ஆசிய கண்டத்தின் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசியப் போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங்கில் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 2 அன்று நிறைவடைகிறது. கடந்த 1962-க்கு பின் ஜகார்த்தாவில் இரண்டாவது முறையாக போட்டி நடக்கிறது. மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2 நகரங்களில் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலில் உறுப்பினர்களாக இருக்கும் 45 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஹாக்கி, பாட்மிண்டன், டென்னிஸ் என 37 விளையாட்டுகளில் 540 பேர் பங்கேற்கின்றனர்.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் டென்னிஸ் அணிகள் பட்டியலை அகில இந்திய டென்னிஸ் சம்மேளனம் சமீபத்தில் அறிவித்தது.
ஆசியப் போட்டிகளில் 2 தங்கம் வென்றுள்ள லியாண்டர் பயஸ் இடம் பெற்றுள்ளார். மற்றொரு வீரரான யுகி பாம்ப்ரி அமெரிக்க ஓபன் போட்டியில் பங்கேற்பதற்காக விலக்கு பெற்றுள்ளார். ஒற்றையர் ஆடவர் பிரிவில் ராம்குமார் ராமநாதன், பிரஜ்னேஷ் குணேஸ்வரன், சுமித் நகால், இரட்டையர் பிரிவில் பயஸ், ரோஹன் போபண்ணா, விஜ் சரண் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் அங்கிதா ரெய்னா, கர்மன் கெளர் தண்டி, ருட்டுஜா போஸ்லே, பிரஞ்சாலா, ரியா பாட்டியா, பிரார்த்தனா தோம்பரே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அணியின் பயிற்சியாளர்களாக (ஆடவர்) ஜீஷன் அலியும், (மகளிர்) அங்கிதா பாம்ப்ரியும் செயல்படுவர். யுகி பாம்ப்ரி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளதால் அவருக்கு விலக்கு தரப்பட்டுள்ளது. லியாண்டர் பயஸ் ஆசியப் போட்டிகளில் 8 முறை பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரட்டையர் பிரிவில் ராம்குமார் ராமநாதனுடன், மூத்த வீரர் லியாண்டர் பயஸ் இணைந்து விளையாட வாய்ப்புள்ளது என அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளராகச் செயல்படும் ஜீஷன் அலி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய வீரர் லியாண்டர் பயஸ் எங்குள்ளார் என்பது தனக்குத் தெரியாது என ஜீஷன் அலி கூறியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி அவர் கூறியதாவது:
லியாண்டர் பயஸ் எப்போது இங்கு வருவார் என்பது தெரியாது. அவர்தான் இதைத் தெரிவிக்கவேண்டும். நான் கடைசியாக அவரிடம் பேசியபோது, தான் சின்சின்னாட்டியில் விளையாடுவதாகவும் அதன்பிறகு பாலேம்பங்குக்கு வருவதாகவும் கூறினார். ஆனால் அவர் அங்கும் விளையாடவில்லை என்பது தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.