ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

வார்னர் சதத்தால் நல்ல நிலையில் ஆஸ்திரேலிய அணி! ஸ்மித் அரை சதம்!

இங்கிலாந்துக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் சதமெடுத்து அசத்தியுள்ளார்...

News image
Updated On :26 டிசம்பர் 2017, 10:13 am

எழில்

இங்கிலாந்துக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் சதமெடுத்து அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது போட்டி இன்று மெர்ல்பர்னில் தொடங்கியுள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3 வெற்றிகளை பதிவு செய்து ஏற்கெனவே தொடரை கைப்பற்றிவிட்டது ஆஸ்திரேலிய அணி. எனவே, இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் களம் காணும் ஆஸ்திரேலியா. மறுபுறம், ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து விளையாடுகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டுக்கு வார்னரும் பேன்கிராஃப்டும் 100 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளத்தை அமைத்தார்கள். 64 பந்துகளில் அரை சதமெடுத்தார் வார்னர். உணவு இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 102 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. 

அணியின் ஸ்கோர் 122-ல் இருந்தபோது நிதானமாக ஆடிவந்த பேன்கிராஃப்ட் 95 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வோக்ஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதன்பிறகு சதத்தை நெருங்கியபோது 99 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த வார்னர் எதிர்பாராதவிதமாக டாம் கியூரன் பந்துவீச்சில் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 1 ரன்னில் சதத்தைத் தவறியதால் மிகவும் சோகமாக களத்தை விட்டு வார்னர் வெளியேறத் தயாராக இருந்தபோது கியூரன் நோ பால் வீசியதாக நடுவர் அறிவித்தார். இதனால் பெரிய கண்டத்திலிருந்து தப்பினார் வார்னர்.  அடுத்தப் பந்திலேயே ஒரு ரன் எடுத்து சதத்தைப் பூர்த்தி செய்தார் வார்னர். இது அவருடைய 21-வது டெஸ்ட் சதமாகும். ஆனால் அதிக ரன்கள் சேர்க்கமுடியாமல் 103 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் வீழ்ந்தார் வார்னர். அடுத்தப் பத்தாவது ஓவரில் கவாஜாவை 17 ரன்களில் வெளியேற்றினார் பிராட். இதனால் 38 ரன்கள் இடைவெளிக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தது இங்கிலாந்து. 

அதன்பிறகு இக்கட்டான நிலைமையை கேப்டன் ஸ்மித்தும் ஷான் மார்ஷும் திறமையாகச் சமாளித்தார்கள். இருவருமே வேகமாக ரன் குவிக்க பிரியப்படாமல் கவனமாக விளையாடி நிதானமாக ரன்கள் சேர்த்தார்கள். இதனால் நாளின் கடைசிவரை விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். எனினும் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணியால் கடைசி இரு பகுதிகளில் 141 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. 

4-வது டெஸ்டின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி, 89 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 65 ரன்கள், ஷான் மார்ஷ் 31 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

மிகவும் சம்பிரதாயமான பாக்ஸிங் டே நாளான இன்று மெர்ல்பர்ன் மைதானத்துக்கு 88,172 ரசிகர்கள் வருகை தந்துள்ளார்கள். மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பதிவாகியுள்ள நான்காவது பெரிய ரசிகர் கூட்டம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.