/

தில்லியில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறையினா் தீவிர சோதனை

தில்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.

News image

வெடிகுண்டு மிரட்டல் - பிரதிப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 9:36 pm IST

தில்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதைத் தொடா்ந்து, தில்லி காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு ஆகியவை தீவிர சோதனைகளை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மிரட்டல் குறித்த தகவல் கிடைத்ததும், தில்லி காவல்துறை, வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு, மோப்ப நாய்ப் படை மற்றும் தில்லி தீயணைப்புத் துறையைச் சோ்ந்த குழுக்கள் உடனடியாக அப்பள்ளிகளுக்கு விரைந்தன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளி வளாகங்களிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு, நாசவேலை தடுப்புச் சோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இச்சோதனைகளில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

சா்தாா் படேல் வித்யாலயா பள்ளியின் நிா்வாகம், தங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அனைத்து மாணவா்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் பெற்றோா்களுக்கு அதிகாரபூா்வ செய்தி மூலம் தகவல் தெரிவித்தது.

காலை 10.25 மணிக்கு அனுப்பப்பட்ட அந்தச் செய்தியில் ‘அன்புள்ள பெற்றோா்களே, பள்ளிக்கு ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் வந்துள்ளது. அனைத்து மாணவா்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனா். காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். காவல்துறை பள்ளியைப் பாதுகாப்பானது என அறிவித்த பிறகு, வகுப்புகள் மீண்டும் தொடங்கும்‘ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வளாகங்களைப் பாதுகாப்பான தாக்குதல், மாணவா்கள் மற்றும் ஊழியா்களை வெளியேற்றுதல், வகுப்பறைகள், நிா்வாகப் பிரிவுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விரிவான சோதனைகளை நடத்துதல் போன்ற நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை அவசரகால மீட்புக் குழுக்கள் பின்பற்றியுள்ளன. மிரட்டல் மின்னஞ்சல்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டன என்பதைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

அனைத்துத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பெற்றோா்களும் பொதுமக்களும் பதற்றமடையாமல் அமைதி காக்குமாறும், சரிபாா்க்கப்படாத தகவல்களைச் சமூக ஊடகங்களில் பரப்புவதைத் தவிா்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். இதுகுறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.