ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

2019 உலகக் கோப்பையில் விளையாட ஆர்வம் காட்டிய டி வில்லியர்ஸ்; கண்டுகொள்ளாத தெ.ஆ. கிரிக்கெட் வாரியம்!

2019 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட அவர் முயன்றுள்ளார் என்கிற அதிரடித் தகவல்...

News image
Updated On :6 ஜூன் 2019, 10:27 am

எழில்

ஐபிஎல் போட்டியில் ஏபி டி வில்லியர்ஸால் விளையாட முடிகிறபோது உலகக் கோப்பைப் போட்டியில் அவரால் ஏன் விளையாட முடியாது என்கிற கேள்வி பலருக்கும் தோன்றியிருக்கும். 

ஆனால், இதே விருப்பதில் டி வில்லியர்ஸும் இருந்துள்ளார், 2019 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட அவர் முயன்றுள்ளார் என்கிற அதிரடித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

கடந்த வருடம் மே 23 அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏபி டி வில்லியர்ஸ் அறிவித்தார். 34 வயது டி வில்லியர்ஸ் தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்தார். தன்னுடைய ஓய்வு குறித்து டி வில்லியர்ஸ் கூறியதாவது: நான் சோர்வாக உள்ளேன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறேன். 114 டெஸ்ட், 228 ஒருநாள், 78 டி20 ஆட்டங்களில் பங்கேற்ற பிறகு மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க இதுவே சரியான தருணம். உண்மையில் சொல்லவேண்டுமென்றால், நான் மிகவும் சோர்ந்துவிட்டேன். இது மிகவும் கடினமான முடிவாகும். நன்கு விளையாடும்போதே ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்று எண்ணினேன். இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராகக் கிடைத்த வெற்றிகளுக்குப் பிறகு, ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என எண்ணுகிறேன். டைடன்ஸ் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன். டு பிளெஸ்ஸிஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்று கூறியுள்ளார்.

114 டெஸ்டுகளில் விளையாடியுள்ள ஏபி டி வில்லியர்ஸ், 8765 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 22 சதங்களும் 46 அரை சதங்களும் அடங்கும். 228 ஒருநாள் ஆட்டங்களில் 9577 ரன்களும் 78 டி20 ஆட்டங்களில் 1672 ரன்களும் எடுத்துள்ளார். 

இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த மாதம், உலகக் கோப்பைப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியைத் தேர்வு செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு, தான் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ், பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன், தேர்வுக்குழுத் தலைவர் லிண்டா ஆகியோரிடம் தெரிவித்துள்ளார் டி வில்லியர்ஸ். ஆனால் இது சாத்தியமில்லை என்று உடனடியாக டி வில்லியர்ஸுக்குத் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகிறது. சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் டி வில்லியர்ஸ். அதன்பிறகு அவர் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலோ அல்லது தென் ஆப்பிரிக்க உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலோ விளையாடவில்லை. இதனால் தெ.ஆ. அணிக்குத் தேர்வாகும் தகுதி அவருக்கு இல்லாமல் போய்விட்டது. மேலும் அவர் விருப்பப்படி அணியில் அவரைத் தேர்வு செய்துவிட்டால், இடைப்பட்ட காலத்தில் அவருக்குப் பதிலாகத் திறமையை நிரூபித்த வாண் டர் டஸ்ஸனுக்கு அநியாயம் செய்ததாக ஆகிவிடும். தனது முதல் நான்கு ஒருநாள் ஆட்டங்களில் மூன்று அரை சதங்கள் எடுத்தவர் அவர். இதனால் வாண் டர் டஸ்ஸனுக்கான வாய்ப்புகள் பாதிக்கப்படும்.

எனினும் ரசிகர்களின் விருப்பம் இன்னமும் டி வில்லியர்ஸ் மீதுதான் உள்ளது. உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய முதல் மூன்று ஆட்டங்களிலும் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியடைந்துவிட்டதால், டி வில்லியர்ஸை தென் ஆப்பிரிக்க அணிக்குள் கொண்டுவரவேண்டும் என்பதே பலருடைய விருப்பமாக உள்ளது. 

உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்த செய்தி தற்போது வெளியாகியுள்ளதால், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் முடிவு குறித்துச் சமூகவலைத்தளங்களில் பலரும் விவாதித்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.