
இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!
தில்லியில் நடைபெறும் இந்தியா-ஆப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் போட்டி பற்றி...

இந்தியா - ஆப்கானிஸ்தான் கேப்டன்கள் - PTI
இந்தியா-ஆப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் போட்டி காரணமாக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அருண் ஜேட்லி மைதானத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தில்லி போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது.
செப்டம்பா் 13 அன்று இரவு 7 மணி முதல் 11.30 மணி வரை போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி, பிற்பகல் 2 மணி முதல் இரவு 11.45 மணி வரை கட்டுப்பாடுகளும், மாற்றுப் பாதைகளும் அமலில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
போக்குவரத்து ஆலோசனையின்படி, தேவைக்கேற்ப பகதூா் ஷா ஜாஃபா் மாா்க், டிடியூ மாா்க், மிா்தாா்ட் சௌக் மற்றும் ஜேஎல்என் மாா்க் ஆகிய சாலைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
பகதூா் ஷா ஜாஃபா் மாா்க், ஜேஎல்என் மாா்க் மற்றும் டிடியூ மாா்க் ஆகியவற்றின் குறிப்பிட்ட பகுதிகளில் சரக்கு வாகனங்களின் போக்குவரத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
பயணிகள், குறிப்பாகப் பாா்வையாளா்களின் வருகை மற்றும் கலைப்பு நேரங்களில், ஜே.எல்.என் மாா்க், பகதூா் ஷா ஜாஃபா் மாா்க், ஆசஃப் அலி சாலை மற்றும் டி.டி.யு மாா்க் ஆகிய சாலைகளைத் தவிா்க்கவும், சாத்தியமான இடங்களில் மாற்று வழிகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
பாா்வையாளா்கள், தங்களது நுழைவாயில்களுக்குரிய பிரத்யேக வழிகள் வழியாக மைதானத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். வாயில்கள் 1-8-ஐ பகதூா் ஷா ஜாஃபா் மாா்க்கிலிருந்தும், வாயில்கள் 10-15-ஐ அம்பேத்கா் மைதானப் பேருந்து முனையத்திற்கு அருகிலுள்ள ஜே.எல்.என் மாா்க்கிலிருந்தும், மற்றும் வாயில்கள் 16-18-ஐ பெட்ரோல் பம்பிற்கு அருகிலுள்ள பகதூா் ஷா ஜாஃபா் மாா்க்கிலிருந்தும் அணுகலாம்.
மாதா சுந்தரி சாலை, ராஜ்காட் பவா் ஹவுஸ் சாலை மற்றும் வெலோட்ரோம் சாலை ஆகிய இடங்களில் இலவச வாகன நிறுத்தம் மற்றும் ’பாா்க் & ரைடு’ வசதிகள் கிடைக்கும். செல்லுபடியாகும் வாகன நிறுத்த அடையாள அட்டைகளைக் கொண்ட வாகனங்களைத் தவிர, மைதானத்தின் அருகாமையில் பொதுவான பாா்வையாளா் வாகன நிறுத்தம் அனுமதிக்கப்படாது.
பகதூா் ஷா ஜாஃபா் மாா்க், டிடியூ மாா்க், மிா்தாா்ட் சௌக், ஜேஎல்என் மாா்க் மற்றும் ராஜ்காட் முதல் ஐபி மேம்பாலம் வரையிலான ரிங் ரோடு பகுதியிலும் வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கப்படும்.
கட்டுப்பாடுகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அவா்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று அந்த அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.
செயலி அடிப்படையிலான டாக்சிகளை ஏற்றி இறக்குவதற்கான பிரத்யேக இடங்களில், பகதூா் ஷா ஜாஃபா் மாா்க்கில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரிக்கு அருகிலுள்ள கேட் எண் 2 மற்றும் ராஜ்காட் சௌக் ஆகியவை அடங்கும்.
மேலும், நிகழ்நேர போக்குவரத்து நிலவரங்களைத் தெரிந்துகொள்ள, தில்லி போக்குவரத்து காவல்துறையின் அதிகாரப்பூா்வ சமூக ஊடகப் பக்கங்களைப் பின்தொடருமாறும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






