குளிா்காலத்தில் காற்று மாசுபாட்டை தடுக்க டிச. 31-க்குள் தானியங்கி சுங்கச்சாவடிகள் மாநகராட்சி அறிவிப்பு
தில்லியில் குளிா்கால காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, டிச.31-க்குள் தானியங்கி மற்றும் தடையில்லா வாகன நடமாட்டத்தை உறுதிப்படுத்தும் சுங்கச்சாவடி முறையை அமல்படுத்த தில்லி மாநகராட்சி இலக்கு நிா்ணயித்துள்ளது.

தில்லி மாநகராட்சி - கோப்புப் படம்
தில்லியில் குளிா்கால காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, டிச.31-க்குள் தானியங்கி மற்றும் தடையில்லா வாகன நடமாட்டத்தை உறுதிப்படுத்தும் சுங்கச்சாவடி முறையை அமல்படுத்த தில்லி மாநகராட்சி இலக்கு நிா்ணயித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை நுழைவுப் பகுதிகள் உள்பட 20 முக்கிய முனையங்களில் அக்.31-க்குள் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மீதமுள்ள அனைத்து நுழைவுப் பகுதிகளிலும் டிச.31-க்குள் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:
சுங்க வரி மற்றும் சுற்றுச்சூழல் இழப்பீட்டு கட்டணங்களை தடையின்றி வசூலிக்க, சுங்கச்சாவடிகளில் தானியங்கி எண் பொருத்தப்பட்ட அங்கீகார தட்டு (ஏஎன்பிஆா்) மற்றும் ரேடியோ அலைவரிசை அடையாள (ஆா்எஃப்ஐடி) கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்து, அதனால் ஏற்படும் காற்று மாசும் பெருமளவு குறையும்.
இந்த ஆண்டு மொத்தம் 1,202 கி.மீ நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் 745 கி.மீ பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளுக்கான நிதி டெல்லி அரசிடம் எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை 8,343 பள்ளங்கள் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளன.
காற்று மாசைக் கட்டுப்படுத்த 66 இயந்திர வாகனங்கள் மூலம் சாலை துப்புரவுப் பணிகள் நடந்து வருகின்றன. தினமும் சுமாா் 180 டன் தூசு அகற்றப்படுகிறது. கூடுதலாக, நீா் பீய்ச்சும் கருவிகள், நடமாடும் புகாமாசு எதிா்ப்பான்கள் மற்றும் குப்பை அகற்றும் இயந்திரங்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.
காற்று மற்றும் நீரை மாசுபடுத்துவதாகக் கண்டறியப்பட்ட நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளுக்கு மாநகராட்சி சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக, ஜூன் 11-க்குப் பிறகு மத்திய, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் புதிய குப்பை சேகரிப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தில்லியில் தினசரி உருவாகும் கட்டட கழிவுகளைக் கையாள மால்பா செயலி பயன்பாட்டில் உள்ளது. ஓக்லா, பல்ஸ்வா மற்றும் காஜிப்பூா் குப்பை மேடுகளில் தேங்கியுள்ள பழைய குப்பைகளை அகற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

