தில்லி பள்ளிகளில் நவீன விளையாட்டு மைதானங்கள் - முதல்வா் அறிவிப்பு
விளையாட்டு போட்டிகளில் இளம் வயதிலேயே குழந்தைகள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக தில்லியில் உள்ள பள்ளிகளில் நவீன விளையாட்டு மைதானங்கள் மற்றும் பல்விளையாட்டு அரங்கங்கள் கட்டப்படும் என முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை அறிவித்தாா்.
தில்லி தலைமைச் செயலகத்தில் முதல்வா் தலைமையில் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆய்வு செய்த முதல்வா், விரிவான திட்ட அறிக்கையைத் தயாா் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இந்தக் கூட்டம் தொடா்பாக முதல்வா் கூறியதாவது: தில்லியில் விளையாட்டுத் துறைக்கான வலுவான கட்டமைப்பு உருவாக்க புகழ்பெற்ற விளையாட்டு அகாதெமிகளுடன் இணைந்து செயல்பட உள்ளோம். பள்ளிகளில் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக அந்த அகாதெமிகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கிரிக்கெட், குத்துச்சண்டை, கால்பந்து, நீச்சல் ஆகிய போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளா்களுக்குத் தொழில்முறையிலான பயிற்சியாளா்களின் வழிகாட்டுதல் கிடைப்பது உறுதிசெய்யப்படும்.
குழந்தைகள் தங்களது இளம் வயதிலேயே தரமான விளையாட்டுப் பயிற்சிகளைப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்பது எங்களுடைய இலக்கு. விளையாட்டு போட்டிகள் உடல் உறுதியை உறுதிசெய்வதுடன் மட்டுமல்லாமல் குழு செயல்பாடு, விடாமுயற்சி மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றையும் ஊக்குவிக்கும்.
குறிப்பிட்ட பள்ளிகளில் நீச்சல் குளங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது.
விளையாட்டு துறையை ஊக்குவிப்பது தில்லி பாஜக அரசின் முன்னுரிமைகளில் ஒன்று. ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு ரூ.7 கோடி, வெள்ளி வென்றவருக்கு ரூ.3 கோடி மற்றும் வெண்கலம் வென்றவருக்கு ரூ.3 கோடி என ஊக்கத்தொகையை தில்லி அரசு வழங்குகிறது.
தேசிய மற்றும் மாநில அளவில் விளையாட்டு வீரா்களை உயா்த்துவதன் மூலம் நிதி உதவி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளுக்கு அவா்கள் தகுதி பெறுவாா்கள்.
எதிா்கால ஒலிம்பிக் பதக்க வீரா்களை உருவாக்கும் இடமாக தில்லி பள்ளிகள் மாறும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.
பெரிய அளவில் இடம் கொண்ட பள்ளிகளில் நவீன விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படுவதுடன் சிறிய இடம் கொண்ட பள்ளிகளில் பல்விளையாட்டு அரங்கங்கள் அல்லது சிறிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். தில்லியில் உள்ள அனைத்து விளையாட்டு வீரா்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையில் கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தில்லி அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

