திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நெய்வேலி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு புவனேசுவரி அம்மன் உடனுறை புஷ்பவனநாதர் திருக்கோயில். நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தரும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.
மற்ற சிவாலயங்களைப் போன்று பெரிய அளவில் கட்டடங்கள், பிரகாரங்கள் இல்லையென்றாலும், சிறிய அளவிலான சன்னதிகளைக் கொண்டு, மிகப் பழைமையான திருக்கோயில்களுள் ஒன்றாக புஷ்பவனநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மாதந்தோறும் இருமுறை நடைபெறும் பிரதோஷ வழிபாடும், சனிப் பிரதோஷ வழிபாடும் பிரசித்தி பெற்றதாகத் திகழ்கின்றது.
இதையும் படிக்கலாமே.. மகப்பேறு அருளும் திருச்சி உத்தமர்கோயில்
பொதுமக்கள் தங்களின் பிரார்த்தனைகளை இத்திருக்கோயில் சன்னதியில் வேண்டிச் செல்கின்றனர். அந்த வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னர், இறைவன் மற்றும் இறைவி சன்னதிகளில் பக்தர்கள் சிறப்பு வழிபாடுகளை நடத்திச் செல்கின்றனர். உழவாரப் பணி செய்தும், பால் அபிஷேகம் செய்தும், வில்வம் மற்றும் தும்பைப்பூ ஆகியவற்றை கொண்டு அர்ச்சித்தும் வழிபாடுகளை நடத்திச் செல்கின்றனர்.
பொதுமக்கள் இறைவனுக்கும், இறைவிக்கும் தாங்களாகவே அர்ச்சனை, வழிபாட்டு முறைகளை செய்து வருகின்றனர். முசிறி சந்தரமௌலீசுவரர் கோயிலில் தொடங்கி, வெள்ளூர் திருக்காமேசுவரர், திண்ணக்கோணம் என்கிற திருநெற்குன்றம் சுயம்பு பசுபதீசுவரர், நெய்வேலி புஷ்பவனநாதர், கோமங்கலம் பசுபதீசுவரர் ஆகிய திருக்கோயில்கள் வழியாக திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் திருக்கோயில் வரை பசு ஒன்று நாள்தோறும் சென்று, அந்தந்த கோயில்களின் கருவறை லிங்கப்பாணங்களின் மீது பாலைச்சொரிந்து சென்று வந்ததாக செவிவழிச் செய்தியாக மக்கள் மத்தியில் கூறப்படுகிறது.
இறைவன் புஷ்பவனநாதர்
பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும், இறைவன் சன்னதி கிழக்கு நோக்கிய நிலையில்தான் அமைந்திருக்கும். ஆனால், இதில் சற்று மாறுபட்டு, நெய்வேலி அருள்மிகு புஷ்பவனநாதர் மேற்கு நோக்கிய சன்னதியில் திண்ணக்கோணம் சுயம்பு பசுபதீசுவரை நோக்கியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே.. பித்ரு, மாத்ருஹத்தி தோஷம் நீக்கும் திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோவில்
இத்திருக்கோயில் இறைவன் பெயர் சமஸ்கிருதத்தில் புஷ்பவனநாதர் என்றழைக்கப்பட்டாலும், தமிழில் பூவனநாதர், மலர்வனநாதர் என்றழைக்கப்படுகிறார். தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்கள் கேட்காமலேயே அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை உணர்ந்து, அதை அருளச் செய்யக்கூடியவராக புஷ்பவனநாதர் உள்ளார்.
இறைவி புவனேசுவரி அம்மன்
தெற்கு நோக்கிய சன்னதியில் இறைவி புவனேசுவரி அம்மன் எழுந்தருளியுள்ளார். நின்ற கோலத்தில் சாந்தமே உருவாக, தன்னை நாடி, தேடி வரும் பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றித் தரும் அன்னையாக அருள்மிகு புவனேசுவரி அம்மன் எழுந்தருளிக் காட்சியளிக்கிறார். மேலும் இறைவி சன்னதி வளாகத்திலேயே சிறிய அளவிலான விநாயகர் சிலையும், அதன் நேரில் எதிரில் அவரது வாகனமும் எழுந்தருளப்பட்டிருப்பதும் தனிச்சிறப்பாகக் கருதப்படுகிறது.
