
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, ஜிம்பாப்வே 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது.
அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று (பிப்ரவரி 6) குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
260 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
அயர்லாந்து அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். அந்த அணி 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின், லோர்கான் டக்கர் 28 பந்துகளில் அதிரடியாக 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, ஆண்டி மெக்பிரின் மற்றும் மார்க் அடாய்ர் ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். மார்க் அடாய்ர் 91 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் அடங்கும். ஆண்டி மெக்பிரின் 132 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில், அயர்லாந்து 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஜிம்பாப்வே தரப்பில் முஸராபானி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நிகராவா 2 விக்கெட்டுகளையும், டிரெவர் குவாண்டு ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: ஃபீல்டிங்கில் சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்..!
ஜிம்பாப்வே - 166/5
அயர்லாந்து 260 ரன்களில் ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாம் நாள் உணவு இடைவேளையின்போது, அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது. கைட்டானோ மற்றும் வெஸ்லி மத்வீர் தலா 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். நிக் வெல்ச் 76 ரன்களுடனும், நியாஷா மயாவோ 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஜிம்பாப்வே அணி அயர்லாந்தைக் காட்டிலும் 94 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.