

ஆஷஸ் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் முழுமையாக விலகினார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. அடிலெய்டில் நடைபெறும் 3-வது போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.
அதேநேரத்தில், 2013 ஆம் ஆண்டுக்குப் பின் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் இதுவரை ஒரு போட்டியில்கூட இங்கிலாந்து அணி வெற்றியே பெற்றது கிடையாது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது போட்டி வருகிற டிச. 17 ஆம் தேதி அடிலெய்ட் திடலில் தொடங்கி 21 ஆம் நடைபெறவிருக்கிறது. இங்கிலாந்து அணி இந்தத் தொடரை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆஷஸ் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போட்டியான ஷெஃபீல்டு ஷீல்டு தொடரின் போது ஹேசில்வுட்டுக்கு காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் முதலிரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய நிலையில் தற்போது முழுமையாக விலகியுள்ளார். இதனை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் உறுதிபடுத்தினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஜோஷ் ஹேசில்வுட் காயத்தால் விலகியது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆஷஸ் தொடரில் இருந்து ஜோஷ் ஹேசில்வுட் முழுமையாக விலகியுள்ளார். இது ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் பின்னடைவாக அமைந்துள்ளது. அவர் இந்தியாவில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக உடற்தகுதியை மேம்படுத்த கவனம் செலுத்தவுள்ளார்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.