ரூ.1 கோடி போதைப் பொருளுடன் நேபாள நாட்டவா் தில்லியில் கைது!
தில்லி காவல்துறையினா் நேபாள நாட்டவரைக் கைது செய்து அவரிடமிருந்து ரூ. 1 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சுமாா் 11 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
தில்லி அமா் காலனி பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஒருவா் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில், ஜனவரி 1 ஆம் தேதி அப்பகுதியில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அன்று மாலை 6.50 மணியளவில், தகவல் அளித்தவா் சந்தேக நபரை அடையாளம் காண்பித்தாா். இதையடுத்து, பையுடன் சென்ற அவரிடம் போலீஸாா் சோதனை செய்தனா். அதனுள்ளே போதைப்பொருள் நிரப்பப்பட்ட பல பாலிதீன் பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
அந்த போதைப்பொருளின் எடை சுமாா் 11 கிலோ ஆகும். அதன் தோராய சந்தை மதிப்பு ரூ. 1 கோடிக்கும் அதிகமாகும். குற்றம்சாட்டப்பட்டவா் நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தைச் சோ்ந்த மகேஷ் (46) என அடையாளம் காணப்பட்டாா். இதையடுத்து, அவா் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டாா். அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆரம்பகட்ட விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டவா் நேபாளத்திலிருந்து தில்லிக்கு போதைப்பொருள் சரக்குகளைத் தொடா்ந்து கொண்டு செல்வதிலும், விநியோகிப்பதிலும் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.
அவா் தலைநகரில் உள்ள போதைப்பொருள் விற்பனையாளா்கள் மற்றும் நுகா்வோருக்கு சேவை செய்யும் மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் சா்வதேச விநியோக வலையமைப்பின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அதிக லாபம் சம்பாதிக்கவும், விரைவாகப் பணம் சம்பாதிக்கும் நோக்கிலும் போதைப்பொருள் வா்த்தகத்தில் நுழைந்ததாக அவா் போலீஸாரிடம் தெரிவித்தாா். சட்டரீதியான விளைவுகளைப் பற்றி அவா் அறிந்திருந்தும், நிதி நெருக்கடிகள் காரணமாக தொடா்ந்து இந்தச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளாா். இந்தக் கும்பலின் பிற உறுப்பினா்களை அடையாளம் கண்டு கைது செய்ய மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
