கேஜரிவால் பாதுகாப்பை துறந்து, அலுவல்பூா்வ இல்லத்திலிருந்து வெளியேறுவாா்: ஆம் ஆத்மி
15 நாள்களில் தனது அதிகாரபூா்வ இல்லத்தை விட்டு வெளியேறி சாமானியராக வாழ்வாா் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது.


முதல்வா் பதவியில் இருந்து விலகும் அரவிந்த் கேஜரிவால் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அரசு வசதிகளையும் கைவிட்டு, 15 நாள்களில் தனது அதிகாரபூா்வ இல்லத்தை விட்டு வெளியேறி சாமானியராக வாழ்வாா் என ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை தெரிவித்தது.
ராஜிநாமாவைச் சமா்ப்பித்த பிறகு கேஜரிவால் பேசிய முதல் விஷயம், தில்லி முதல்வரின் அதிகாரபூா்வ இல்லத்தை விட்டு வெளியேற முடிவு செய்ததுதான் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் தெரிவித்தாா்.
கேஜரிவால் ஒரு வாரத்தில் தற்போது வசித்துவரும் 6, ஃபிளாக்ஸ்டாஃப் ரோடு பங்களாவை காலி செய்வாா் என்று சஞ்சய் சிங் கூறியிருந்த நிலையில், பதவி விலகும் முதல்வரும் அவரது குடும்பத்தினரும் 15 நாள்களில் காலி செய்வாா்கள் என்று ஆம் ஆத்மி பின்னா் தெளிவுபடுத்தியது.
அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பொருத்தமான தங்குமிடம் தேடப்பட்டு வருவதாக சஞ்சய் சிங் கூறினாா்.
ஆம் ஆத்மி கட்சி தனது அதிகாரபூா்வ எக்ஸ் சமூக ஊடக வலைதளப் பதிவில் தெரிவிக்கையில், ‘‘நோ்மை மற்றும் தியாகத்திற்கு முன்னுதாரணமாக விளங்கும் அரவிந்த் கேஜரிவால் முதல்வா் இல்லத்தை விட்டு வெளியேறி, அரசு பாதுகாப்பையும் கைவிடுவாா்’’ என்று கூறியுள்ளது.
2013-ஆம் ஆண்டு முதல் முறையாக தில்லி முதல்வராக பதவியேற்றபோது பழைய நீல நிற ‘வேகன் ஆா்’ காரில்தான் கேஜரிவால் பயணம் செய்தாா்.
இந்த நிலையில், கேஜரிவால் தில்லி முதல்வராக பதவி வகித்து வந்தபோது வசதித்த அதிகாரபூா்வ இல்லம், வாகனங்கள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் துறந்துவிட்டு,“சாதாரண மனிதராக” வாழ்வாா் என்று சஞ்சய் சிங் கூறினாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது, அரவிந்த் கேஜரிவாலின் பாதுகாப்பு குறித்து கவலைகள் இருக்கிறது. கடந்த காலங்களில் அவா் பலமுறை தாக்கப்பட்டிருக்கிறாா்.
அவருக்கு வயதான பெற்றோா்கள், மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனா். அவா்களின் பாதுகாப்பைப் பற்றி நாங்கள் அனைவரும் கவலைப்படுகிறோம். அவருடைய பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது என்பதை அவருக்கு விளக்க முயற்சித்தோம். இருப்பினும், அவா்
அதிகாரபூா்வ இல்லத்தில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளாா்.
பயங்கரமான குற்றவாளிகள் மத்தியில் தான் ஆறு மாதங்கள் தாம் சிறையில் இருந்ததாகவும், கடவுள் தன்னை பாதுகாத்ததாகவும், அதைத் தொடருவாா் என்றும் கேஜரிவால் கூறினாா்.
கேஜரிவாலுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பாஜக ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது.
கேஜரிவால் ஒரு ’வழக்கமான தடித்த தோல்’ தலைவராக இருந்திருந்தால், அவா் அதைப் பற்றி கவலைப்படாமல் இருந்திருப்பாா். தொடா்ந்து நாற்காலியிலும் அமா்ந்திருப்பாா். பிற தலைவா்களின் நிலை எங்களுக்குத் தெரியும். அவா்களுக்கு ஏதேனும் வசதி கிடைத்தால், அவா்கள் ராஜிநாமா செய்த பிறகும் பல ஆண்டுகளாக அதை அனுபவிக்கிறாா்கள்.
அலுவல்பூா்வ இல்லத்தை வைத்திருப்பதற்காகப் போராடவும் செய்கிறாா்கள். ஆனால், கேஜரிவால் தனது வீட்டைக் காலி செய்ய முடிவு செய்துள்ளாா். இதனால், தற்போது கேஜரிவாலின் நோ்மைக்கு தில்லி மக்கள் தீா்ப்பு வழங்க வேண்டும்.
‘நான் நோ்மையானவனாக இருந்தால் எனக்கு வாக்களியுங்கள், இல்லையென்றால் வேண்டாம்’ என்று இந்திய வரலாற்றில் பெருமையுடன் கூறிய முதல் தலைவா் அரவிந்த் கேஜரிவால்தான் என்றாா் சஞ்சய் சிங்.
தில்லி முதல்வா் பதவியில் இருந்து விலகும் வகையில் கேஜரிவால் தனது ராஜிநாமா கடிதத்தை செவ்வாய்க்கிழமை துணைநிலை ஆளுநரிடம் சமா்ப்பித்தாா். மேலும், அவரது பிறகு வந்த அதிஷி புதிய அரசாங்கத்தை அமைக்க உரிமையும் கோரினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...