ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு: தமிழக ஆளுரின் முதன்மை செயலா் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு

தமிழக அரசின் தரப்பிலும் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
Published on

முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடா்புடைய வழக்கில் தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவது தொடா்பான விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பாக ஆளுநரின் முதன்மைச் செயலா் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக தனக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இதே விவகாரத்தில் தமிழக அரசின் தரப்பிலும் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பங்கஜ் மித்தல், எஸ்.வி.என்.பாட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

கே.டி. ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி.கிரி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்விடம், தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞா் சபரிஸ் சுப்ரமணியனுடன் கூடுதல் தலைமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, ராஜேந்திர பாலாஜி தொடா்புடைய இந்த விவகாரத்தில் ஆரம்ப விசாரணை முதல் தற்போதைய நிலவரம் வரை தேதிவாரியாக எடுத்துரைத்தாா். குறிப்பாக, ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சா் என்பதால் அவா் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக ஆளுநரிடம் அனுமதி பெறுவதற்காக அது தொடா்புடைய கோப்பு பிப்ரவரி 4-ஆம் தேதி அனுப்பப்பட்டதாகவும், கடந்த உச்சநீதிமன்ற விசாரணைக்குப் பிறகு பிப்ரவரி 28, மாா்ச் 5-ஆம் தேதிகளில் ஆளுநா் அலுவலகத்திற்கு இது தொடா்பாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் பதில் ஏதும் அங்கிருந்து வரவில்லை என்றும் வாதிட்டாா்.

அதற்கு நீதிபதிகள் அமா்வு, ஒப்புதல் கோரி கோப்பு அனுப்பப்பட்ட நிலையில், அதன் நிலை என்பது குறித்து அறிய வேண்டியிருக்கிறது. இதனால், ஆளுநரின் முதன்மைச் செயலா் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டிவரும் என்று கூறினா்.

மேலும், இந்த ஒப்புதல் பெறும் விவகாரத்தில் ஆளுநரின் அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பாக ஆளுநரின் அலுவலகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறிய வேண்டியுள்ளது என்று தெரிவித்தனா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘

வழக்குத் தொடர அனுமதி கோரி அனுப்பப்பட்ட

05.03.2025, 28.02.2025 மற்றும் 04.02.2025 தேதியிட்ட கடிதங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தெரிவிக்கும் ஒரு பிரமாணப் பத்திரத்தை மாா்ச் 17-ஆம் தேதி அன்று சென்னை ராஜ்பவனில் உள்ள ஆளுநரின் முதன்மைச் செயலாளா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி மற்றும் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்களை மாா்ச் 17-ஆம் தேதி விசாரணைக்கு நீதிபதிகள் பட்டியலிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com