லியே பழக்கப்படுத்துவார்கள். அதனால் அவர்கள் கால்களை உயர்த்தி சுவற்றில் வைத்துக் கொண்டு அமர்வது எல்லாம் அடக்கமின்மை எனக் கற்பிக்கப்பட்டிருக்கிறது நமது சமூகத்தில். ஆனால், இந்த யோகாசனப் பயிற்சி செய்ய நிச்சயம் இரண்டு கால்களையும் உயர்த்தி சுவற்றில் படிய வைத்தே ஆக வேண்டும். கிட்டத்தட்ட அரை சிரசாசனம் என்று வையுங்கள். ஆம், முழுமையாகச் செய்தால், சிரசு தரையில் அழுந்தி இருக்கும். ஆனால், இதில் பிருஷ்டம் கீழே அழுந்தி இருப்பதால் இதை அரை சிரசாசனம் என்று சொன்னால் தவறில்லை தானே! சரி, விளக்கம் புரிந்திருக்கும். புரியாதவர்கள் படத்தைப் பாருங்கள். இந்தப் போஸில் 15 விநாடிகள் அப்படியே மூச்சை ஆழ இழுத்து வெளியில் விடுங்கள். அது தான் விபரீத கரணி

பலன்:

இந்த ஆசனம் செய்வதால் கால் ஆடு சதைகள் வலுப்பெறும். சதை தொங்கிப் போகாமல் உறுதியாக மாறும். கால் நரம்புகள், முதுகெலும்புகள் வலுப்பெறும், தண்டுவடம் சற்றே ரிலாக்ஸ் ஆகி வலி நிவாரணம் கிடைக்கும். கால் பகுதியில் ரத்த ஓட்டம் சீராகும்.


இந்த 5 யோகாசனங்களையும் செய்து முடித்த பிறகு மறக்காமல் சவாசன நிலையில் 15 விநாடிகள் பயிற்சி செய்ய மறக்காதீர்கள்.

சவாசன நிலை
சவாசன நிலை

எந்த ஆசனம் செய்வதாக இருந்தாலும் முடிவில் சவாசனப் பயிற்சி அவசியம். அதைச் செய்து முடித்தால் மட்டுமே பல்வேறு பயிற்சி நிலைகளுக்கு உட்பட்டு விட்ட உடற்தசைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி உடல் இயக்கம் எளிமையாக இருக்கும்.

இந்த 5 யோகாசனங்களையும் தினமும் காலையிலோ அல்லது மாலையில் அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்த உடனோ தொடர்ந்து பயிற்சி செய்து வந்தீர்கள் என்றால் உங்களது கால்வலி வெகு சீக்கிரத்தில் காணாமலே போய்விடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com