சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்படம் | AP

சதம் விளாசிய சஞ்சு சாம்சன்; தென்னாப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடியான சதத்தால் இந்திய அணி 202 ரன்கள் குவித்துள்ளது.
Published on

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடியான சதத்தால் இந்திய அணி ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று (நவம்பர் 8) டர்பனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.

சதம் விளாசிய சஞ்சு சாம்சன்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். அபிஷேக் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனையடுத்து, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

சஞ்சு சாம்சன் அதிரடியாக சிக்ஸர்களை பறக்கவிட்டார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 21 ரன்களில் ஆட்டமிழக்க, திலக் வர்மா களம் கண்டார். திலக் வர்மா அவரது பங்குக்கு அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

அதிரடியில் மிரட்டிய சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 50 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் சாம்சன் ஆட்டமிழந்தார். அதன் பின், களமிறங்கிய ஹார்திக் பாண்டியா 2 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ரிங்கு சிங் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்கா தரப்பில் ஜெரால்டு கோட்ஸீ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேசவ் மகாராஜ், பீட்டர், பாட்ரிக் க்ரூகர், மார்கோ யான்சென் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்