இதுபோல, இறைவன் சன்னதிக்கு வெளியே பெரிய அளவிலான சிவலிங்கமும் அமைந்துள்ளது. மேலும், இறைவன் சன்னதிக்கு நேர் எதிரில் மிகப்பெரிய அளவிலான நந்தியெம்பெருமானும், அதன் அருகில் சக்தி விநாயகரும் எழுந்தருளியுள்ளனர். மேலும் நாகர்-நாகக்கன்னிகளும் எழுந்தருளப்பட்டிருக்கின்றனர். கருவறையின் நிலையடியில் மீன்கள் இருப்பதால், இக்கோயில் பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்றாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இக்கோயிலைப் பற்றியும் அறியலாமே.. வாஸ்து தோஷம் நீக்கும் திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்
பிரதோஷ வழிபாடு
மாதத்தில் இருமுறை வரும் பிரதோஷ வழிபாடும், சனிப் பிரதோஷ வழிபாடும் இக்கோயிலில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. புஷ்பவனநாதருக்கும், புவனேசுவரி அம்மனுக்கும், நந்தியெம்பெருமானுக்கும் பிரதோஷ நாள்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, அலங்காரங்கள் செய்யப்பட்டு, இந்த வழிபாட்டில் நெய்வேலி மட்டுமல்லாது, சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் பங்கேற்று அருள்பெற்று செல்கின்றனர். இதுபோல பௌர்ணமி வழிபாடும், மகா சிவராத்திரி வழிபாடும் இக்கோயிலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சி.க.சிவகுமார் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் இங்கு உழவாரப் பணி மேற்கொண்டு, கவனிப்பாரற்று கிடந்த இக்கோயிலைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது இக்கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் அண்ணா, மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு மற்றும் சனிப் பிரதோஷ வழிபாடு, பௌர்ணமி வழிபாடு ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார்.
பரிகார சிறப்புகள்
பரிகாரத் தலங்கள் ஒன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பைப் பெற்றிருக்கும். அந்த வகையில் பக்தர்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தருபவராகப் புஷ்பவனநாதரும், புவனேசுவரி அம்மனும் இக்கோயிலில் எழுந்தருளியுள்ளனர். திருமணம் கைகூடுதல், குழந்தைப் பேறு, அரசுப் பணி, கடன் தொல்லை நீங்குதல், வீடு கட்டுதல், மனநலன் குணமாகுதல் போன்ற பக்தர்களின் ஒவ்வொரு பிரார்த்தனையும் நிறைவேற்றித் தரும் இறைவனாக புஷ்பவனநாதர் உள்ளதாக, பயனடைந்த பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கோயிலுக்கும் சென்று வரலாம்: வயிற்றுநோய் போக்கும் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்
தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்குத் தூய்மைப் பணியை மேற்கொண்டும், பால் அபிஷேகம் செய்தும், இறைவன் மற்றும் இறைவிக்குப் புத்தாடைகளை அணிவித்து பொங்கல் வைத்தும் வழிபாடு செய்கின்றனர். தாங்கள் நினைத்ததை இறைவனும், இறைவியும் அருள் செய்து வருகின்றனர் என்று பயனடைந்த பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
எப்படிச் செல்வது?
திருச்சியிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் நெய்வேலி கிராமம் அமைந்துள்ளது. மதுரை, தென்காசி, நெல்லை, தேனி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களிலிருந்தும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்கா, நெ.1.டோல்கேட், நொச்சியம், திருவாசி, துடையூர், சிறுகாம்பூர், வாய்த்தலை, தெற்கு, வடக்கு சித்தாம்பூர், கோமங்கலம் வழியாக நெய்வேலியை வந்தடையலாம்.
சென்னை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற வட மாவட்டங்களிலிருந்தும் வருபவர்களும், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் நெ.1.டோல்கேட் வந்து, மேற்கண்ட வழியாகவே இக்கோயிலுக்கு வந்து சேரலாம்.
கரூர், கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்களும், நாமக்கல், சேலம், தருமபுரி போன்ற மேற்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்களும் முசிறி வந்து, அங்கிருந்து த.புத்தூர் வழியாக திருப்பைஞ்ஞீலி செல்லும் தடத்தில் நெய்வேலிக்கு வந்து சேரலாம்.
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நெய்வேலிக்கு நகரப் பேருந்து வசதி உள்ளது. எனினும் கார், வேன் போன்ற வாகனங்களில் வருதல் நலம். கோயிலுக்கு காலை முதல் மாலை வரை எந்த நேரத்திலும் பக்தர்கள் வரலாம்.
தொடர்பு முகவரி
அருள்மிகு புவனேசுவரி அம்மன் உடனுறை புஷ்பவனநாதர் திருக்கோயில்
நெய்வேலி,
முசிறி வட்டம்,
திருச்சி மாவட்டம்.