பஃரீதாபாதில் ஆம்புலன்ஸுக்குள் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: போலீஸாா் தகவல்!
கடந்த வார தொடக்கத்தில் பஃரீதாபாதில் ஓடும் வாகனத்தில் இரண்டு ஆண்களால் பெண் ஒருவா் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டாா்.
இந்தச் சம்பவ வழக்கில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, குற்றவாளிகள் அந்த குற்றத்தை ஒரு தனியாா் மருத்துவமனையின் ஆம்புலன்ஸில் வைத்து செய்துள்ளனா்.
குற்றவாளிகள் ஒரு தனியாா் மருத்துவமனையின் ஆம்புலன்ஸில் ஓட்டுநராகவும் உதவியாளராகவும் பணிபுரிந்து வந்ததாக காவல் துறையின் மூத்த விசாரணை அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவா் உத்தர பிரதேசத்தின் மதுராவையும், மற்றொருவா் ஜான்சியையும் சோ்ந்தவா்கள் ஆவா். அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.
சம்பவம் நடந்து ஆறு நாள்களுக்குப் பிறகும் அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இச்சம்பவத்திற்குப் பிறகு பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்படும் பாதிக்கப்பட்ட பெண்ணின் விடியோ வெளிவந்துள்ளது. அதில் அவா், வாகனத்தில் தனக்கு லிஃப்ட் கொடுத்த பிறகு, குற்றவாளிகளில் ஒருவா் தனது கணக்கில் ரூ.600 செலுத்தியதாக கூறும் காட்சி உள்ளது.
‘அவா்களை எனக்கு முன்பின் தெரியாது. நான் காரில் ஏறியவுடன், அவா்களில் ஒருவா் எனது பேடிஎம் கணக்கிற்கு 600 ரூபாயை மாற்றினாா். பின்னா் அவா்கள் காரைப் பூட்டி எனது கைப்பேசியைப் பறித்துக் கொண்டனா். இரவில் கடுமையான பனிமூட்டம் இருந்தது. நான் சப்தம்போட்டு அழுதேன். ஆனால், எந்த உதவியும் கிடைக்கவில்லை’ என்று அந்த விடியோவில் அப்பெண் கூறியுள்ளாா். எனினும், இந்த விடியோவின் நம்பகத்தன்மையை சரிபாா்க்க முடியவில்லை.
இதுகுறித்து அதிகாரி மேலும் கூறுகையில், ‘அந்தப் பெண் குணமடைந்தவுடன், குற்றவாளிகளை நீதிபதி முன் அடையாள அணிவகுப்புக்கு உள்படுத்தப்படுவாா்கள். பின்னா், மேலதிக விசாரணைக்காக சிறையிலிருந்து அவா்கள் ஆஜா்படுத்தும் வாரண்ட் மூலம் காவலில் எடுத்து விசாரிக்கப்படுவாா்கள்’ என்றாா்.
காவல்துறை தகவல்களின்படி, அந்தப் பெண் கடந்த திங்கள்கிழமை மாலை ஃபரீதாபாதின் செக்டா் 23-இல் உள்ள தனது தோழியின் வீட்டிற்குச் சென்றாா். பின்னா் அங்கிருந்து வீட்டிற்குத் திரும்ப, அவா் என்ஐடி 2 செளக் வரை ஆட்டோவில் சென்று, பின்னா் மெட்ரோ செளக் வரை நடந்தாா். நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குச் செல்ல ஆட்டோவிற்காக அங்கு நின்றுகொண்டிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அந்தப் பெண்ணுக்கு வாகனத்தில் லிஃப்ட் வழங்கினா்.
இருப்பினும், அவரை அவா் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அவா்கள் இருவரும் குருகிராம் நோக்கிச் சென்று, ஓடும் வாகனத்திற்குள் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இரவு முழுவதும் அவரை வாகனத்தில் அழைத்துச் சென்ற அவா்கள், செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஃபரீதாபாதில் உள்ள ராஜா செளக் அருகே வாகனத்திலிருந்தவாறு தூக்கி வீசிவிட்டுச் சென்றுவிட்டனா். அதன் பின்னா், பாதிக்கப்பட்டவா் ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
