மகத்தான சிக்ஸர்களும் நடுவர்களுடனான தோனியின் வாக்குவாதமும்: பரபரப்பைக் கிளப்பிய கடைசி ஓவரின் விடியோ!
ஸ்டோக்ஸ் வீசிய 4-வது பந்துக்கு ஐபிஎல் வரலாற்றில் தனி இடம் உண்டு. அவர் அந்தப் பந்தை...


நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை. முதலில் ஆடிய ராஜஸ்தான் 151/7 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய சென்னை அணி 155/6 ரன்களை எடுத்து வென்றது. கடைசிப் பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்ஸர் அடித்து சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார் ஆல்ரவுண்டர் சாண்ட்னர்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளது சென்னை அணி. பாதி ஆட்டங்களை விளையாடியுள்ள நிலையில் ஏழு ஆட்டங்களில் ஆறில் வென்று 12 புள்ளிகள் பெற்றுள்ளதால் சென்னை அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற இன்னும் 4 புள்ளிகள் எடுத்தால் போதும். இதனால் சென்னை அணி பிளேஆஃப்-புக்குச் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
ஐபிஎல் வரலாற்றில் சர்ச்சைக்குரிய, பரப்பான கடைசி ஓவராக பென் ஸ்டோக்ஸ் வீசிய ஓவர் பார்க்கப்படுகிறது. அட்டகாசமான இரு சிக்ஸர்களும் நடுவர்களுடனான தோனியின் வாக்குவாதமும் மறக்கமுடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு அளித்துள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ் பந்துவீசினார். அப்போது சென்னை அணி வெற்றி பெற 18 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் தோனியும் ஜடேஜாவும் இருந்தார்கள்.
முதல் பந்தை தடுமாறிய நிலையில் சிக்ஸர் அடித்தார் ஜடேஜா. சிக்ஸர் அடித்தபோது நிலைகுலைந்து அவர் கீழே விழுந்தார். பந்துவீசிய ஸ்டோக்ஸும் கீழே விழ, பந்துவீச்சாளர், பேட்ஸ்மேன் என இருவரும் கீழே விழுந்து கிடக்க, பந்து சிக்ஸருக்குப் பறந்தது.
அடுத்தப் பந்தை நோ பாலாக வீசினார் ஸ்டோக்ஸ். அதில் ஒரு ரன் எடுத்தார் ஜடேஜா. இலவசமாக இரு ரன்களும் அடுத்ததாக ஃப்ரீஹிட் பந்து கிடைத்ததும் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமானார்கள்.
2-வது பந்தில் தோனி 2 ரன்கள் எடுத்தார். இரு பந்துகளில் சிஎஸ்கே 10 ரன்கள் எடுத்ததால் சென்னை ரசிகர்கள் ஆசுவாசமடைந்தார்கள். ஆனால் அடுத்தப் பந்தில் அபாயம் காத்திருந்தது.
ரஸ்ஸலுக்கு ரபாடா யார்க்கர் வீசி அவுட் ஆக்கியதுபோல தோனியை அற்புதமான யார்க்கரால் வீழ்த்தினார் ஸ்டோக்ஸ். 58 ரன்களுடன் வெளியேறினார் தோனி. இப்போது 3 பந்துகளில் 8 ரன்கள் தேவை...
ஸ்டோக்ஸ் வீசிய 4-வது பந்துக்கு ஐபிஎல் வரலாற்றில் தனி இடம் உண்டு. அவர் அந்தப் பந்தை நோபாலாக வீசியதாக சர்ச்சை எழுந்தது. ஸ்டோக்ஸ் வீசிய நான்காவது பந்தை கள நடுவர் நோ பால் என சைகையால் தெரிவித்தார். ஆனால் ஸ்கொயர் லெக் நடுவர் நோ பால் அல்ல என மறுத்தார். இதனால் நோ பால் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. எனினும் இதைக் கண்டு ஆவேசமான சென்னை கேப்டன் தோனி மைதானத்தின் உள்ளே சென்று நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். நோ பால் என அறிவித்தபிறகும் அதைத் திரும்பப் பெற்றது ஏன் என வாக்குவாதம் செய்தார். ஆனால் நடுவர்கள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தாதால் பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். இக்காட்சியை நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். எந்தச் சூழலிலும் நிதானமாக இருக்கும் தோனி, இதுபோல தன்னிஷ்டத்துக்கு ஆடுகளத்துக்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதம் செய்ததை கிரிக்கெட் நிபுணர்களும் முன்னாள் வீரர்களும் விமரிசனம் செய்துள்ளார்கள். இந்தப் பரபரப்பிலும் சென்னை அணி 2 ரன்களை எப்படியோ எடுத்துவிட்டது. 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை.
ஐந்தாவது பந்தில் 2 ரன்கள் எடுத்தார் சாண்ட்னர். இதனால் கடைசிப் பந்தில் 4 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்கிற நிலைமை சென்னை அணிக்கு உருவானது.
பதற்றத்தில் இருந்தார் ஸ்டோக்ஸ், அதை வைட் பாலாக வீசினார். இப்போது ஒரு பந்தில் 3 ரன்கள் தேவை.
சென்னை ரசிகர்களால் சில கடைசி ஓவர்களை மறக்கமுடியாது. அப்படியொரு ஓவரின் கடைசிப் பந்தில் லாங் ஆன் பக்கம் அட்டகாசமாக சிக்ஸர் அடித்தார் சாண்ட்னர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...