டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி விளையாடுகிறாரா?

வருண் சக்ரவர்த்திக்கு இந்திய அணி கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் எனத் தெரிகிறது.
டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி விளையாடுகிறாரா?

அக்‌ஷர் படேலை மாற்று வீரராக மாற்றியுள்ளது இந்திய அணி. இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. 

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. 

இந்திய அணியில் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் ஏற்கெனவே இருந்த அக்‌ஷர் படேல், மாற்று வீரர்களில் ஒருவராக இணைந்துள்ளார். ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணியில் விளையாடும் ஹார்திக் பாண்டியா ஒரு ஓவர் கூட வீசாததால் அவருடைய உடற்தகுதி குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. பாண்டியாவில் பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அணியின் மற்றொரு ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அணியில் ஏராளமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளதால் அக்‌ஷர் படேல் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் திடீர் மாற்றத்தால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன.

இந்திய அணியில் ஜடேஜாவைத் தவிர தற்போது மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள். அஸ்வின், வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹார்.

ஜடேஜா இந்திய அணியில் நிச்சயம் இடம்பெறுவார் என்பதால் இன்னொரு சுழற்பந்து வீச்சாளருக்கு மட்டும்தான் அணியில் இடமிருக்கும்.

ஐபிஎல் 2021 போட்டியில் அஸ்வின், வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹார் ஆகிய மூவரும் எப்படிப் பந்துவீசியுள்ளார்கள்?

வருண் சக்ரவர்த்தி - 16 ஆட்டங்கள், 18 விக்கெட்டுகள், எகானமி - 6.40
அஸ்வின் - 13 ஆட்டங்கள், 7 விக்கெட்டுகள், எகானமி - 7.41
ராகுல் சஹார் - 11 ஆட்டங்கள், 13 விக்கெட்டுகள், எகானமி - 7.39

கொல்கத்தா அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதற்கு முக்கியக் காரணம் - வருண் சக்ரவர்த்தி. அவருடைய பந்துவீச்சால் எதிரணி பேட்டர்கள் ரன் அடிக்க முடியாமல் திணறியிருக்கிறார்கள். மேலும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ள அஸ்வினும் ராகுல் சஹாரும் எதிர்பார்த்தபடி ஐபிஎல் 2021 போட்டியில் பந்துவீசவில்லை.

இந்தக் காரணங்களால் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் வருண் சக்ரவர்த்திக்கு இந்திய அணி கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் எனத் தெரிகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக மோதும் முதல் ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. உடற்தகுதி சிக்கல் எதுவும் இல்லாமல் இருந்தால் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் வருண் சக்ரவர்த்தியின் கனவு நிறைவேறும் என எதிர்பார்க்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com