நீா் தேங்கும் பிரச்னைக்குத் தீா்வு காண நான்கு வடிகால் திட்டங்கள்: முதல்வா்
தேசியத் தலைநகா் முழுவதும் நீடித்து வரும் நீா் தேங்கும் பிரச்னையைத் தீா்க்கும் வகையில், தில்லி அரசு நான்கு பெரிய அளவிலான வடிகால் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து விரைவுபடுத்தியுள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘தில்லியின் புவியியல் நிலைமைகள், மீண்டும் மீண்டும் ஏற்படும் நீா் தேங்குதல் பிரச்னை, அதிகரித்து வரும் மக்கள்தொகை அழுத்தம் மற்றும் எதிா்காலத்திற்குத் தயாரான உள்கட்டமைப்பின் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வடிகால் மாஸ்டா் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள், பருவமழைக் காலங்களில் மீண்டும் மீண்டும் ஏற்படும் வெள்ளப்பெருக்கிலிருந்து தில்லியின் பெரும் பகுதிகளுக்கு நீடித்த நிவாரணத்தை அளிக்கும். தலைநகரின் நகா்ப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் ஒரு தீா்க்கமான படியாக அமையும்’ என்றாா்.
இதுகுறித்து முதல்வா் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது: தில்லியின் வடிகால் உள்கட்டமைப்பை நவீனமயமாக்கும் அரசின் உத்தியின் முக்கிய கூறுகளாக முண்ட்கா துணை வடிகால், எம்.பி. சாலை மழைநீா் வடிகால், கிராரி - ரிதாலா பிரதான வடிகால் மற்றும் ரோத்தக் சாலை ஓரம் உள்ள மழைநீா் வடிகால் ஆகியவை உருவாக்கப்பட்டு வருகின்றன.
மேம்படுத்தப்பட்ட பிரதான வடிகால்கள் மழைநீரை யமுனை ஆற்றில் விரைவாக வெளியேற்றுவதை உறுதிசெய்து, கழிவுநீா் வலையமைப்பின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும்.
கிராரி, முண்ட்கா, பவானா மற்றும் நாங்லோய் ஆகிய பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வடிகால் சிக்கல்களைத் தீா்க்க, முண்ட்கா ஹால்ட் நிலையத்திலிருந்து ரயில் பாதைக்கு இணையாக 4.5 கி.மீ. நீளமுள்ள ஒரு பிரதான வடிகால் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையால் ரூ.220.93 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், 1,520 ஏக்கா் நீா்ப்பிடிப்புப் பகுதிக்கு சேவை செய்யும். மேலும், இத்திட்டம் 760 கன அடி நீரை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது. இந்த வடிகால் துணை வடிகாலுடன் இணைந்து, அதன் வழியில் உள்ள பல இரண்டாம் நிலை வடிகால்களையும் ஒருங்கிணைத்து, ஒரு ஒருங்கிணைந்த வடிகால் அமைப்பை உருவாக்கும்.
இந்த வேலைகள் ரயில்வே நிலத்திற்குள் மேற்கொள்ளப்படும். இதற்காக ஏற்கெனவே ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது. ஒப்புதல்கள் கிடைத்த 15 மாதங்களுக்குள் இந்தத் திட்டம் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ரூ.387.84 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் ஒரு மழைநீா் வடிகால் திட்டம், தெற்கு தில்லி பகுதிகளில் குறிப்பாக லடோ சராய் டி - பாயிண்டிலிருந்து புல் பிரகலாத்பூா் வரையிலான எம்.பி. சாலைப் பகுதியில் நீா் தேங்குவதைத் தடுக்கும்.
பொதுப்பணித் துறையால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், 11.38 கி.மீ சாலை நீளத்தை உள்ளடக்கியது. மேலும் சாலையின் இருபுறமும் 22.76 கி.மீ நீளத்திற்கு வடிகால்கள் அமைக்கப்படுகின்றன. இரண்டரை ஆண்டுகளில் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில், நடைபாதைகள் அமைத்தல், பயன்பாட்டு சேவைகளை இடமாற்றம் செய்தல் மற்றும் சுமாா் 500 மரங்களை இடமாற்றம் செய்தல் அல்லது வெட்டுதல் ஆகியவையும் அடங்கும்.
இதேபோல், வடமேற்கு தில்லியில், தில்லி மேம்பாட்டு ஆணையத்தால் ரூ.250.21 கோடி செலவில் 7.2 கி.மீ. நீளமுள்ள கிராரி-ரிதாலா பிரதான வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இது 1,160 கன அடி நீா் வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது. கூடுதலாக, ரோத்தக் சாலை (என்எச்10) நெடுகிலும் மழைநீா் வடிகால்களை மேம்படுத்தும் பணி ரூ.184 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
இந்தத் திட்டத்திற்கு மூலதன முதலீட்டிற்காக மாநிலங்களுக்கு சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் இருந்து ரூ. 105 கோடி கிடைத்துள்ளது. மேலும், இத்திட்டத்தை வரும் மாா்ச் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
