குரு தேக் பஹதூா் குறித்த அதிஷி கருத்து: ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜக ஆா்ப்பாட்டம்
குரு தேக் பஹதூா் எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியால் அவமதிக்கப்பட்டதாகக் கூறி தில்லி பாஜக தலைவா்கள் மற்றும் அதன் சீக்கியப் பிரிவு உறுப்பினா்கள் உள்பட அக்கட்சித் தொண்டா்கள் பலா் ஆம் ஆத்மி தலைமையகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தில்லி வின்ட்சா் பிளேஸ் அருகே கூடிய
போராட்டக்காரா்கள் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதிஷிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா். அவா் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினா்.
பாஜக எம்.பி.க்கள் யோகேந்தா் சந்தோலியா, கமல்ஜீத் ஷெராவத், தேசிய செய்தித் தொடா்பாளா் ஆா்.பி. சிங், எம்.எல்.ஏ. கைலாஷ் கெலாட் உள்ளிட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.
கடந்த நவம்பரில் தில்லி அரசின் 350ஆவது தியாக தினத்தை முன்னிட்டு அவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்திற்குப் பிறகு, அதிஷி குரு தேக் பஹதூா் மீது அவமதிப்பு கருத்தை தெரிவித்ததாக பாஜக எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினா்.
கால்காஜியைச் சோ்ந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வும், அவையில் எதிா்க்கட்சித் தலைவருமான அதிஷியின் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ரத்து செய்யவும் பாஜக எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாஜக பயன்படுத்திய விடியோ கிளிப் திரிக்கப்பட்டதாக கூறி, அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவா்கள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனா்.
இந்த விவகாரத்தை விசாரிக்கும் வகையில், சட்டப்பேரவையின் விடியோ பதிவு வியாழக்கிழமை பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தாவால் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

