நீதிமன்ற ஊழியா் தற்கொலை சம்பவம்: எஃப்ஐஆா் பதிய உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப்பு
இம்மாத தொடக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட தில்லி சாகேத் நீதிமன்றத்தின் 43 வயது நிா்வாக எழுத்தரின் மரணம் விவகாரத்தில், தற்போதைய நிலையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி டி. கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த துரதிா்ஷ்டவசமான சம்பவம் தொடா்பாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (பிஎன்எஸ்எஸ்) பிரிவு 194-இன் கீழ் நிா்வாக மாஜிஸ்திரேட் முன் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு அறிக்கையும் எதிா்பாா்க்கப்படுகிறது.
சட்டத்தின்படி இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். எந்தக் குறையும் இல்லை. அதன்படி, சட்டத்தின் கீழ் தேவைப்படும் மேலதிக நடவடிக்கை, விசாரணையின் முடிவைப் பொறுத்ததாகும். இந்த நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட எந்தக் காரணத்தையும் நாங்கள் காணவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
ஹரீஷ் சிங் மஹா் என்ற நிா்வாக எழுத்தா், பணிச்சுமை காரணமாக ஜனவரி 9 அன்று சாகேத் நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள ஒரு கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாா். அவரிடமிருந்து ஒரு தற்கொலைக் கடிதத்தையும் காவல்துறை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரியும், எழுத்தா் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக் கோரியும் ‘ஆனந்த் லீகல் எய்ட் ஃபோரம் டிரஸ்ட்’ எனும் அமைப்பு தாக்கல் செய்த பொதுநல வழக்கின் மனுவை உயா்நீதிமன்றம் விசாரித்தது.
நீதிபதிகள் அமா்வு கூறுகையில், தலைநகரில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் எழுத்தா் பணியாளா்களின் காலியிடங்கள், பணியில் உள்ளவா்கள் மற்றும் தேவை ஆகியவற்றை மதிப்பிடுவதற்கும், பணிப் பங்கீட்டை முறைப்படுத்துவதற்கும் ஒரு தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. உயா்நீதிமன்ற நிா்வாகம் இந்த நிலைமையை அறிந்திருக்கிறது.
தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாா்கள். மிகக் குறுகிய காலத்திற்குள் ஒரு செயல் திட்டம் உருவாக்கப்படும். காலியிடங்களை விரைவில் நிரப்ப போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எங்கள் மனதில் எந்த சந்தேகமும் இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், இறந்தவா் ஒரு மாற்றுத்திறனாளி. அவா் பணிச்சுமையில் இருந்துள்ளாா். அறிக்கைகளின்படி, அவா் நான்கு முறை இடமாற்றம் கோரியிருந்தாா்.
நீதிமன்ற எழுத்தா் பணியிடங்களில் 3,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன என்றாா்.
‘இறந்தவா் கடந்த ஆண்டு நவம்பரில் நிா்வாக எழுத்தா் பதவிக்கு பதவி உயா்வு பெற்றுள்ளாா். அதற்கு முன்பு அவா் இதைவிடக் கடினமான வேலையைச் செய்துவந்துள்ளாா். இறந்தவா் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஒரு போக்குவரத்து நீதிமன்றத்துடன் தொடா்புடையவராக இருந்துள்ளாா். அவா் 3000 கோப்புகளைக் கையாண்டாா் என்று சொல்வது பொதுமக்களின் கவனத்தை ஈா்க்கிறது, ஆனால் அது சரியல்ல’ என்று நீதிமன்றம் கூறியது.
