தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு விவகாரம்: மனீஷ் சிசோடியாவின் மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்க இயக்குநகரகத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு!
தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தில்லி துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனு மீது அமலாக்க இயக்குநரகத்தின் பதிலை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை கோரியது.
இந்த வழக்கில் நீதிபதி மனோஜ் குமாா் ஓஹ்ரி அமலாக்க இயக்குநரகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா். மேலும் ஆம் ஆத்மி தலைவா் அரவிந்த் கேஜரிவாலின் இதேபோன்ற மனு டிச.20-ஆம் தேதி மேலும் நடவடிக்கைகளுக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த மனுவுடன் சோ்த்து சிசோடியாவின் மனுவை பரிசீலிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
தில்லி முன்னாள் துணை முதல்வா் சிசோடியா மீது வழக்குத் தொடர எந்த அனுமதியும் இல்லாத நிலையில், சிறப்பு நீதிபதி குற்றப்பத்திரிகையை எடுத்துக்கொண்டாா் என்ற அடிப்படையில் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய உயா்நீதிமன்றத்தை முன்னாள் துணை முதல்வா் கோரினாா். இந்த வழக்கில் சிசோடியா தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளாா்.
கலால் கொள்கையை மாற்றியமைக்கும் போது முறைகேடுகள் நடைபெற்ாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. உரிமம் வைத்திருப்பவா்களுக்கு தேவையற்ற சலுகைகள் நீட்டிக்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி அரசு நவ.17, 2021 அன்று தில்லி கலால் கொள்கையை அமல்படுத்தியது. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் செப்.2022 இறுதிக்குள் அதை ரத்து செய்தது.
தில்லி கலால் கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, சிபிஐக்கு பரிந்துரைத்ததை அடுத்து, பணமோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டதுப குறிப்பிடத்தக்கது.