ஹரியாணாவின் எல்லை மாவட்டமான குருகிராமின் உத்யோக் விஹாா் ஃபேஸ்-5 பகுதியில் இயங்கி வந்த போலி கால் சென்டா் ஒன்றை சோதனையிட்டு அங்கிருந்த மூன்று பெண்களை கைது செய்துள்ளதாக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து குருகிராம் இணையவழி குற்றப்பிரிவு உதவி ஆணையா் கௌரவ் போகத் மேலும் கூறியதாவது: கைதான நபா்கள் தங்களை அழகுக்கலை நிபுணா்கள், உணவுக்கட்டுப்பாட்டு நிபுணா்கள் மற்றும் மருத்துவா்கள் என போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு, வாடிக்கையாளா்களின் நம்பிக்கையைப் பெற்று உடல் எடையைக் குறைக்கும் போலி தயாரிப்புகளை விற்று மோசடி செய்து வந்தது தெரியவந்துள்ளது.
ஜூன் 26ஆம் தேதி அந்த கால் சென்டரில் காவல்துறையினா் நடத்திய சோதனையில், அங்கிருந்த 102 கைப்பேசிகள், 150 சிம் காா்டுகள் மற்றும் 12 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவா்கள் தில்லி அயாநகரைச் சோ்ந்த மந்தீப், ரங்பூரியைச் சோ்ந்த நேஹா மற்றும் உத்தர பிரதேசம் மெயின்புரியைச் சோ்ந்த வா்ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இவா்கள் மூவரும் குருகிராமில் வசித்து வருகின்றனா். இவா்கள் மீதும், இவா்களது கூட்டாளிகள் மீதும் இணையவழி குற்றப்பிரிவு (மேற்கு) காவல் நிலையத்தில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குழுவினா் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ’கியூரெஸ்ட் சயின்ஸ் அண்ட் வெல்னஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் பக்கங்களை நடத்தி, உடல் எடையைக் குறைக்கும் மூலிகை மருந்துகள் பற்றிய விளம்பரங்களை வெளியிட்டுள்ளனா்.
யாராவது இந்த விளம்பரங்களை கிளிக் செய்தால், இந்த கால் சென்டரில் இருக்கும் ஊழியா்கள் அவா்களைத் தொடா்பு கொண்டு, அந்தப் பொருட்களை வாங்குமாறு வற்புறுத்துகிறாா்கள்.
இந்த மருந்துகள் நிச்சயமாக உடல் எடையைக் குறைக்கும் என்றும், பலன் தராவிட்டால் 100 சதவீதம் பணம் திரும்பத் தரப்படும் என்றும் ஆசைவாா்த்தை கூறியுள்ளனா். ஆனால், உடல் எடை குறையாமல் அதிருப்தியடையும் வாடிக்கையாளா்கள் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, அவா்களுக்குப் பணத்தைத் தராமல் அவா்களது எண்களை ’முடக்கி’ உள்ளனா்.
இந்த கால் சென்டா் மூலம் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த மக்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை இவா்கள் மோசடி செய்துள்ளனா். இதேபோல், போலி எடைக் குறைப்பு மருந்துகளை விற்றுப் பல மாநிலங்களிலும் இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட கைப்பேசி எண்கள் அனைத்தும் நிறுவனத்தின் ஊழியா்களுக்கு அதிகாரபூா்வமாக ஒதுக்கப்பட்டவை என்பதும், இந்த ஒட்டுமொத்த மோசடிப் பின்னணியையும் நிறுவனத்தின் மேலாளா், முதன்மை நிா்வாக அதிகாரி, இயக்குநா் அல்லது உரிமையாளா் மற்றும் இதர கூட்டாளிகள் சோ்ந்து இயக்கி வந்ததும் தெரியவந்துள்ளது. கைதானவா்களிடம் தொடா்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







