வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மழையால் ரத்து
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. மழை காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.
பாகிஸ்தான் (274/10)
போட்டியின் இரண்டாம் நாளான இன்று (ஆகஸ்ட் 31) டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அப்துல்லா ஷஃபீக் 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து, சைம் ஆயுப் மற்றும் கேப்டன் ஷான் மசூத் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். ஷான் மசூத் 57 ரன்களிலும், சைம் ஆயுப் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய பாபர் அசாம் (31 ரன்கள்), சௌத் ஷகீல் (16 ரன்கள்), முகமது ரிஸ்வான் (29 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் களமிறங்கிய அகா சல்மான் 54 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
5 விக்கெட்டுகள்
வங்கதேசம் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மெஹிதி ஹாசன் மிராஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும், நஹித் ராணா மற்றும் ஷகிப் அல் ஹசன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இரண்டாம் நாள் முடிவு
பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேசம் அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது. ஷாத்மன் இஸ்லாம் 6 ரன்களுடனும், ஜாகீர் ஹாசன் 0 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
வங்கதேசம் பாகிஸ்தானைக் காட்டிலும் 264 ரன்கள் பின் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.