
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நேற்று (ஜூலை 30) தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் கிரைக் எர்வின் 39 ரன்களும், டஃபாட்ஸ்வா சிகா 30 ரன்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நாதன் ஸ்மித் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
டெவான் கான்வே, டேரில் மிட்செல் அரைசதம்
ஜிம்பாப்வே அணி 149 ரன்களில் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 41 ரன்கள் எடுத்தார். ஹென்றி நிக்கோல்ஸ் 34 ரன்கள் எடுத்தும், ரச்சின் ரவீந்திரா 2 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய டெவான் கான்வே அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 170 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும். அதன் பின் களமிறங்கிய வீரர்களில் சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் 119 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். நாதன் ஸ்மித் 22 ரன்களும், மிட்செல் சாண்ட்னர் 19 ரன்களும் எடுத்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில் பிளெஸ்ஸிங் முஸராபானி 3 விக்கெட்டுகளையும், தனாகா சிவங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சிக்கந்தர் ராஸா, நியாம்ஹுரி, சீன் வில்லியம்ஸ், வின்செண்ட் மசகேசா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
ஜிம்பாப்வே தடுமாற்றம்
முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்ததன் மூலம், நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவைக் காட்டிலும் 158 ரன்கள் முன்னிலை பெற்றது.
158 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் எடுத்துள்ளது. நிக் வெல்ச் 2 ரன்களுடனும், வின்செண்ட் மசகேசா 0 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
ஜிம்பாப்வே அணி நியூசிலாந்தைக் காட்டிலும் 127 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்த ஷுப்மன் கில்!
New Zealand were bowled out for 307 in the first innings of the first Test against Zimbabwe.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.