ஐபிஎல் இறுதிச்சுற்று: சிஎஸ்கே அணியில் மாற்றம் இருக்குமா?

பொதுவாக சிஎஸ்கே அணியில் மாற்றம் செய்வதற்கு மிகவும் யோசிப்பார்கள்.
ஐபிஎல் இறுதிச்சுற்று: சிஎஸ்கே அணியில் மாற்றம் இருக்குமா?

நாளை (அக். 15) கொல்கத்தாவுக்கு எதிராக ஐபிஎல் 2021 போட்டியின் இறுதிச்சுற்றை விளையாடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

12 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 9 முறை ஐபிஎல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2010, 2011, 2018 ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றது. 

2012, 2014 என இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இருமுறையும் ஐபிஎல் கோப்பையை கேகேஆர் அணி வென்றுள்ளது. இருமுறையும் அந்த அணியின் கேப்டனாக இருந்தவர், கெளதம் கம்பீர். 2012-ல் சிஎஸ்கேவும் கொல்கத்தாவும் மோதியதில் கொல்கத்தா அணி கோப்பையைக் கைப்பற்றியது. 

துபையில் ஐபிஎல் 2021 இறுதிச்சுற்று நடைபெறுவதால் ஷார்ஜா ஆடுகளம் அளவுக்கு ரன்கள் குவிப்பதில் பேட்டர்களுக்குச் சிரமம் இருக்காது எனத் தெரிகிறது. இதனால் சிஎஸ்கே அணி பேட்டர்களுக்கு ஆடுகளம் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. 

சிஎஸ்கே அணியில் மாற்றம் இருக்குமா?

பொதுவாக சிஎஸ்கே அணியில் மாற்றம் செய்வதற்கு மிகவும் யோசிப்பார்கள். ஒரு வீரர் சரியாக ஆடாவிட்டாலும் அவருக்குப் பல வாய்ப்புகள் தரப்படும். எந்த வீரருக்காவது காயம் ஏற்பட்டால் மட்டுமே இன்னொரு வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும். 

சுரேஷ் ரெய்னாவுக்குப் பதிலாக அணிக்குள் நுழைந்த ராபின் உத்தப்பா, பிளேஆஃப் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சிஎஸ்கே ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். அதனால் இறுதிச்சுற்றிலும் உத்தப்பா விளையாடவுள்ளார். அதேபோல சமீபமாக மொயீன் அலி சிறப்பாக விளையாடாவிட்டாலும் அவருடைய பந்துவீச்சுத் திறமைக்காகவும் அவர் அணியில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். இந்த வருடம் மொயீன் அலியின் பேட்டிங் தான் சிஎஸ்கேவுக்குத் திருப்புமுனையாக அமைந்ததால் அவருடைய இடத்துக்கு ஆபத்தில்லை. அதேபோல ராயுடுவும் அணியில் தொடரவுள்ளார். இறுதிச்சுற்று என்பதால் இதுவரை அணியில் இடம்பெற்ற ஹேசில்வுட், பிராவோ, ஷர்துல் தாக்குர், தீபக் சஹார் ஆகியோர் கூட்டணியும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐபிஎல் 2021: அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே வீரர்கள்

ருதுராஜ் - 603 ரன்கள் 
டு பிளெஸ்சிஸ் - 547 ரன்கள்
மொயீன் அலி - 320 ரன்கள்
ராயுடு - 257 ரன்கள்
ஜடேஜா - 227 ரன்கள்

ஐபிஎல் 2021: அதிக விக்கெட்டுகள் எடுத்த சிஎஸ்கே வீரர்கள்

ஷர்துல் - 18 விக்கெட்டுகள்
பிராவோ - 13 விக்கெட்டுகள்
தீபக் சஹார் - 13 விக்கெட்டுகள்
ஜடேஜா - 11 விக்கெட்டுகள்
ஹேசில்வுட் - 9 விக்கெட்டுகள் 

சிஎஸ்கே அணி 4-வது ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். தோனியின் நம்பிக்கையைப் பெற்ற சிஎஸ்கே அணி ரசிகர்களின் கனவை நிறைவேற்றுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com