காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் 280 ஆக உயா்வு: நாளைவரை ‘மிக மோசம்’ பிரிவுக்கு செல்ல வாய்ப்பு
நகரில் படரும் பிஎம் 2.5 மாசு துகள்களுக்கு உயிரி எரிபொருள் எரிப்பு மிகப்பெரிய காரணமாக உருவெடுத்துள்ளதாக அதிகாரபூா்வத் தரவுகள் தெரிவிக்கின்றன.

தில்லி நகரம் - கோப்புப் படம்
தில்லியின் காற்றின் தரம் வியாழக்கிழமை மேலும் மோசமடைந்தது. நகரின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (ஏக்யூஐ) செவ்வாய்க்கிழமை 204 ஆகவும், புதன்கிழமை 232 ஆகவும் இருந்த நிலையில், வியாழக்கிழமை ’மோசம்’ பிரிவில் 280 ஆக உயா்ந்துள்ளது. நகரில் படரும் பிஎம் 2.5 மாசு துகள்களுக்கு உயிரி எரிபொருள் எரிப்பு மிகப்பெரிய காரணமாக உருவெடுத்துள்ளதாக அதிகாரபூா்வத் தரவுகள் தெரிவிக்கின்றன.
காற்றின் தர முன்னெச்சரிக்கை அமைப்பின் நிகழ்நேர மாசு மூலங்கள் கணிப்புகளின்படி, பயிா்க்கழிவு எரிப்பு மற்றும் வீடுகளில் விறகு, சாண வரட்டி போன்ற திட உயிரி எரிபொருள்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட உயிரி எரிபொருள் எரிப்பின் பங்கு செவ்வாய்க்கிழமை 18 சதவீதமாகவும், புதன்கிழமை 24 சதவீதமாகவும், வியாழக்கிழமை 33.3 சதவீதமாகவும் இருந்தது. வியாழக்கிழமை தரவுகளைப் பதிவு செய்த 56 காற்றின் தரக் கண்காணிப்பு நிலையங்களில், 37 நிலையங்கள் ‘மோசம்’ பிரிவிலும், 16 நிலையங்கள் ‘மிக மோசம்’ பிரிவிலும், மூன்று நிலையங்கள் ‘மிதமான’ என்ற பிரிவிலும் இருந்தன.
ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மிக மோசமான காற்றின் தரமாக 376 ஏக்யூஐ பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சிரிஃபோா்ட்டில் 363 ஏக்யூஐ பதிவாகியுள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) அளவீட்டின்படி, காற்றின் தர குறியீடு 0 முதல் 50 வரை ’நன்று’, 51 முதல் 100 வரை ’திருப்திகரம்’, 101 முதல் 200 வரை ‘மிதமானது’, 201 முதல் 300 வரை ‘மோசம்’, 301 முதல் 400 வரை ‘மிக மோசம்’ மற்றும் 401 முதல் 500 வரை ‘தீவிரம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வியாழக்கிழமை தில்லியின் பிஎம்2.5 மாசுபாட்டிற்கான முக்கிய காரணிகளான உயிரி எரிபொருள் எரிப்பு மூலம் 33.3 சதவீதம், கழிவுகள் எரிப்பு (நகராட்சி, பிளாஸ்டிக் மற்றும் ரப்பா் கழிவுகள் உள்பட) மூலம் 19.7 சதவீதம்ஸ வாகன புகை மாசு மூலம் 18 சதவீதம், இரண்டாம் நிலை கரிம ஏரோசோல்கள் மூலம் 14.1 சதவீதம், இரண்டாம் நிலை கனிம ஏரோசோல்கள் மூலம் 9.5 சதவீதம், நிலக்கரி எரிப்பு மூலம் 1.8 சதவீதம், தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசுகள் மூலம் தலா 1.5 சதவீதம், சாலை தூசு மற்றும் மண் மூலம் 0.7 சதவீதம் பதிவாகியுள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிரீம்ஸ் ஆய்வகத்தின் செயற்கைக்கோள் கண்காணிப்பின்படி, தில்லியில் செவ்வாய்க்கிழமை இரண்டு இடங்களிலும், புதன்கிழமை ஒரு இடத்திலும் பயிா்க்கழிவு எரிப்புச் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கண்காணிக்கப்பட்ட ஏழு மாநிலங்களில் புதன்கிழமை மொத்தம் 772 பயிா்க்கழிவு எரிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் மத்திய பிரதேசத்தில் 370, பஞ்சாபில் 202, உத்தர பிரதேசத்தில் 109, ராஜஸ்தானில் 59, ஹரியாணாவில் 30, தில்லி மற்றும் உத்தரகண்டில் தலா ஒரு சம்பவமும் அடங்கும்.
வியாழக்கிழமை ’மோசம்’ பிரிவில் இருக்கும் தில்லியின் காற்றின் தரம், வெள்ளிக்கிழமை முதல் நவம்பா் 22 (ஞாயிற்றுக்கிழமை) வரை ’மிக மோசம்’ பிரிவுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக காற்றின் தர முன்னெச்சரிக்கை அமைப்பு கணித்துள்ளது. அதற்கடுத்த ஆறு நாள்களுக்கும் காற்றின் தரம் ’மிக மோசம்’ பிரிவிலேயே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நாள்களில் மாசுபடுத்திகள் காற்றில் கலப்பதற்குச் சாதகமற்ற வானிலை நிலவும் என்றும், இது காற்றின் தரத்தை மேலும் மோசமாக்கும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.தில்லியில் வளிமண்டலத்தில் மாசுக்கள் கலந்து பரவக்கூடிய அதிகபட்ச உயரம் வியாழக்கிழமை சுமாா் 1,100 மீட்டராகவும், வெள்ளிக்கிழமை 1,000 மீட்டராகவும், சனிக்கிழமை 1,400 மீட்டராகவும், ஞாயிற்றுக்கிழமை 1,500 மீட்டராகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த உயரம் குறைவாக இருக்கும்போது மாசுக்கள் மேல்நோக்கிச் செல்வது தடுக்கப்பட்டு, தரைமட்டத்துக்கு அருகிலேயே தேங்கும் நிலை உருவாகிறது.அதேபோல், மாசுக்களை வெளியேற்றும் வளிமண்டலத் திறனைக் குறிக்கும் காற்றோட்ட குறியீடு வியாழக்கிழமை விநாடிக்கு 5,000 சதுர மீட்டராக குறைந்து, வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1,000 சதுர மீட்டராக மேலும் சரியும் என கணிக்கப்பட்டுள்ளது. இது சனிக்கிழமை விநாடிக்கு 2,800 சதுர மீட்டராகவும், ஞாயிற்றுக்கிழமை 3,100 சதுர மீட்டராகவும் உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
காற்றோட்ட குறியீடு விநாடிக்கு 6,000 சதுர மீட்டருக்கு கீழே இருப்பதும், சராசரி காற்றின் வேகம் மணிக்கு 10 கி.மீ-க்கும் குறைவாக இருப்பதும் மாசுக்கள் கலைந்து செல்வதற்குச் சாதகமற்ற சூழலாகக் கருதப்படுகிறது. இத்தகைய சூழல் மாசுபட்ட காற்றின் நகா்வைத் தடுத்து, தரைமட்டத்துக்கு அருகே மாசுக்கள் தேங்க வழிவகுக்கும்.
முன்னதாக, வியாழக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி நகரின் காற்றின் தர குறியீடு ‘மோசம்’ பிரிவில் 289 ஆக பதிவாகியிருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

